Published:Updated:

சாமி ரவி... காக்கு வீரன்... ஆளும் கட்சிப் பிரமுகர்கள்!

ராமஜெயம் விவகாரத்தில் சந்தேகப் புள்ளிகள்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ராமஜெயம் கொலையாளிகளைத் தேடி பல்வேறு கோணங்களில் விசாரணை வலையை விரித்த திருச்சி போலீஸார், தற்போது தங்களது எல்லைகளைச் சுருக்கி ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் முக்கியத்தும் கொடுத்து விசாரணையை நகர்த்தி வருகிறார்கள்! 

கிடுக்கிப்பிடியில் வங்கி அதிகாரி!

2007-ம் ஆண்டு வாக்கில் திருச்சி கன்டோன்மென்ட் ஏரியாவில் தனியார் வங்கி ஒன்றின் மேலாள ராகப் பணியாற்றிய கற்பூர சுந்தர​பாண்டி யன் என்பவரைப் பிடித்து தனிப்​படை போலீஸ் விசாரித்து வருகிறது.

அவர் பணியில் இருந்த​போது உடன் பணியாற்றிய ரெட்டியார் சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்திருக்கிறார். சிறிது நாளில் காதல் கசக்கவே, பஞ்சாயத்து ராமஜெயம் வசம்

சாமி ரவி... காக்கு வீரன்... ஆளும் கட்சிப் பிரமுகர்கள்!

வந்திருக்கிறது. மனைவியிடம் மன்னிப்புக் கேட்கச்சொல்லி, விவாகரத்தும் பெற்றுத் தந்திருக்கிறார். பின்னர், அந்தப் பெண் டெல்லிக்குச் சென்று செட்டிலாகி விட்டாராம்.

மீண்டும் 2008-ம் ஆண்டு வாக்கில் திருச்சியில் பிரபல பள்ளி ஒன்று, தங்கள் பள்ளி பணத்தை டெபாஸிட் செய்வதற்காக கற்பூர சுந்தரபாண்டியனை அணுகி இருக் கிறது. அப்போது பணத்தை வங்கியில் டெபாஸிட் செய்யாமல், போலியாக ரசீது போட்டுக்கொடுத்து, பணத்தைச் சுருட்டிவிட்டாராம். அந்தத் தொகையைப் பெற்றுத்தரவேண்டும் என ராமஜெயத்திடம் பஞ்சாயத்து வந்திருக்கிறது. மீண்டும் பாண்டியனைக் கண்ட ராமஜெயம் கோபத்தின் உச்சத்துக்குச் சென்று, தனது இறகுப் பந்து மைதானத்தில் முட்டியிட வைத்ததோடு, 'பளார்... பளார்...’ என்று அறை விட்டாராம். அதோடு, அங்கு இருந்த சிலரையும் அடிக்க வைத்து, பணத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறார். அப்போது வெளியே வந்தவர், 'இதற் கெல்லாம பின்னாளில் வருத்தப்படப்போகிறார், பாருங்கள்!'' என கூறிச் சென்றிருக்கிறார். அதன் பின்னர் திருச்சியில் இருந்து தலைமறைவானவர் எங்கே சென்றார் என யாருக் கும் தெரியாமல் இருந்தது.

கோவை பகுதியில் வசித்து வந்த பாண்டியன், போலீஸார் தன்னைப்பற்றி விசாரிக்கிறார்கள் என்பதை அறிந்து தனிப்படை போலீஸார் முன் ஆஜராகி இருக்கிறார். 'ராமஜெயம் மீது நான் கோபமாக இருந்தது உண்மைதான். ஆனால், கொலைச் சம்பவத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று சொன்னாராம். ஆனாலும் அவரை தங்கள் கஸ்டடி யில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள் போலீஸார்.

ஜோடியைத் தேடி...

'சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடி​யை ராமஜெயம் பிரித்தார். அதன் மூலம் ஏற்பட்ட விரோதம்தான் அவர் கொலை செய்யப்படுவதற்குக் காரணம்’ என்று பேசப்​படும் விவகாரத்தை போலீஸார் தீவிரமாகப் பார்க்​கிறார்கள்.

'திருச்சியில் வசித்து வரும் தென் மாவட்டத் தலித் தலைவரின் தம்பியிடம் தஞ்சமடைந்த அந்த காதல் ஜோடியை, ராமஜெயம் பிரித்து அந்தப் பெண்ணை தன் வசப்படுத்திக் கொண்டார். அந்த கோபத்தில் அந்த தலித் தலைவரின் தம்பியின் ஆட்கள் இந்தக் கொலையில் ஈடுபட்டு இருக்கலாம்’ என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரித்து வருவதை கடந்த இதழில் எழுதி இருந்தோம்.

தனது மனைவியைப் பிரித்த ராம ஜெயத்​தின் மீது கடும் கோபத்தில் இருந்த அந்தப் பெண்​ணின் கணவர் மீது போலீஸாருக்குப் பலமான சந்தேகம். ராமஜெயம் கொலை செய்யப்பட்ட தினத்தில் இருந்து அந்தப் பெண்ணையும் காணவில்லை. அவரது செல்போன் எண்ணும் தொடர்ந்து சுவிட்ச்-ஆஃபில் இருக்கிறதாம். அதனால், ராமஜெயத்தைக் கொலை செய்த அந்த தென் மாவட்ட இளைஞன், அந்தப் பெண்ணையும் கடத்திச் சென்று இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்கள். இந்த ஜோடியின் உறவினர்களிடம் போலீஸார் விசாரித்தபோது, 'அவர்கள் காதலித்துக் கல்யாணம் செய்வதற்காக கிளம்பிச் சென்ற பிறகு, அவர்களுடன் அறவே தொடர்பு இல்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியாது’ என்று சொல்லிவிட்டார்களாம். ஆனாலும் அந்த உறவினர்களின் நடவடிக்கைகள், தொடர்புகளைக் கண்காணித்து வருகிறது போலீஸ் டீம்.

விசாரணையில் சாமி ரவி!

ராமஜெயத்துக்கு இடம் வாங்கித் தரும் தரகராக இருந்த சாமி ரவி, இப்போது போலீஸின் விசாரணை​யில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் மற்றும் அவரது கார் டிரைவர் சக்திவேல் ஆகியோர் காரில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சாமி ரவியின் பங்கு இருப்பதாக போலீஸுக்கு சந்தேகம் உண்டு. அந்தக் கொலை சம்பவத்துக்குப் பிறகு திருச்சியை விட்டு எங்கோ வெளி மாநிலத்துக்குச் சென்று​விட்ட சாமி ரவி, நான்கு ஆண்டுகள் கழித்து சமீபத்தில்தான் திருச்சிக்கு வந்திருக்கிறார். சிலமுறை ராமஜெயத்தை சந்தித்த அவர், 'வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்...’ என்று வற்புறுத்தி இருக்கிறார். அவர் கேட்டதைக் கொடுத்து செட்டில் செய்யாமல் இழுத்தடித்ததால், அதிருப்தியில் இருந்த சாமி ரவி, கை தேர்ந்த ஆட்களை வைத்து ராமஜெயத்தைத் தீர்த்துக் கட்டி இருக்கலாமோ என்கிற கோணத்தில் அவரிடம் விசாரணை நடக்கிறது. குணசேகரன் என்கிற இயற்பெயரைக் கொண்ட சாமி ரவிக்கு தமிழகத்திலுள்ள பல்வேறு கூலிப்படைகளின் தொடர்பு உள்ளதாம். இவர் மீது சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் 2000-ம் ஆண்டில் ஒரு கொலை வழக்குப் பதிவு செய்யப்​பட்டுள்ளது.

சிறையில் கிடைத்த தகவல்!

தமிழக சிறைகளில் உள்ள ரவுடி கும்பல்களிடம் உளவு பார்த்து கிடைத்த தகவலை வைத்து, மதுரை​யில் காக்கு வீரன் என்கிற ரவுடியை விசாரித்து வருகிறது ஒரு டீம். ஆட்களை அடித்துத் தூக்கி வருவதில் கைதேர்ந்தவராம் காக்கு வீரன். திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த பூண்டி கலைவாணனை கொலை செய்த டீமில் முக்கியப் பங்கு காக்கு வீரனுக்கு உண்டாம். வெளியே உலவிக் கொண்டிருந்த காக்கு வீரன் வாழ்க்கையை வசதியாக ஓட்டுவதற்கும் தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்ளவும் ஒரு பெரிய அசைன்மென்ட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தான். இதற்காக தனக்கு தெரிந்த பல்வேறு கூலிப்படை தலைவர்களிடம் தனக்கு ஏதேனும் பெரிய வருமானம் வரக்கூடிய வேலை தரும்படி கேட்டுக் கொண்டிருந்தானாம். ராமஜெயத்தைக் கொலை செய்யும் அசைன்மென்ட் இவனை வைத்து நிறைவேற்றப்பட்டதா என்றும் துருவுகிறது போலீஸ்.

உளவுத் துறையிடம் உறுமும் உடன்பிறப்புக்கள்!

போலீஸாரின் விசாரணை இப்படி போய்க் கொண்டிருக்க... போலீஸார் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகளில் சிலர். 'சாதாரண வழக்கு விசாரணையில் உள்ளவர்களையே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்​கொண்டு கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருப்பார்கள்

சாமி ரவி... காக்கு வீரன்... ஆளும் கட்சிப் பிரமுகர்கள்!

உளவுத் துறை போலீஸார். பல்வேறு வழக்குகளில் சிக்கி முன் ஜாமீன் பெற்றுள்ள, ஆளும்கட்சிக்கு எதிரான சக்தி வாய்ந்த ராமஜெயத்தை கண்காணிப்பதில் கோட்டை விட்டது ஏன்? நடந்த கொலைக்கு காவல் துறையே பொறுப்பு’ என்று கொந்தளிப்பவர்கள், 'இவர்கள் விசாரணையில் எங்களுக்கு கொஞ்சமும் திருப்தி இல்லை. இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தால்தான் முறையான விரைவான விசாரணை நடக்கும்’ என்றும் கோரிக்கை வைக்கிறார்கள்.

ஆளும் கட்சிக்குத் தொடர்பா?

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் தங்கள் மீது வழக்குகள் எதுவும் பாய்ந்துவிடக் கூடாது என்பதற்​காக ஆளும்கட்சிக்கு  நெருக்கமான முக்கியப் புள்ளிகள் வசம் மிகப்பெரிய தொகையை ராம ஜெயம் கொடுத்திருந்தாராம். ஆனால், சமீபத்தில் அ.தி.மு.க-வில் நடந்த மாற்றங்கள் காரணமாக, 'இனி அவர்கள் உதவி தேவை இல்லை’ என்று பணத்தைத் திருப்பிக் கேட்டாராம். இந்த விவகாரம் முதல்வர் காது வரை போய் விடக்கூடாது என்று ஆத்திரமானவர்கள் தான், வெளிமாநிலக் கூலிப்படையை ஏவிக் கொலை செய்து விட்டதாகவும் பேச்சுக் கிளம்பியுள்ளது.

அதிர்ச்சியில் இருந்து மீளாத நேரு...

ராமஜெயத்தின் இறுதிச் சடங்குகள் கடந்த 10-ம் தேதி நடந்து முடிந்தன. தம்பியின் காரியங்கள் முடிந்த பிறகு நம்மிடம் பேசுவதாக நேரு தெரிவித்து இருந்ததால், அவரைத் தொடர்புகொண்டோம். ''இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளலைங்க. நான் எதுவும் பேச விரும்பலை...'' என்றார் சோகமாக.

இன்னமும் போலீஸ் ஒரே வட்டத்தைச் சுற்றிச்சுற்றி வருவதைப் பார்த்தால், இப்போதைக்குள் விசாரணை முடியாது என்றே தோன்றுகிறது!

- அ.சாதிக் பாட்ஷா,

'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு