Published:Updated:

இன்னும் மூன்று சுற்றுகளில் முடித்துவிடலாம்!

பாதியில் வெடித்த சினிமா போராட்டம்

##~##

ம்பள விவகாரத்தில் தொடங்கிய ஃபெப்ஸி விவகாரம், இப்போது ஈகோ இடியாப்பத்தில் சிக்கி, பெரும் போராட்டமாக வெடித்து விட்டது. 

சினிமாத் தயாரிப்பாளர்களுக்கு எதிராக, ஏப்ரல் 7-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை பிரகடனம் செய்திருக்கிறது ஃபெப்ஸி அமைப்பு. இந்த அறிவிப்பு வெளியானதும் ஒன்று கூடி ஆலோசனை செய்தார்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள். அதன்பிறகு, நம்மிடம் பேசிய தமிழ்த் திரைப்பட தயா ரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், ''ஃபெப்ஸி அமைப்புத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் ஸ்ட்ரைக் செய்வார்கள். அதேநேரம் வேறு மாநிலப் படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, பணம் பார்த்து விடுவார்கள். தமிழ்ப் படத்தைத் தயாரிப்பவர்களின் படம் பாதியில் நின்றால், அந்தத் தயாரிப்பாளரின் கதி என்ன ஆகும்? அதனால், எங்களுக்குத் தொழில் பாதுகாப்பு வேண்டும். தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே பணி செய்யக்கூடிய தனித்தொழிலாளர் அமைப்பை உருவாக்க வேண்டும். அந்த அமைப்புடன் இணைந்து தான் படத் தயாரிப்பில் இறங்குவோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஃபெப்ஸி தொழிலாளர்கள் எங்களுக்கு எந்த விதத்திலும் விரோதி அல்ல. ஒருசிலர் அந்த அப்பாவித் தொழிலாளர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். ஃபெப்ஸி ஸ்ட்ரைக் அறிவித்துள்ள அதே ஏப்ரல் 7-ம் தேதி அன்று புதிய தொழிலாளர்கள் ஒத்துழைப்புடன் நாங்கள் படப்பிடிப்பை நடத்துவோம்'' என்று உறுதியுடன் சொன்னார்.

இன்னும் மூன்று சுற்றுகளில் முடித்துவிடலாம்!

''உண்மையில் என்னதான் நடக்கிறது? நீங்கள்தான் ஃபெப்ஸி தொழிலாளர்களைத் தூண்டி விடுவதாக ஒரு கருத்து உலவுகிறதே..?'' என்று, பெப்ஸி ஊதியக் குழுத்தலைவர் அமீரிடம் கேட்டோம்.

''கடந்த எட்டு மாதங்களாகவே ஃபெப்ஸி அமைப்பு சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்காகப் போராடி வருகிறது. எளிதில் முடிய வேண்டிய நிலையில், தயாரிப்பாளர்கள் தரப்புக்கும் பெப்ஸிக்கும் ஈகோ வந்து விட்டது. நிலைமை சிக்கலாவதை நன்கு உணர்ந்துகொண்ட அரசு, லேபர் கமிஷனர் முன்னிலையில் இரண்டு சங்கத்தினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் 15 அமைப்புகளுக்கான சம்பளப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. மீதி அமைப்புகளுக்கும் பேச்சு வார்த்தை முடியப்போகும் நிலையில்தான் மீண்டும் பிரச்னையை உருவாக்கி விட்டார்கள்.

இது, தொழிலாளியின் வாழ்வாதாரப் போராட் டம். லேபர் கமிஷன் என்பது கோர்ட் மாதிரி. ஆனால் அங்கே, 'எங்களை எந்தச் சட்டமும் கட்டுப் படுத்தாது...’ என்று எழுதிக்கொடுத்த தயாரிப்பாளரின் கடிதம் கமிஷனர் கையில் இருக்கிறது. 'ஃபெப்ஸி தொழிலாளர்கள் கொத்தடிமைகள்...’ என்று இன் னொரு தயாரிப்பாளர் பேசுகிறார். இப்படிப் பேசி னால், இந்த விவகாரத்தில் தீர்வு காணவேண்டும் என்று இத்தனை நாட்களாகப் போராடிய லேபர் கமிஷனுக்கு என்னதான் மரியாதை?

'ஃபெப்ஸி தொழிலாளர்கள், தமிழ்ப் படத்துக்கு ஸ்ட்ரைக் பண்ணிட்டு தெலுங்கு, இந்திப் படங்களுக்கு வேலை செய்யப் போயிடறாங்க’னு சொல்றாங்க. நாங்க தமிழ்ப் படங்களின் தயாரிப்பை எதிர்த்துத்தான் ஸ்ட்ரைக் பண்றோம். அதுக்காக, ஆ.பி.சௌத்ரி தெலுங்குப் படம் தயாரிக்கக் கூடாதுன்னு ஆந்திரா போய்ப் போராட முடியுமா? ஏவி.எம்.சரவணன் இந்திப் படம் தயாரிச்சா, மும்பையில் போய் ஸ்ட்ரைக் பண்ண முடியுமா? ஒரு தொழிற்சங்கத்தில் பிரச்னை இருக்கும்போது, சட்டப்படி புதிதாக ஒரு சங்கத்தை உருவாக்க முடியாது என்ற விஷயம்கூட அவர்களுக்குத் தெரியவில்லை. உண்மை நிலை தெரியாத தயாரிப்பாளர் சங்கத்தில் நானும் ஓட்டுப் போட்டதுக்காக, உறுப்பினராக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்.

சங்கத்தில் என்னைவிட வயதில் மூத்த தயாரிப்பாளர்கள் எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் நான் சொல்கிறேன். டைரக்ஷன்தான் என்னோட டார்கெட்... அதுக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன். தயவுசெய்து என்னை ஃபெப்ஸி தலை வராக்கி, இங்கேயே உட்காரவெச்சுடாதீங்க...'' என்று கொந்தளித்தார்.

இரண்டு தரப்பிடமும் பல தடவை பேச்சு வார்த்தை நடத்திய தொழிலாளர் நல ஆணைய அதிகாரிகளிடம் பேசினோம். ''ஃபெப்ஸி தொழி லாளர் பிரச்னையைத் தீர்த்து வையுங்கள் என்று, முதலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்துதான் எங்களைத் தேடி வந்தார்கள். இரண்டு தரப்பினரும் விதித்த நிபந்தனைகளையும் பொறுமையாக உட்கார்ந்து பேசினோம். ஃபெப்ஸியில் 17 அமைப்புகளுக்கான சம்பளப் பிரச்னையை பேசி முடித்து விட்டோம். திடீர் என்று அமீர், ஞானவேல் விவகாரம் தலை தூக்கியதும், பிரச்னை வேறுவிதமாகப் போய் விட்டது. 'நீ பெரிய ஆளா... நான் பெரிய ஆளா’ என்று இரண்டு பக்கமும் ஈகோ கிளம்பி விட்டது. இரண்டு தரப் பினரும் ஈகோவைத் தூக்கி எறிந்துவிட்டு, இன்னும் மூன்று சுற்றுப் பேச்சு வார்த்தைக்கு வந்தால் சுமுகமாகப் பிரச்னையைத் தீர்த்து விடலாம். தயா ரிப்பாளர் சங்கத்தினர் விரும்பும்படி, திடீரென தனியாக தொழிற் சங்கம் ஆரம்பிக்க முடியாது, அதற்கு சட்டத்தில் இடமும் இல்லை. இப்போதைய நிலைமையை அரசுக்குச் சொல்லி விட்டோம்'' என்று வருத்தப்பட்டார்கள்.

ஃபெப்ஸி அமைப்பில் இருக்கும் யூனியன்களில் உறுப்பினராகச் சேருவதற்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் நுழைவுக்கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. உறுப்பினர் ஆவதற்கு பலரது சிபாரிசும் வேண்டியுள்ளது. அதனால், கட்டணம் செலுத்த முடியாமல், உறுப்பினராக இல்லாமல் பணியாற்றி வரும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, புதிய அமைப்பு உருவாக்கத் தயாரிப்பாளர்கள் திட்டம் தீட்டி வருகிறார்கள். இதை முறியடிக்கும் முயற்சியில் ஃபெப்ஸியும் தீவிரமாகக் களம் இறங்கி இருக்கிறது.

திரையில் போட்டியும் போராட்டமும் இருந்தால் ரசிக்கலாம்... அதுவே நிஜமாக நடந்தால்?

- எம். குணா