Published:Updated:

மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஒரு பெண் அனுபவித்த கொடுமை!

சளைக்காமல் போராடிய சாந்தி

பிரீமியம் ஸ்டோரி
##~##

'முள்ளில் சேலை பட்டாலும், சேலையில் முள் பட்டாலும் சேதாரம் என்னமோ சேலைக்குத்தான்’ என்பார்கள். அதனால்​தான் பணி இடங்களில் எந்த வகையில் தொந்தரவு ஏற்பட்டாலும், பெரும்பாலான பெண்கள் புகார் கொடுக்கத் துணிவது இல்லை. 'பெண் இன்னமும் அடங்கிப் போவதில் அர்த்தமே இல்லை’ என்று போராடி வெற்றிக்கோடு வரை வந்திருக்கிறார், சாந்தி.

 யார் அவர்?

மதுரையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தணிக்கை பிரிவு அலு​வலகத்தில் கண்காணிப்பாளர். அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். நடந்ததைச் சொல்கிறார் இவரது கணவர் சுரேஷ்பாபு. 'கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் கடைசியில், சென்னையில் இருந்து துணைத் தலைமை தணிக்கை அதிகாரி சிவநேசன், காஞ்சி புரம் மண்டலத் தணிக்கை அதிகாரி பாலகிருஷ்ணன் ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கணக்குகளை ஆய்வு செய்வதற்காக வந்து இருந்தார்கள். அப்போது, தணிக்கை ஆய்வாளராக இருந்த என் மனைவியை ஆவணங்களுடன் தங்கள் அறைக்கு அழைத்துள்ளார்கள். மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டார்கள்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஒரு பெண் அனுபவித்த கொடுமை!

'என்னம்மா ஒரு வருஷத்துக்கு முன் னாடி பார்க்கும் போது, ஒல்லியா அழகா இருந்த... இப்ப குண்டாகிட்டியே’ என்று ஒருவர் கேட்க.. 'உனக்கு இந்தி, ஜப்பான் மொழி தெரியுமா?’னு இன்னொருவர்

மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஒரு பெண் அனுபவித்த கொடுமை!

கேட்டுள்ளார்.  'இல்லை சார். படிக்க நேரமில்லை’ என்று பதில் சொல்லி இருக்கிறார் என் மனைவி. 'லிப்ஸ்டிக் போடுறதுக்கும், இப்படி அழகா சேலை கட்டுறதுக்கும் மட்டும் நேரம் இருக்கா’ என்று புண் படுத்தி இருக்கிறார்கள்.

மறுநாள் பணியின் போது, 'காபி குடிக்க வர்றியா?’ என்று கேட்டு இருக்கிறார்கள். 'இல்லை சார். பொதுவா நான் வெளியே சாப்பிடுறது இல்லை’ என்று சொல்லி இருக்கிறார். உடனே ஒருவர்,  'நீ என்ன பிராமணப் பொண்ணா. இவ்வளவு ஆர்த்தோடக்ஸா (ஆச்சாரமாக) இருக்க?’ என்று கேட்க, 'இவங்க ஆர்த்தோடக்ஸ் இல்லை சார், ஆர்த்தோ டாக்ஸ் (நாய்கள்)’ என்று கமென்ட் அடித்திருக்கிறார் இன்னொருவர்.  மேலும், 'வெளியே சாப்பிட மாட்டீங்களா... இல்ல வெளிக்கி(மனிதக் கழிவு) சாப்பிட மாட்டீங்களா?’ என்று கொச்சையாகவும் கேட்டிருக்கிறார். தொடர்ந்து மூன்று நாட்கள் இதுபோன்ற வன்கொடுமை நடந்து இருக்கிறது. ஒரு அளவுக்கு மேல் தாங்க முடியாமல் அழுதுகொண்டே ஓடி வந்துவிட்டார்.

இந்தச் சம்பவம் பற்றி தனது மேல் அதிகாரியான உதவித் தணிக்கை அதி​காரியிடம் புகார் கொடுத்தார் சாந்தி. புகாருக்கு ஆளான சிவநேசனையே விசா ரணை அதிகாரியாக நியமித்து, சாந்தி​யை மிரட்டினார்கள். தேவை இல்லாமல் மெமோ கொடுப்பது, சம்பள உயர்வை நிறுத்தி வைப்பது என்று பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தன. நான் கொடுத்த தைரியத்தால், பயப்படாமல் மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் செய்தார் சாந்தி. விசாரணையில், 'சம்பவம் நடந்தது உண்மை தான்’ என்று ஊர்ஜிதமானதால், போலீஸ் நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்தது மகளிர் ஆணையம். அதன்படி, அதிகாரிகள் இருவர் மீதும் மீனாட்சியம்மன் கோயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தார்கள். இந்த வழக்கு மதுரையில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதற்கிடையே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி சிவநேசன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 197-ன் படி ஒரு அதிகாரியின் மீது வழக்குத் தொடரும் முன், அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்ற அவரது வாதத்தை ஏற்று, வழக்கில் இருந்து அவரை விடுவித்து விட்டது நீதிமன்றம்' என்றார் சோகத்தோடு.

அடுத்துப் பேசிய வழக்கறிஞர் ராகுல், 'இவ்வளவு நடந்த பிறகும் தனக்கு நீதி கிடைக்கும் என்று நம்பினார் சாந்தி. அவர் கேட்டுக்கொண்டதால், நானும் வழக்கறிஞர் ரத்தினமும் சேர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தோம். அப்போது, 'அதிகாரி சிவநேசனின் தவறான நடத்தை அவரின் தனிப்பட்ட செயல் பாடுதானே ஒழிய, இதற்கும் அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. எனவே, அவர் மீது வழக்குத் தொடர அரசின் முன்அனுமதி பெறத் தேவையில்லை’ என்று வாதாடினோம்.

இதைத் தொடர்ந்து, கீழ்க்கோர்ட் தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள், 'இந்த வழக்கில் போலீஸார் துரிதமாக குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும் உத்தரவு போட்டு இருக்​கிறார்கள். எங்களின் வாதத்தைவிட, சாந்தியின் மன உறுதி பாராட்டுக்குரியது. அவரை வன்கொடுமை செய்த அதிகாரி​களில் பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்று விட்டார். சிவநேசன் பணிஓய்வு பெறும் நேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த வழக்கில் அவர்களுக்குக் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும்'' என்றார் உறுதியுடன்.

இதுபற்றி சாந்தியிடம் கேட்டோம். 'நான் அரசு ஊழியர் என்பதால், நடந்த சம்பவம் பற்றியோ, வழக்கு பற்றியோ எதுவும் பேச இயலாது. எனக்கு நடந்த கொடுமை வெளியே வருவதற்குக் காரணம், மாநில மகளிர் ஆணையம்தான். என் புகார் கடிதத்தை மதித்து, மதுரைக்கே வந்து விசாரித்து விட்டுப் போனார், ஆணைய உறுப்பினர் குத்ஷியா காந்தி. என்னைப் போன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க, மகளிர் ஆணையம் பற்றிய விழிப்பு உணர்வை ஜூ.வி. ஏற்படுத்தினால் சந்தோஷப்படுவேன்' என்றார்.

இன்னும், பெண்கள் எவ்வளவோ போராட வேண்டி உள்ளது!

- கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு