Published:Updated:

விதர்பா விவசாயிகள் தற்கொலை ஏன்?

விடை சொல்கிறார் ஆனந்த் டெல்டும்டே

பிரீமியம் ஸ்டோரி
##~##

லித் செயற்பாட்டாளர்கள் இடையே பிரபல​மானவர், மேலாண்மைக் கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்ற எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டே. கயர்லாஞ்ஜியில் நடந்த வன்கொடுமை பற்றி இவர் எழுதிய புத்தகம், சிறந்த ஆவணமாக திகழ்கிறது. ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, இந்திய மக்களுக்கான மனித உரிமைக்குழு ஆகிய வற்றில் உறுப்பினர். தோழர் அனுராதா காண்டியின் புத்தக வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த அவரைச் சந்தித்தோம்.   

''என் மாணவப் பருவத்தில் இருந்தே அனுராதா காண்டியை எனக்குத் தெரியும். மாணவராக அவர் இருந்த போதே, சாதி எதிர்ப்பு, தொழிற்​சங்கப் போராட்டங்களில் பங்கேற்றார். சிவில் உரிமைப் போராட்​டங்களிலும் இறங்கியவர். அதன் பிறகு, மாவோயிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது முதல் எனக்கும் அவருக்குமான தொடர்​பு விட்டுப்போயிற்று. சில காலங்களுக்குப் பிறகு, அவர் எழுத ஆரம்பித்து இருந்தார். அப்போது, சாதி பற்றி எழுதும்போது என்னைத் தொடர்பு கொண்டு

விதர்பா விவசாயிகள் தற்கொலை ஏன்?

ஆலோசனை கேட்பார். திடீரென ஒருநாள், நோயினால் இறந்து போனார். அவர் நினைவாக, 'அனுராதா காண்டி நினைவுக் குழு’ ஒன்றை ஏற்படுத்தி, ஒவ்வொரு வருடமும் பல்வேறு துறைகள் சார்ந்த செயற்பாட்டாளர்களை அழைத்துப் பேச வைக்கிறோம். அதன் ஒரு பகுதியாக அவர் எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே தொகுப்பாக 'மாற்றத்துக்கான எழுத்துக்கள்’ எனும் தலைப்பில் கொண்டு வருகிறோம். மற்றபடி அந்த நினைவுக் குழுவுக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!''

''விவசாயிகள் அதிகமாகத் தற்கொலை செய்து​கொள்ளும் விதர்பா பகுதியில் இருந்து வந்தவர் நீங்கள். அங்கு ஏன் அப்படி நடக்கிறது?''

''உங்களுக்கு இருக்கும் துக்கத்தைவிட எனக்கு அதிகமாகவே இருக்கிறது. அந்தப் பகுதிகளில் இருக்கும் மேல்தட்டு வர்க்கத்தினரிடம்தான் கடனுக்காக விவசாயிகள் கையேந்துகிறார்கள். அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதபோது, அவர்கள் தேர்வு செய்யும் ஒரே வழி தற்கொலைதான். அவர்கள் விளைவிக்கிற ஒவ்வொரு பயிரும் 'வர்த்தகப் பொருளாக’ மாற்றப்பட்டால், அதனால் சரியான விலை கிடைக்காமல் போனால், அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்?''

''இன்றைய தலித் கட்சிகள் அல்லது தலித்களுக்​காகப் போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகளின் நிலை என்ன?''

''எந்த ஒரு கட்சியும் பெரும்பான்​மையான இடங்களில் தனித்து வெற்றி பெற முடியாத நிலைதான்

விதர்பா விவசாயிகள் தற்கொலை ஏன்?

இன்றைய தேர்தல் அரசியலில் நிலவு​கிறது. தலித்துகளுக்காக உழைக்கும் கட்சிகளும் இதில் விதிவிலக்கு அல்ல. உத்தரப் பிரதேசத்தில் பெற்ற வெற்றியை மாயாவதியால் தக்கவைக்க முடியவில்லை. காரணம், அவர் நடந்துகொண்ட விதம்தான். சுருக்கமாக ஒன்றை மட்டும் சொல்லலாம். இன்றைய நிலையில் எந்த தலித் கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பே இல்லை!''

''தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்​குடியினர் (அட்டூழியங்கள் தடுப்பு) சட்டம்’ இருந்தபோதிலும் துயரங்கள் குறைய​வில்லையே?''  

''நீங்கள் சொல்லும் சட்டம்தான் தலித்துகளைப் பாதுகாப்பதற்கானப் பற்களுடன் வந்த சட்டம். மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்த சட்டமும் அதுதான். தலித்துகளின் மீதான வன்முறையைப் பற்றி வருகிற புகார்களைக் காட்டிலும், இந்தச் சட்டத்தை மீறியதாக வருகிற வழக்குகள்தான் அதிகம். இந்தச் சட்டத்தை ஒரு கருவியாக வைத்துக்கொண்டு 'எது எது எல்லாம் சாதி வன்கொடுமைகள் அல்ல’ என்று, அந்த வழக்குகளை நீதிமன்றங்கள் நிராகரிக்கின்றன. பிறகு எப்படி பாதிக்கப்பட்டவருக்கு இந்தச் சட்டத்தின் மூலம் நியாயம் கிடைக்கும்? களத்தில் இறங்கி முன் எப்போதையும் விட இன்னும் அதிகமாகப் போராட வேண்டும். இந்தப் போராட்டம் சாதி சார்ந்ததாக அல்லாமல், வர்க்கம் சார்ந்த போராட்டமாக இருக்க வேண்டும். அதுதான் தீர்வு!''

''தமிழகத்தில் இன்று இருக்கும் பெரியார் இயக்கங்​களை நீங்கள் எப்படி எடை போடுவீர்கள்?''

''பெரியாரை ஜோதிராவ் புலேவுடன் ஒப்பீடு செய்து பார்க்கலாம். 'சூத்திரர் - அதிசூத்திரர்’ என்ற கருத்தில் புலே இயங்கியது போல, 'ஆரியர் - திராவிடர்’ என்ற கருத்தில் பெரியார் இயங்கினார். தமிழகத்தில் பெரியார் இயக்கங்கள், கட்சிகள் எல்லாம் தாழ்த்தப்​பட்டவர்களுக்காகப் போராடுகின்றன என்பது, பெயர் அளவில்தான் இருக்கிறது. இன்றும், தென்தமிழகத்தில் சாதியக் கொடுமைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை பெரியார் இயக்கங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்!''

''அண்ணா ஹஜாரேவைப் போன்ற திடீர்ப் போராளி​களுக்கு ஊடகங்கள் தரும் வரவேற்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''ஊடகங்கள் நினைத்தால் ஒரு பிரச்னையை எழுப்பவும் முடியும்... அழிக்கவும் முடியும். அண்ணா ஹஜாரேயின் போராட்டம் மத்திய தர வர்க்கத்தினரை அதிகமாகக் கவர்ந்தது. அதன் பிறகுதான் மீடியாவையும் கவர்கிறது. ஏனென்றால், இன்றைக்கு மத்திய தர வர்க்கம்தான் மீடியாக்களுக்கான மார்க்கெட்!''

- ந.வினோத்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு