Published:Updated:

நிதி நிறுவனத்தில் திருடி... பைனான்ஸ் நிறுவனம்!

பலே செந்தில்குமார் பலே பலே!

பிரீமியம் ஸ்டோரி
##~##

கொலை செய்தவனே போலீஸுக்குப் போய் புகார் கொடுப்பதும், திருடி​யவனே 'திருடன்.. திருடன்..’ என்று கத்துவதும் ஓல்டு ஸ்டைல். அதையே 'கோல்டு’ ஸ்டைல் என்று நினைத்துக் கடைப்பிடித்தக் காரணத்தால், கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார் செந்தில்குமார். 

முத்தூட் நிதி நிறுவனத்தில் தவணை முறையில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, தங்கக்காசு வழங்குகிறார்கள். இந்தக் காசு​களை சூளைமேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில்தான் இருப்பு வைத்து இருக்கிறார்கள். இங்கே இருந்து தங்கக்காசுகளை, தமிழகம் முழுக்க உள்ள முத்தூட் நிதி நிறுவனங்களின் கிளைகளுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பொறுப்பில் இருந்தவர், பல்லடத்தைச் சேர்ந்த செந்தில்குமார்.

கடந்த சில தினங்களுக்கு முன், செந்தில்​குமாரும், ராமநாதன் என்ற ஊழியரும் ஏழு கிலோ தங்கக் காசுகளை மூன்று பைகளில் எடுத்துக்​கொண்டு ஆட்டோவில் கோயம்பேடுக்குச் சென்று இருக்கிறார்கள். அதற்குப் பிறகு நடந்த சம்பவங்​களைச் சொல்கிறார் செந்தில் குமார்.

நிதி நிறுவனத்தில் திருடி... பைனான்ஸ் நிறுவனம்!

''நாங்க போன ஆட்டோவில், வழியிலேயே ஒரு இடத்தில் டிரைவரின் ஃப்ரெண்ட் என்று ஒருவர் ஏறினார். கோயம்பேடு மார்க்கெட் பக்கத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத ஏரியாவுக்குப் போனதும் ஆட்டோவை நிறுத்தினாங்க. உடனே, அந்த  ஆட்டோ டிரைவர், மிளகாய்ப் பொடியை என் கண்ணுல

நிதி நிறுவனத்தில் திருடி... பைனான்ஸ் நிறுவனம்!

தூவிட்டு, என் கையை கத்தியால கிழிச்சிட்டு, நான் வெச்சிருந்த அஞ்சு கிலோ தங்கக் காசுப் பையைப் பிடுங்கிட்டாங்க. எங்களைக் கீழே தள்ளிட்டு ஆட்டோவுல தப்பிச்சிப் போயிட்டாங்க. நாங்க ரெண்டு பேரும் போலீஸுக்குத் தகவல் சொல்லிட்டு, ஆஸ்பத்திரியில வந்து அட்மிட் ஆயிட்டோம்'' என்றுதான் முதலில் போலீஸிடமும் சொல்லி இருந்தார்.

உடனே, ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை ஆரம்பமானது. ஒருகட்டத்தில், போலீஸாரின் சந்தேகப் பார்வை செந்தில்குமார் பக்கமே திரும்ப.. அவரது செல்போன் அவுட் கோயிங் லிஸ்ட் எடுக்கப்பட்டது. சம்பவம் நடந்த நாளில் மட்டும் செந்தில்குமார் ஒரே எண்ணுக்கு 20 முறைக்கும் மேல் பேசி இருப்பது தெரியவந்தது. அது யாருக்குச் சொந்தமானது என்று போலீஸார் விசாரித்தனர். அந்த எண்ணுக்குச் சொந்தக்காரர்தான் அந்த ஆட்டோ டிரைவர் என்றதும், எல்லாச் சந்தேகங்களுக்கும் விடை கிடைத்து விட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மாநகர போலீஸின் கூடுதல் துணை ஆணையர் ஜெயக்குமார், ''செந்தில்​குமார் மீது எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்தது. செந்தில்குமார் செல்போன் எண்ணை ட்ரேஸ் பண்ணித்தான் விஷயத்தை உறுதிப்படுத்தினோம். அவர் தொடர்ந்து பேசிய எண்ணுக்குச் சொந்தக்காரரான ஆட்டோ டிரைவர் அப்பா​துரையை தூக்கிட்டு வந்து விசாரிச்​சதும், உண்மையை ஒப்புக்கொண்டார். இதில் பெரிய கொடுமை என்னவென்றால், செந்தில்குமாரோடு வந்த ராமநாதனுக்கு எந்த விஷயமும் தெரியாது. அலுவலகத்தில் உள்ளவர்களை நம்பவைக்கவும், போலீஸாரைத் திசை திருப்பவும் ராமநாதனை கண்ணில் பார்த்த சாட்சியாகப் பயன் படுத்துவதே செந்தில்குமாரின் திட்டம்.

போலீஸார் ஆட்டோ டிரைவரைப் பிடித்தது தெரிந்ததும் ராமநாதனிடம் பேசிய செந்தில்குமார், 'வழக்கை ஜோடிப் பதற்காக போலீஸார் ஆட்டோ டிரைவர் ஒருவரை அழைத்து வந்து குற்றவாளியாக்கப் பார்க்கிறார்கள். உன்னையும் மிரட்டுவார்கள். நீ ஒப்புக்கொள்ளாதே. இல்லை என்றால், அந்த ஆட்டோ டிரைவர்கள் உன்னைக் கொலை செய்து விடுவார்கள்’ என்று மிரட்டி இருக்கிறார். இதை ராமநாதனே எங்களிடம் சொன்னார். எல்லா ஆதாரங்களையும் வைத்து செந்தில்குமார்தான் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே அவரைக் கைது செய்தோம். ஏற்கெனவே, பல முறை செந்தில்குமார் இதுபோன்று திருடி உள்ளார். அதற்கும் சேர்த்துக் கணக்கு காட்டுவதற்காகத்தான், ஒட்டுமொத்தமாக இந்தத் திருட்டு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார். ஏற்கெனவே திருடிய தங்கத்தில், தன் மகன் பெயரில் ஒரு ஃபைனான்ஸ் நிறுவனம், சென்னையில் ஒரு ஹோட்டல், பல்லடத்தில் கோழிப் பண்ணைக்கு நிலம் வாங்கியதை செந்தில்குமாரே ஒப்புக்கொண்டார்'' என்று சொன்னார்.

முத்தூட் நிதி நிறுவனம் தரப்பில் நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், ''செந்தில்குமார் பல ஆண்டுகளாக இங்கு பணிபுரிகிறார். இதுவரை அவர் மீது எந்தப் புகாரும் வரவில்லை என்பதால்தான், அவருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்தோம். அவர் இப்படிச் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவம் எங்களுக்கு நல்ல பாடம். எதிர்காலத்தில் இது போன்ற பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்வோம்'' என்று சொன்னார்.

என்னமா யோசிக்கிறாங்கப்பா!

- ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு