Published:Updated:

குபேரன் ஆக்குமா ஈமு?

பண்ணை பரபர

##~##

'ஈமு கோழி வளர்த்தால், நீங்களும் குபேரன் ஆகலாம். உங்க வீட்டுக்குப் பக்கத்தில் இடம் இருக்கவேண்டிய அவசியம் கூட இல்லை. நீங்கள் 1.5 லட்ச ரூபாயை எங்களிடம் செலுத்தி விட்டால், உங்கள் பெயரில் நாங்களே எங்கள் பண்ணையில் ஈமு கோழியை வளர்க்க ஆரம்பிப்போம். உங்களுக்கு ஒவ்வொரு மாத மும் 10,000 ரூபாய் நாங்கள் கொடுத்துக்கொண்டே இருப்போம். குபேரனாக நீங்கள் ரெடியா?’- செய்தித்தாள் களைத் திறந்தால், தினமும் இப்படித் திகைக்க வைக்கும் விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. 

இது சாத்தியம்தானா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் ஒன்றின்  நிர்வாக இயக்குனர் குருவிடம் பேசினோம்.

''எங்களிடம் முட்டைக்காக ஈமு வளர்க்க விரும்புபவர்கள் 1.5 லட்ச ரூபாய் செலுத்தினால், அவர்களுக்கு 10 ஈமு கோழிக் குஞ்சுகளை, அதாவது ஐந்து ஜோடிகள் கொடுப்போம். ஈமு குஞ்சுகளுக்குத் தேவைப்படும் உணவும் கொடுத்து, மாதம் 6,000 ரூபாய் பணமும் கொடுப்போம். இரண்டாவது வருடத்தில் இருந்து முட்டை போட ஆரம்பித்ததும், முட்டைகளை எங்களிடமே கொடுத்துவிட வேண்டும். கோழி வேண்டாம் என்றால், வளர்ந்த கோழியை எங்களி டம் கொடுத்துவிட்டு, அவர்கள் கொடுத்த 1.5 லட்ச ரூபாயைத் திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.

குபேரன் ஆக்குமா ஈமு?

அடுத்து, ஈமு கறிக்கோழி தனியாக இருக்கிறது. அதை வளர்க்க 1.5 லட்ச ரூபாய் செலுத்தினால், 15 ஈமு கோழி களைக் கொடுப்போம். நாங்கள் கொடுத்த 15-வது மாதத்திலேயே ஈமு, கறிக் குத் தயாராக இருக்கும். அப்போது, ஈமு கோழி ஒன்றுக்கு 16,000 என்று பணம் கொடுத்து நாங்களே வாங்கிக் கொள்கிறோம். மாதம் 11,000 ரூபாய் வரை கொடுப்பதாக விளம்பரங்கள் வருகிறது, அது சாத்தியமே கிடையாது. மாதம் 6,000 நிச்சயம் லாபம் கிடைக்கும்'' என்கிறார்.

குபேரன் ஆக்குமா ஈமு?

ஆனால், இதை மறுக் கிறார் தமிழ்நாடு ஈமு அசோசியேஷன் தலைவர் ராஜேந்திரகுமார். ''நான் சொந்தமாக ஈமு கோழிப் பண்ணை வைத்திருக்கிறேன். 1.5 லட்சத்துக்கு மாதம் 10,000 ரூபாய் என்பது சாத்தியமே இல்லாத விஷயம். ஈமு கோழியில் இருந்து எடுக்கப்படும் ஆயில் மகத்துவமானது. கறி சுவையானது. ஆனால், அபரிமிதமான வருமானம் எல்லாம் கிடைக்காது. எப்படிக் கணக்கு போட்டுப் பார்த்தாலும் ஒரு ஜோடி ஈமுவுக்கு, செலவு எல்லாம் போக வருஷத்துக்கு 8,000 ரூபாய்தான் கிடைக்கும். ஒரு ஊர்ல இருந்து, ஒருவர் ஈமு பண்ணை வைக்க 1.5 லட்சம் செலுத்தி, அவருக்கு இரண்டு மாசம் 10,000 ரூபாய் கொடுத்துட்டாங்கன்னா போதும், அவரு 20 பேரைக் கூட்டிட்டு வருவார். அந்த 20 பேர் மூலமா 200 பேர் வருவாங்க. இப்படித்தான் பிசினஸ் போய்க்கிட்டு இருக்கு. புதுசா பணம் செலுத்த ஆட்கள் இல்லாத நிலை வரும்போதுதான், ஒட்டு மொத்தமா எல்லோரும் தலையில துண்டைப் போட்டுட்டுப் போகப்போறாங்க. அதனால், அரசு உடனடியாக தலையிட்டு, ஈமு கோழி விவகாரத்தில் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால் விரைவில் கடுமையான பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கும்'' என்று எச்சரித்தார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் பிரபாகரனிடம் பேசினோம். ''தமிழ்நாட்டில் ஈமு கோழிப் பண்ணைகள் நாளுக்கு நாள் அதி கரித்துக்கொண்டே போகிறது. ஆனால், விற்பனை வாய்ப்புகள் அதிகரிக்கவே இல்லை. அதை அதிகரிக்காமல் பண்ணைகளை மட்டும் அதிகரிப்பதால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது. ஆஸ்திரேலியாவின் தேசியப் பறவை ஈமு கோழிதான். அந்த நாட்டிலேயே வருடத்துக்கு ஒருமுறை 'ஹேட்சின் ஹாலிடே’ என்று முட்டையைக் குஞ்சு பொறிக்க வைக்க மாட்டார்கள். அதாவது, கோழிகளின் உற்பத்தியைக் குறைப்பதற்காக இப்படிச் செய்கிறார்கள். ஈமு கோழியின் பிறப்பிடம் என்று சொல்லப்படும் ஆஸ்திரேலியாவிலேயே நிலைமை சொல்லிக்கொள்வது போல் இல்லை.

குபேரன் ஆக்குமா ஈமு?

ஈமு கோழிப் பண்ணை வைக்க வேண்டும் என்று யாராவது ஆசைப்பட்டால், ஒவ்வொரு மாவட்டத் திலும் எங்களின் கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது. அங்கே அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஈமு கோழி வளர்ப்பதைப் பற்றித் தெளிவான ஆலோசனை சொல்வார்கள். இதற்குக்  கட்டணமும் கிடையாது. ஆனால், ஈமு கோழி தொழிலில் எங்களை ஏமாற்றி விட் டார்கள் என்று இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை'' என்றார்.

தமிழக கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் சின்னையாவிடம் கேட்டபோது, ''என்னோட கவனத்துக்கும் நீங்க சொல்ற விஷயம் வந்தது. ஈமு கோழி வளர்ப்புக்கு என்று தமிழக அரசு சார்பில் இதுவரைக்கும் மானியமோ மற்ற உதவிகளோ எதுவும் கிடையாது. ஈமு கோழி வளர்ப்பில் தவறுகள் நடக்கிறதா என்று தெரிய வில்லை. விசாரிக்கச் சொல்லி இருக்கிறேன். அப்படி தவறுகள் நடப்பதாகத் தெரிந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சொன்னார்.

ஈமு சிக்கல் பெரிதாவதற்கு முன்னால் அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

- கே.ராஜாதிருவேங்கடம்

படங்கள்: க.ரமேஷ்