Published:Updated:

காவிரி 'நாடகம்' ஆரம்பம்!

தொடங்கிய தமிழகம்..டென்ஷன் கர்நாடகம்

##~##

யார் ஆட்சியில் இருந்தாலும் பரவாயில்லை, கோடைக் காலம் வந்துவிட்டாலே 'காவிரி ராமா யணம்’ அரங்கேறத் தொடங்கிவிடும். தமிழகமும் கர்நாடகமும் முட்டிக்கொள்ளும். இதோ, இந்த ஆண்டும் சிக்கல் ஆரம்பம்! 

காட்சி 1:  மார்ச் 21-ம் தேதி. தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால‌ மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.  'காவிரி நடுவர் நீதிமன்றம் 1999-ல் வழங்கிய தீர்ப்பின்படி, கர்நாடக அரசு முறையாக 405 டி.எம்.சி. மற்றும் கோடைக் காலத்தில் 192 டி.எம்.சி. நீரை வழங்குவது இல்லை. இதனால், காவிரி பாசனப் பகுதியில் கோடையில் சம்பா சாகுபடி செய்ய முடியாமல், தமிழக விவசாயிகள் வாடுகின்றனர். எனவே, உச்ச நீதிமன்றம் தலையிட்டு, காவிரி நடுவர் நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை உறுதி செய்ய ‌வேண்டும். அதே போன்று, கர்நாடகத்தில் இருக்கும் கிருஷ்ணசாகர், கபிணி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் உள்ள நீரை, கோடைக் காலத்தில் (பிப்ரவரியில் இருந்து மே மாதம் வரை) கர்நாடகா பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரி இருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காவிரி 'நாடகம்' ஆரம்பம்!

காட்சி 2:  எடியூரப்பாவின் அரசியல் கலாட் டாக்களில் ஆட்டம் கண்டிருந்த முதல்வர் சதானந்த கவுடாவுக்கு, 'ஆஹா.. லட்டு’ மேட்ட ராகக் கை கொடுத்தது காவிரி. கடந்த 26-ம் தேதி சட்டசபை கூடியவுடன், 'காவிரி நீரை வைத்து தமிழ்நாடு அரசு அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது. காவிரி நீர்ப் பங்கீட்டில் நடுவர் நீதிமன்றத்‌ தீர்ப்பின்படி இன்று வரை தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கோடைக் காலத்தில் கர்நாடகா அதிகமான தண்ணீரைப் பயன்படுத்தவில்லை. எங்கள் மாநில விவசாயிகளுக்குத் துரோகம் இழைத்துவிட்டு, தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது’ என்று அழுத்தமாக ஆரம்பித்து வைத்தார்.

உடனே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா, 'காவிரிப் பிரச்னையைக் கிளப்பி விடுவதே ஜெயலலிதாவுக்கு வாடிக்கையாகி விட்டது. ஒவ்வொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதும், காவிரிப் பிரச்னையைக் கிளப்பி விடுகிறார். தமிழ்நாடு எப்போதும் சட்டத்தை மதித்ததே இல்லை. எனவே தமிழ்நாட்டுக்கு சட்டப்பூர்வமாகவும் பதில் சொல்ல வேண்டும், வேறு வழியாகவும் பதில் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீரைக்கூட தர மாட்டோம்’ என்று படு சூடாக தொடை தட்டினார்.

காட்சி 3: காவிரிப் பிரச்னைக்காகவே காத்துக்கிடக்கும் கன்னட சலுவாளி அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ், பெங்களூரு கெம்பே கவுடா பேருந்து நிலையத்தில், தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி கோதாவில் குதித்தே விட்டார். போராட்டத்தில் ஜெயலலிதாவின் உருவப் படத்தையும் தீயிட்டுக் கொளுத்தினார்.

'காவிரிப் பிரச்னையில் தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்திய அரசுக்கே தண்ணீர் காட்டுகிறது. எங்களுடைய விவசாயிகளே குடிநீருக்காக அல்லாடும்போதும், நல்ல பிள்ளையாக தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்து விடுகிறோம். கர்நாடகாவில் பிறந்த ஜெயலலிதா, எப்போது ஆட்சிக்கு வந்தாலும் கர்நாடகாவை சீண்டிப் பார்ப்பதையே வேலையாக வைத்திருக்கிறார். இனியும் தமிழ்நாடு எங்களை சீண்டினால்...’ என்று கொக்கரித்தார்.

காட்சி 4: கர்நாடகாவின் அதிரடிக்கு ஈடு கொடுக்கும் வகையில் தமிழக முதல்வரும், கடந்த 30-ம் தேதி சட்டசபைக் கூட்டத் தொடரில், 'காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, அணைகளில் இருந்து கோடைக் காலத்தில் 103 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே கர்நாடகா பயன்படுத்த வேண்டும். ஆனால், 203 டி.எம்.சி. தண்ணீர் பயன்படுத்துகிறார்கள்.

இதனால், தமிழகத்தில் ஜூன், ஜூலையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் போகிறது. எனவே, தமிழக விவசாயிகளின் நலனையும் பாதுகாப்பையும், தமிழக அரசு என்றைக்கும் விட்டுத்தராது. காவிரியில் மேக்தாட் என்ற இடத்தில் புதுஅணை கட்டவும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்று அழுத்தமாகக் கூறினார்.

இதனால், டென்ஷனாகிப் போன கர்நாடகக் கட்சி எம்.பி-க்கள் ஒன்று சேர்ந்து கடைசி மூன்று நாட்களும் நாடாளுமன்றத்தை முடக்கி விட்டார்கள். வழக்கமாக இந்த விவகாரத்தை கர்நாடகாதான் தொடங்கி வைக்கும். இதில், தமிழகம் முந்திக்கொண்டதால், கர்நாடகா ஆவேசமாக அடுத்த கட்ட நடவடிக்கைக்காக ஒன்று சேர்ந்துள்ளது. இவர்களின் அரசியல் விளையாட்டு காரணமாக, எல்லையோர மக்கள் மீண்டும் பதட்டத்தில் இருக்கிறார்கள்.

- இரா.வினோத்

படம்: ஜெஸ்டின்