Published:Updated:

டி.ஆர்.பாலுவை மறக்காத வடசேரி

''ரத்த தினத்தை மறக்க முடியுமா?''

பிரீமியம் ஸ்டோரி
##~##

டந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 9. டி.ஆர்.பாலு​வின் எரிசாராய ஆலையை எதிர்த்துக் கருத்துச் சொல்லவந்த, வடசேரி கிராம மக்கள் மீது போலீஸார் நடத்திய கொடூரத் தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த நாளை, 'கறுப்பு நாள்’ என்று அறிவித்து கடை அடைப்பும், வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றிவைத்தும் நினைவு கூர்ந்தனர் வடசேரி கிராமத்தினர். 

தஞ்சாவூர் மாவட்டம், வடசேரியில் அமைந்​துள்ளது, 'கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன் லிமிடெட்’ நிறுவனம். கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்​தில் இந்த நிறுவனத்தில் எரிசாராய ஆலை துவங்கப்போவதாக சர்ச்சை எழுந்தது.  இதற்கு வடசேரி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'சாராயத் தொழிற்சாலையைத் தடுப்பதோடு, அதற்குக் காரணமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என அப்போதே ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். அ.தி.மு.க. சார்பில் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில், ஒரத்தநாடு வட்​டாட்​சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடந்தது.

டி.ஆர்.பாலுவை மறக்காத வடசேரி

தொடர்ந்து 2010, ஏப்ரல் 9-ம் தேதி, ஆலை விவகாரம் குறித்து மக்களின் கருத்து அறிய தமிழ்​நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வடசேரி வந்தனர். தொழிற்சாலை வளாகத்துக்குள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தார்கள். அங்கு வட​சேரிக்குச் சம்பந்தம் இல்லாத ஆட்கள் நிறையப் பேர் உள்ளூர்வாசிகள் போல வந்து இருந்தனர். அவர்களை வைத்துக் கூட்டம் நடத்த தொழிற்சாலை மற்றும் அரசு அதிகாரிகள் முயற்சிக்க... வடசேரி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து கிராம மக்கள் மீது கடுமை காட்டி, ஆவேசமான தடியடி நடத்தியது போலீஸ். இதில் பெண்கள், வயதானவர்கள் பலரும் ரத்தம் சொட்டச் சொட்ட தரையில் வீழ்ந்தார்கள். இதற்கிடையே வடசேரி மக்களைக் கூட்டத்துக்கு அனுமதிக்காமலேயே, அன்றைய தஞ்சாவூர் கலெக்டர் (பொறுப்பு) கருணாகரன் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி முடித்தார்.

டி.ஆர்.பாலுவை மறக்காத வடசேரி
டி.ஆர்.பாலுவை மறக்காத வடசேரி

தொடர்ந்து வடசேரி கிராமத்தினர் மீது வழக்குகள் போடப்பட்டன. இந்த நிகழ்வுகள் அனைத்தையும்

டி.ஆர்.பாலுவை மறக்காத வடசேரி

'யுத்த அதிகாரிகள்... ரத்த அப்பாவிகள் - வடசேரி வெறியாட்டம்’ என்ற தலைப்பில் 18.4.2010 இதழில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதன் பின்னர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தைச் செல்லாது என்று அறிவித்துவிட்டது. அதன் பின்பு வழக்கு விவகாரங்களாலும் ஆட்சி மாற்றத்தாலும் ஆலை கிடப்பில் போடப்பட்டது.

இந்தச் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வடசேரிப் பாது​காப்புக் குழுவினர், ஏப்ரல் 9-ம் தேதியை வடசேரி வரலாற்றில் மறக்க முடியாத கறுப்பு நாள் என்று அறிவித்து கடை அடைப்புப் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். வீடுகள் அனைத்திலும் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன. வடசேரிப் பாதுகாப்புக் குழுவின் துணைச் செயலாளர் பழனிவேல், ''கிங் கெமிக்கல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது, டி.ஆர்.பாலு வடசேரிக்கு வளம் சேர்ப்பார் என்று நம்பித்தான் கிராம மக்கள் நிலங்களைக் கொடுத்தனர். ஆனால், அவர் எரிசாராயத் தொழிற்சாலை தொடங்க முயற்சித்து, ரவுடிகளைக் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு அனுப்பினார். இதை எதிர்த்த கிராம மக்கள் மீது போலீஸாரை ஏவி, தாக்குதல் நடத்தினார். டி.ஆர்.பாலு நடத்திய அந்தக் கொடுமையை மறக்க முடியுமா? ஆண்டுதோறும் இழப்புகள் நிகழ்ந்த துக்க தினத்தில் நினைவு நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன. அந்த வன்முறைச் சம்பவத்தை, ரத்த தினத்தை மறக்க முடியாமல்தான் கறுப்பு நாள் அனுசரிக்கிறோம். இது மண்ணுக்காக நடத்தப்பட்ட போராட்டம்...'' என்றார்.

வடசேரி ஊராட்சி மன்றத் தலைவரான கண்ணதாசன் அ.தி.மு.க. சார்பில் தேர்வு செய்யப்பட்டவர். இவர், ''அன்றைய தினம் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட 38 பேர் மீது, தி.மு.க. அரசு வழக்குகளைப் போட்டுள்ளது. இந்த வழக்குகளை போலீஸார் வாபஸ் பெற வேண்டும்...'' என்று கோரிக்கை வைத்தார்.

டி.ஆர்.பாலு தரப்பில் விளக்கம் கேட்டபோது,''இது பற்றிப் பேச விருப்பம் இல்லை'' என்று  ஒதுங்கிக்​கொண்டனர்.

ஒவ்வோர் ஆண்டும் அப்பகுதி மக்களுக்கு ஏப்ரல் 9-ம் நாள் கருப்பு தினமாகவேதான் தொடருமா?

- சி.சுரேஷ்

படங்கள்: கே.குணசீலன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு