Published:Updated:

`பெண் கேட்டு வந்தான்; தரவில்லை!' - கேரள சிறுமிக்கு வால்பாறையில் நேர்ந்த துயரம்

Representation Image
Representation Image

கேரள பள்ளி மாணவி கடத்தப்பட்டு, வால்பாறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

`ரொம்ப தைரியமான பொண்ணு, அவனுக்குப் பயந்துதான் தினமும் என் மகளை நானே ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய் விட்டு வந்தேன்.. ஆனா’ மகளை சடலமாகக் கண்ட அந்தத் தந்தையின் குரல் கம்மியது. கொச்சியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்த செவ்வாய் அன்று மாயமானார். காலையில் பள்ளியில் விட்டுச் சென்ற தந்தைக்கு மாலை மகள் இல்லாதது அதிர்ச்சியைக் கொடுத்தது. அதே பகுதியைச் சேர்ந்த சாஃபர் மீது தான் அந்தக் குடும்பத்தினருக்கு சந்தேகம் இருந்தது.

Representational Image
Representational Image

ஒரே பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் சாஃபருடன் அந்தச் சிறுமி நட்புடன் பழகியுள்ளார். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி அந்தச் சிறுமியிடம் அத்துமீற முயன்றுள்ளார். காதலிப்பதாகக் கூறி தொந்தரவு செய்துள்ளார். இதை தன் தந்தையிடம் கூறியுள்ளார். இதற்கிடையில், சாஃபர் சிறுமியைப் பெண் கேட்டு வந்தபோது தர மறுத்துவிட்டனர். இதையடுத்து, மாணவிக்கு சாஃப்ரிடம் இருந்து சில மிரட்டல்களும் வந்திருந்தது. இந்த நிலையில்தான் மாணவி மாயமாகியிருந்தார். மகள் காணாமல் போனது குறித்து அவரது தந்தை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். சாஃபர் குறித்தும் காவலர்களிடம் தகவல் கூறினார்.

கார்களை சர்வீஸ் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் சாஃபரை தேடி போலீஸார் சென்றனர். அங்கிருந்த ஒரு காருடன் சாஃபர் மாயமாகியிருந்தது காவலர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. மாணவி மாயமான தகவல் குறித்து அனைத்து காவல்நிலையத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. அப்போது அதிரப்பள்ளி பகுதியில் ஓர் இளைஞர் இளம்பெண்ணுடன் சென்றது குறித்த தகவல் தெரியவந்தது. சாஃபர் புகைப்படமும் அதிரப்பள்ளி செக்போஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டது. சாஃபர்தான் என்பது உறுதியானது.

 வால்பாறை
வால்பாறை

இதையடுத்து, வால்பாறை செக்போஸ்ட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழக காவல்துறையினரை அலர்ட் செய்தனர் கேரள போலீஸார். அதிரப்பள்ளி டு வால்பாறை சாலை தமிழக - கேரள வனப்பகுதியில் அமைந்துள்ளது. சாலையில் பயணிக்கும் நபர்கள் குறித்த விவரங்களை செக்போஸ்ட்டில் இருக்கும் போலீஸார் கேட்டறிவர். வனப்பகுதியில் இருக்கும் விலங்குகளை தொந்தரவு செய்யக் கூடாது; தேவையில்லாமல் வாகனத்தை நிறுத்தக் கூடாது. குறிப்பிட்ட நேரத்தில் வாகனம் அடுத்த செக்போஸ்ட்டை அடைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி அனுப்புவார்கள்.

வால்பாறை செக்போஸ்ட்டுக்கு சாஃபரின் கார் வந்ததும் போலீஸார் நிறுத்தினர். வழக்கமான சோதனை என்பதால் சாஃபரும் பதற்றமடையவில்லை. ஆனால், மாணவி அப்போது உடன் இல்லை. காரில் இருந்த முன்பக்க இருக்கை மடக்கப்பட்டிருந்தது. காரின் இருக்கைகளில் ரத்தக் கறை இருந்ததையடுத்து சாஃபரிடம் விசாரணையைத் தொடங்கினர் தமிழக காவல்துறை. காரில் இருந்த பெண் குறித்து கேட்டதும் சாஃபர் முகம் மாறியது.

வால்பாறை
வால்பாறை

தன் தோழி தன்னுடன் வந்ததாகவும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவரை ஆத்திரத்தில் கொலை செய்து உடலைத் தூக்கி தேயிலைத் தோட்டத்தில் வீசியதாக காவலர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரைப் பிடித்து வைத்த காவலர்கள் கேரள காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சாஃபரை கேரள போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர் கூறிய இடத்தில் இருமாநில காவல்துறையினர் மாணவியின் உடலைத் தேடினர். தேயிலைத் தோட்டப்பகுதியில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மாணவியைக் கொலை செய்யும் நோக்கத்தில்தான் சாஃபர் காரைத் திருடியுள்ளார். கத்தியையும் தன்னுடன் தயாராக எடுத்து வந்துள்ளார். மாணவியைக் கொலை செய்து சடலத்தை வால்பாறை பகுதியில் வீசிவிட்டு பொள்ளாச்சி சென்று தலைமறைவாகி விடலாம் என்ற திட்டத்துடன் வந்ததாக தமிழக காவல்துறையினர் கூறுகின்றனர். மாணவி சடலமாக மீட்கப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. மாணவி படிப்பில் கெட்டிக்காரர் மிகவும் தைரியமானவர் எனக் கூறுகின்றனர். சாஃபரிடம் இருந்து மிரட்டல்கள் வந்தபோதும் தன்னுடைய படிப்பை நிறுத்தாமல் தொடர்ந்து வந்துள்ளார்.

Representational Image
Representational Image

மாணவியின் தந்தை பேசும்போது, ``என் மகளின் புகைப்படத்தை தவறாக சித்திரித்து மிரட்டியுள்ளான். இதுகுறித்து என் மகள் என்னிடம் கூறினாள். நான் சென்று கேட்டபோது இனி இப்படி நடக்காது என்றான். ஆனால், அவனால் என் மகள் வாழ்க்கை இப்படியாகும் என நினைக்கவில்லை. ரொம்ப தைரியமான பொண்ணு, அவனுக்குப் பயந்துதான் தினமும் என் மகளை நானே ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போய் விட்டு வந்தேன்” என உடைந்த குரலுடன் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு