Published:Updated:

ஸ்டிரைக்கும் நடக்கிறது... படப்பிடிப்பும் நடக்கிறது!

காமெடி சினிமா!

பிரீமியம் ஸ்டோரி
##~##

'ஏப்ரல் 7 முதல் வேலை நிறுத்தம்’ என்று  ஃபெப்ஸி அறிவித்தது. அதே நாளில், 'தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகள் அனைத்தும் புதிய தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் தங்குதடை இன்றி நடக்கும்’ என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. இப்போது யார் கை ஓங்கி இருக்கிறது? 

காட்சி-1

கடந்த 7-ம் தேதி, பாரதி​ராஜாவின் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படப்பிடிப்பு தேனியில் வழக்கம்போல் நடந்தது. சென்னை பல்லாவரத்தில், கார்த்தி நடிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்’ ஷூட்டிங்கும் தடையின்றி நடந்தது. ரெட்ஹில்ஸ் ஏரியாவில் கருணாஸ் சொந்தமாகத் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் 'ரகளைபுரம்’ படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பை எந்த நேரத்திலும் ஃபெப்ஸி தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தி விடுவார்கள் என்கிற பதற்றம் நிலவியது. அதனால் பாதுகாப்புக்காக போலீஸார் திமுதிமுவென இறக்கப்பட்டார்கள். 'ரகளை​புரம்’ படத்தில் சினிமா போலீஸாக நடிக்கும் கருணாஸுக்கு நிஜப் போலீஸ் பாதுகாப்பு கொடுத்தபிறகு, டென்ஷன் இன்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஸ்டிரைக்கும் நடக்கிறது... படப்பிடிப்பும் நடக்கிறது!

காட்சி-2

7-ம் தேதி மாலை, ஃபெப்ஸி பிரஸ் மீட்டில் பேசிய அமீர், ''தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யாமல், ஃபெப்ஸிக்குப் போட்டியாக யாரும் சங்கம் ஆரம்பிக்க முடியாது. ஃபெப்ஸி அமைப்பை விட்டு யாரும் வெளியேறவில்லை. கருணாஸின் படம் வீடியோ கேமராவில் நடத்தப்பட்ட பாவ்லா ஷூட்டிங். ஸ்டிரைக் காரணமாக 'கும்கி’, 'நீர்ப்பறவை’, 'பாகன்’ போன்ற 32 படங்களின் ஷூட்டிங் நடைபெறவில்லை'' என்று நம்பிக்கையுடன் பேசினார்.

காட்சி-3

'டிரைவர்கள் யூனியன் தலைவராக இருந்தவர், ஃபெப்ஸி சிவாவிடம் பெருந்தொகையைக் கொடுத்தார். அந்தப் பணத்தை இதுவரை திருப்பித் தரவில்லை’ என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே இருக்​கிறது. இதனால், சிவாவுக்கு எதிரான செயல்களில் டிரைவர்கள் யூனியன் இறங்க நினைக்கவே, இரண்டு பிரிவாக மோதல்கள் வெடித்தது. இப்போது டிரைவர்கள் யூனியன் கதவில் பூட்டு தொங்குகிறது.

ஸ்டிரைக்கும் நடக்கிறது... படப்பிடிப்பும் நடக்கிறது!

காட்சி-4

ஃபெப்ஸியின் இன்னொரு அங்கமான 'திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம்’ போராட்டத்தில் இறங்கியது. 'எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் ஃபெப்ஸி எப்படி திடீரென்று போராட்டத்தில் இறங்கலாம்?’ என்று ஒரு தரப்பினர் கொந்தளித்தனர். சிக்கல் வரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்தோ, என்னவோ அந்த யூனியன் தலைவர் மாரி, 'உறுப்பினர்கள் ஃபெப்ஸி சங்கத்துக்கு வரவும்’ என்று போர்டு மாட்டிவிட்டு சங்கத்தின் கதவை இழுத்து மூடினார். போர்டைப் பார்த்த டான்ஸ் மாஸ்டர்கள் கோபமாகி தர்ணாவில் குதித்தனர். 'நமக்குள் பேசி முடிவு செய்யாமல் எப்படி ஃபெப்ஸி சங்கத்துக்குப் போகமுடியும்’ என்று டென்ஷன் ஆனார்கள். டான்ஸர்கள் அசோசியேஷனில் 968 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 287 பேர் டான்ஸ் மாஸ்டர்கள். ' எங்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத புது டான்ஸர்களைத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்தத் தொடங்கினால் எங்க பொழைப்பு என்னாகும்?’ என்று கூக்குரல் எழுப்பினார்கள்.

டான்ஸர்கள் அசோசியேஷன் முன்னாள் தலைவர் ரகுராம் நம்மிடம், ''எங்க சங்கத்திலேயே சில பேர் திட்டமிட்டு கதவைப் பூட்டி எங்களை ரோட்டில் நிறுத்தி அவமானப்படுத்தி இருக்காங்க. தேவைப்பட்டால் எங்கள் சங்கத்தின் நலனுக்காக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவும் தயங்க மாட்டேன்'' என்று டென்ஷன் ஆனார்.

காட்சி-5

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்  அவசரக் கூட்டத்தை தினமும் ஃபிலிம் சேம்பரில் நடத்தி வரு கின்றனர். 'தமிழ்நாடு திரைப்படக் கலைஞர்கள் சங்கம்’ என்ற ஒரே அமைப்பின் கீழ் நடனம், ஸ்டன்ட், கேமரா, ஆர்ட், டிரைவர் என்று அனைத்துப் பிரிவுகளும் இயங்கும் வித மாக ஏற்பாடுகள் நடக்கிறதாம்.

இதுவரை ஒரே ஒரு கட்டளை மூலம் அத்தனை படப்பிடிப்புகளையும் பேக்கப் செய்ய வைத்த ஃபெப்ஸி, இப்போது நடப்பதை எப்படித் தடுப்பது என்று தீவிரமாக சிந்தித்து வருகிறது. ஒரு பக்கம் ஷூட்டிங் நடக்கிறது. இன்னொரு பக்கம் ஸ்டிரைக்கும் நடக்​கிறது. சினிமா வில் என்ன நடக்கிறது என்றுதான் தெரிய வில்லை!

- எம். குணா

படங்கள்: வீ.நாகமணி    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு