Published:Updated:

மத்தியஸ்தம் செய்யப் போனவர்கள் மடிகிறார்கள்!

'மாவோயிஸ்ட்' விவகாரம் பேசும் கவிதா ஸ்ரீவஸ்தவா

##~##

விதா ஸ்ரீவஸ்தவா. மனித உரிமைக்காகப் போராடும் பி.யூ.சி.எல். அமைப்பின் தேசியச் செயலாளர். முஸ்லிம் உட்பட பல்வேறு சிறுபான்மை இனத்தவருக்காகவும் ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்தவர். மாவோயிஸ்ட் பகுதிகளில் பழங்குடி மக்களுக் காகப் போராடியதால், அரசின் கண்களுக்கு உறுத்தலாகத் தெரிபவர். சென்னையில் நடந்த பி.யூ.சி.எல். மாநில மாநாட்டுக்கு வந்திருந்த அவரைச் சந்தித்தோம். 

''மாவோயிஸ்ட்டுகள் கடத்திக் கொண்டுபோன ஐந்து போலீஸாரை மீட்டு வந்த குழுவில் முக்கியப் பங்கு வகித்தவர் நீங்கள். அந்த அனுபவத்தைச் சொல்லுங் களேன்?'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''போலீஸாரை விடுவிக்க சில கோரிக்கைகளை முன்வைத்தார்கள் மாவோயிஸ்ட்டுகள். அதில் ஒன்று,

மத்தியஸ்தம் செய்யப் போனவர்கள் மடிகிறார்கள்!

பத்திரிகையாளர்களோ அல்லது மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களோதான் தங்கள் இடத்துக்குப் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்பது. முன்பு, இரண்டு காவலர்களை மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றபோது, உள்ளூர் பத்திரிகையாளர்கள் அவர்களை மீட்டு வந்தார்கள். ஆனால், அந்தப் பத்திரிகையாளர்களை போலீஸார் தாக்கினார்கள். அதனால், 'நாங்கள் யாரும் வர மாட்டோம்’ என்று பத்திரிகையாளர்கள் சொல்லி விட்டார்கள். அதற்குப் பிறகுதான், நாங்கள் சென்றோம். தாங்கள் கடத்திய போலீஸாரை எந்தவிதத்திலும் அவர்கள் காயப்படுத்தவில்லை என்பதுதான் இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம்!''

''இப்போது இரண்டு இத்தாலியர்களையும், பிஜு ஜனதா தளக் கட்சி எம்.எல்.ஏ-வையும் கடத்திச் சென்றுள்ளார்களே... இத்தகைய ஆள்கடத்தல் ஏற்கக்கூடியதா?''

''தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத போது மக்கள் வேறு பாதையைத்தான் தேர்வு செய்வார்கள். அப்படி அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள்தான் என்ன...? சுரங்கம் தோண் டுதல், வனத்தைச் சுரண்டுதல், 'பசுமை வேட்டை’ போன்றவற்றை நிறுத்துதல், அரசு பிடித்து வைத் திருக்கும் நிரபராதிகளான தங்கள் மக்களை விடு தலை செய்யக் கோருதல் போன்றவைதானே? இதில் என்ன குற்றம் இருக்கிறது? எனினும், மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த நாங்கள், ஆள் கடத்தலை ஆதரிப்பது இல்லை!''

''பழங்குடியினருக்காக உழைக்கின்ற பினாயக் சென், ஹிமான்ஷ§ தக்கர், கோப குஞ்சம், சோனி சோரி போன்ற வர்கள் தாக்கப்படுவது எதை உணர்த்துகிறது?''

''இந்திய அரசு என்று சொல்வதைவிட யூனியன் இந்தியா என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஆரம்பத்தில் இருந்தே, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாவோயிஸ்ட்டுகள் தயா ராகவே இருந்தார்கள். மாவோயிஸ்ட் தலைவர்களில் முக்கியமானவராக இருந்த ஆசாத், அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், அவரைக் கொன்றது உள்துறை அமைச் சகம். அதன் மூலம் நாட்டு மக்களுக்கு அரசு சொல்கின்ற செய்தி... மத்தியஸ்தம் செய்ய வந்தால் நீங்களும் மடிந்துபோக வேண்டும் என்பதைத்தான்!''

''போராட்டக்காரர் சோனி சோரியை நீங்கள் மறைத்து வைத்து இருக்கிறீர்கள் என்று, போலீஸ் உங்கள் வீட்டுக்கு ரெய்டு வந்ததே?''

''பழங்குடியினருக்காகப் போராடிய அந்தப் பெண்ணை போலீஸார் எப்படி எல்லாம் சித்திரவதை செய்து இருக்கிறார்கள்? அவளது உறுப்புகளின் உள்ளே கற்களைத் திணித்து, அடித்து உதைத்து அப்பப்பா... அவளுக்கு ஆதரவாக நாங்கள் போராடியபோது போலீஸ் என் வீட்டுக்கும் வந்தது. ஏதோ நான் அவளை என் வீட்டில் பூட்டி வைத்து இருப்பதாக நினைத்துக்கொண்டார்கள். அப்படி எதுவும் இல்லாததால் திரும்பிச் சென்றார்கள்!''

''இந்தியாவில் இன்று இஸ்லாமியராக இருப்பதன் பொருள் என்ன?''

''வேறு என்ன? தீவிரவாதியாக அடையாளம் காணப்படுவதுதான்!''

''அறிக்கைகள் சமர்ப்பிப்பதைத் தவிர, பி.யூ.சி.எல். போன்ற மனித உரிமை அமைப்புகளால் என்ன சாதிக்க முடியும்? அதுவும், இத்தகைய அமைப்புகள் எல்லாம் வெளிநாட்டு நிதி பெறும் தொண்டு நிறுவனங்களாக அரசால் இனம் காணப்படும்போது..?''

''அந்தப் பார்வை தவறு. மனித உரிமை அமைப்புகள் எந்தக் காலத்திலும் அவசியம். அறிக்கை சமர்ப்பிப்பது என்பது முதல் கட்டம்தான். அதுவே முடிவு அல்ல. அதில் இருந்துதான் மேற்கொண்டு நாம் நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்!''

''இலங்கைக்கு எதிராக அமெரிக்கத் தீர்மானத்துக்கு இந்தியா இறுதி நேரத்தில்தான் ஆதரவு அளித்தது. அதை எப்படிக் கருதுகிறீர்கள்?''

''இறுதி நேரத்தில் ஆதரவு அளித்தது மட் டும் இல்லாமல், அதற்குப் பிறகு, ராஜபக் ஷேவுக்குக் கடிதம் வேறு எழுதியிருக்கிறார் மன்மோகன் சிங். இதைவிட வெட்கக்கேடான விஷயம் எதுவும் இல்லை!''

''உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராகப் போராடி வருகிறீர்கள். அந்தச் சட்டம் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாகப் பார்க்கிறீர்களா அல்லது மக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கிறதா?''

''அந்தச் சட்ட வரைவில் உணவுப் பாதுகாப்பு என்பது தானியங்களையும் உணவையும் பங்கீடு செய்வது என்பதோடு நின்று விடுகிறது. இனி, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!''

_ கறாராகப் பதில் சொல்லிக் கிளம்புகிறார் கவிதா!

- ந.வினோத்குமார்