Published:Updated:

கண்ணைத் தோண்டி... பின்புறத்தில் குத்தி...

பத்திரிகையாளரைக் கொன்றது சாராய வியாபாரிகளா?

பிரீமியம் ஸ்டோரி
##~##

ரு பத்திரிகையாளரின் மரணம் அதிகப் படியான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படி ஒரு கொடூரமான கொலை! 

கும்மிடிப்பூண்டிக்கு அருகில் உள்ளது மாதர் பாக்கம். அங்கே, மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்ட உடல் ஒன்று ஏப்ரல் 5-ம் தேதி அன்று கண்டு எடுக்கப்பட்டது. வலது கண் தோண்டப்பட்டு, அந்த மனிதனின் பின்பக்கம் முழுவதும் குத்திக் கிழிக்கப்பட்டுக் கிடந்தது. அந்த உடலைக் கண்டு காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அப்படிச் சித்ரவதை செய்து கொல்லப்பட்டவர், ஒரு நிருபர் என்று அடையாளம் காணப்படவே, திகிலில் இருக்கிறது மீடியா உலகம்.

'மக்கள் கோட்டை’ எனும் தமிழ் வாரப் புலனாய்வு இதழ் மற்றும் 'பிரஜா சக்தி’ எனும் தெலுங்கு நாளிதழுக்கும் ஏரியா நிருபராக இருந்த விநயன் என்பவர்தான் கொலையானவர். அவரது அண்ணன் சுப்புலுவிடம் பேசினோம்.

கண்ணைத் தோண்டி... பின்புறத்தில் குத்தி...

''என் தம்பி விநயன், பால் பாக்கெட் போடுவான். 'மக்கள் கோட்டை’ங்கிற பத்திரிகையில வேலைக்குச் சேர்ந்து ஆறு மாசம் ஆகுது. நம்ம வீட்ல இருந்து ஒருத்தன் முன்னுக்கு வந்தா நல்லதுன்னு சந்தோஷப்பட்டேன். ஆனா, இப்படி ஆபத்து இருக்கும்னு நினைக்கவே இல்லை. நாங்க இருக்கிறது

கண்ணைத் தோண்டி... பின்புறத்தில் குத்தி...

ஆந்திரா - தமிழ்நாடு எல்லை. ஆந்திராவில் இருந்து சாராய பாட்டில் களை குறைஞ்ச விலைக்கு வாங்கிட்டு வந்து, தமிழ்நாட்டுக்குள்ள திருட்டுத்தனமா விப்பாங்க. அப்படிக் கடத்துறவங்களைக் கண்டுபிடிச்சிருக்கான். அவங்கதான் அவனைக் கொலை பண்ணி இருப்பாங் கன்னு சந்தேகப்படறோம்'' என்றார்.  

அழுது வீங்கிய கண்களுடன் இருக்கும் விநயனின் மனைவி மணிமேகலை, ''என்னைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். இரண்டு பெண் குழந்தைங்க இருக்குது. நான் பொட்டிக்கடை வெச்சுப் பார்த்துக்கிறேன். அவர், காலையில எழுந்ததும் வீடு வீடாகப் போய்  பால் பாக்கெட் போடுவார். 'மக்கள் கோட்டை’ பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்த பிறகும் பால் போடுறதை விடலை. 20 நாளைக்கு முன்னதான் 'பிரஜா சக்தி’ன்னு ஆந்திர பேப்பரில் வேலைக்குச் சேர்ந்தார்.

ராத்திரி 8 மணி ஆச்சுன்னா, கரெக்ட்டா வீட்டுக்கு வந்துடுவார். கடந்த 3-ம் தேதி வரலையேன்னு போன் செஞ்சேன். ரிங் ஆச்சு, எடுக்கவே இல்லை. 10 மணிக்கு போன் சுவிட்ச் ஆஃப் ஆயிடுச்சு. ராத்திரி வரலைன்னதும் அடுத்த நாள், தெரிஞ்ச இடத்தில்  எல்லாம் போய்த் தேடினேன். இரண்டு நாள் கழிச்சு, வயக்காட்டுல யாரோ ஒருத்தரை அடிச்சுப்போட்டு இருக்காங்கன்னு சொன்னதும் ஓடினோம். பெல்ட், பனியன், ஜட்டி எல்லாம் தனித் தனியாக் கிடந்துச்சு. ரொம்பவும் கோரமா அடிச்சு....'' என்றவரால் மேற்கொண்டு பேச முடியவில்லை.

மாதர்பாக்கம் காவல் நிலைய சிறப்புப் பிரிவு அதிகாரி ராமன், ''விநயன் மீது எந்தப் புகாரும் இது வரை வந்தது இல்லை. எந்தப் பிரச் னையும் இல்லாமல்தான் வாழ்ந்தார். கொலைக்கான காரணம் என்ன என்று இன்னமும் தெரியவில்லை. கொலை நடந்த பகுதி சத்தியவேடு காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் வருவதால், எங்களால் மேற்கொண்டு விசாரிக்க முடியவில்லை'' என்றார்.

சத்தியவேடு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஈஷ்வர், ''நான்கு பேர்கொண்ட டீம்தான் விநயனைக் கொலை செய்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறோம். உடல் முழுவதும் காயங்கள் இருக்கின்றன. பிளாஸ்டிக் ஒயரால் குரல் வளையைக் கிழித்து இருக்கிறர்கள். விநயனின் மொபைல் மட்டும் கொலைகாரர்களிடம் இருக்கிறது என நினைக்கிறோம். விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விடுவோம்'' என்றார்.

'மக்கள் கோட்டை’ பத்திரிகையின் நிறுவனர் மற்றும் ஆசிரியருமான ஜவஹர்லால், ''விநயன் இதுவரை எங்களுக்குச் சிக்கலான செய்திகள் எதுவும் கொடுத்தது இல்லை. அதனால், அவரது கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள்தான் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். அவரைக் கொலை செய்தவிதம் மிகவும் கொடூரமாக இருக்கிறது. 'கொலையாளிகளை உடனே கண்டுபிடிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விநயன் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும், பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்துடன் சேர்ந்து போராட்டம் நடத்த இருக்கிறோம்'' என்றார்.

மிகவும் சித்ரவதை செய்யப்பட்டு விநயன் கொலை செய்யப்பட்டு இருப்பதைப் பார்க்கும் போது எதிரிகளுக்கு இவர் மீது அதிகமான கோபம் இருந்திருப்பது தெரிகிறது. அவரது அண்ணன் சொல்வது மாதிரியான, சாராய அதிபர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பதைக் காவல்துறைதான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்!

- க.நாகப்பன், படங்கள்: அ.ரஞ்சித்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு