Published:Updated:

இடிந்தகரையில் நல்லகண்ணு

மீண்டும் துடிக்கிறது கூடங்குளம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ணு உலைக்கான பணிகள் ஜெட் வேகத்தில் நடக்​கும்போதிலும், 'அணு உலையை இழுத்து மூடும்வரை ஓய மாட்டோம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் போராடி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கி இருக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலை​வரும் மூத்த அரசியல்​வாதி​​யுமான தோழர் நல்ல​கண்ணு. 

இதற்காக கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்​திரன், சட்ட மன்றக் கொறடா உலகநாதன், முன்னாள் எம்.பி-யான அப்பாத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எஸ்.வி.கிருஷ்ணன், பழனிச்சாமி, நெல்லை மாவட்டக் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகவேல், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் போன்ற முக்கிய நிர்வாகிகளுடன் கடந்த 9-ம் தேதி, இடிந்தகரை கிராமத்துக்கு வந்தார் நல்லகண்ணு. உண்ணாவிரதப் பந்தலில் இருந்த போராட்டக் குழுவினரை சந்தித்தவர், போராட்டத்தின் வீரியத்தைக் கண்டு வியந்து பாராட்டி இருக்கிறார்.

இடிந்தகரையில் நல்லகண்ணு

அப்போது, மேடையில் பேசிய போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன், ''ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் தோழர் நல்லகண்ணு, நமது போராட்டத்தின் முக்கியக் கட்டத்தில் இங்கே வந்திருப்பது தனிச்சிறப்புக்கு உரியது. அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது கொசுவைச் சுடுவதற்குப் பீரங்கியைப் பயன்படுத்துவது போன்றது. நாங்கள் அறவழியில் போராடி வருகிறோம். ஆனால், எங்களோடு இருந்த முகிலன், சதீஷ்குமார் போன்றவர்களை நக்ஸல்கள் என்று முத்திரை குத்துகிறது அரசாங்கம். அப்படியானால், ஆந்திரா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பது போல தமிழகத்திலும் நக்ஸல்கள் இருக்கிறார்களா என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.

வன்முறை துளியும் இல்லாமல் போராடும் எங்கள் மக்கள் மீது போடப்பட்டு இருக்கும் பொய் வழக்குகளை எல்லாம் அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். திக்கற்ற இந்த மக்களுக்கு நல்லகண்ணு அய்யாதான் வழிகாட்ட வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

அடுத்துப் பேசிய நல்லகண்ணு, ''நாங்கள் நிறையப் போராட்டங்களில் பங்கேற்று இருக்கிறோம். போராட் டங்களை நடத்தி இருக்கிறோம். சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, பல அடக்கு முறைகளைச் சந்தித்த அனுபவம் இருக்கிறது. காவல்துறை என்ன செய்யும், ராணுவம் எப்படி நடந்து கொள்ளும், அரசியல் எப்படிச் செயல்படும் என்பதைக் கொள்கை ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நாங்கள் அனுபவித்து உணர்ந்தவர்கள். தண்ணீர்கூட குடிக்காமல் ஒன்பது நாட்கள் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன். காலில் ஊசி ஏற்றும் அளவுக்கு காவல்துறை என்னிடம் கடுமையாக நடந்திருக்கிறது. இதுபோன்ற அனுபவங்கள் இருப்பதால்தான், அடக்குமுறைக்கு ஆளாகும் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறோம்.

இந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்​பட்டபோது, ஒவ்வொரு நாளும் பதறிப்போய் நிலைமையை விசாரித்துக்கொண்டே இருந் தேன். ஆனால், 6,000 போலீஸார் வந்தா​லும் இந்த மக்களையும் இந்த மண்ணையும் எதுவுமே செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும்.

இது, வரலாற்றில் ஒரு புதுமையான போராட்டம். புனிதமான போராட்டம். இது உங்களுக்கான போராட்டம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கான போராட்டம். உங்களுக்காக சட்டமன்றத்​திலும் வெளியேவும் நாங்கள் குரல் கொடுப்போம். தொடர்ந்து நாங்கள் நியாயத்​தின் பக்கம் இருப்போம்'' என்றார் திட்டவட்டமாக.

''போராடும் மக்களைத் திடீரென சந்திக்க வந்ததன் நோக்கம்என்ன?'' என்று நல்லகண்ணுவிடம்கேட்டோம்.

''எந்தத் தூண்டுதலும் இல்லா​மல்,யாரிடம் இருந்தும் பணம் பெறாமல் நேர்மையாக இவர்கள் நடத்தும் போராட்டத்தை அடக்குவதற்காக அரசு பொய் வழக்குகளைப் போடுகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக வந்திருக்கிறோம். நான், முதல்வரைச் சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறேன். அப்போது, இவர்கள் மீது போடப்பட்டு இருக்கும் வழக்குகளை வாபஸ் பெறும்படி வலியுறுத்துவேன்'' என்று சொன்னார்.

நல்லகண்ணு வருகை குறித்து போராட்டக் குழுவைச் சேர்ந்தவரான புஷ்பராயன், ''எங்கள் போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்துகொண்டு மூத்த தலைவரான நல்லகண்ணு வந்திருக்கிறார். அணுஉலைக்கு ஆதரவாக தமிழக மார்க்சிஸ்ட் கட்சி இருந்தபோதும், கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் இங்கே வர விருப்பம் தெரிவித்து இருக்கிறார். ஏற்கெனவே, அண்ணா ஹஜாரே குழுவைச் சேர்ந்த பிரசாந்த் பூஷண் வந்து ஆதரவு தெரிவித்து இருக்கிறார். எங்கள் போராட்டத்துக்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு பெருகுகிறது. அணு உலைகளே இல்லாமல் சர்வதேசத்துக்கும் இந்தியா முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நடக்கிற நிகழ்வுகள் அதனை நோக்கித்தான் இழுத்துச்செல்கின்றன'' என்றார் நம்பிக்கை யுடன்.  

நல்லகண்ணுவை அடுத்து, அண்ணா ஹஜாரே குழுவைச் சேர்ந்தவரான சுவாமி அக்னிவேஷ் கடந்த 11-ம் தேதி கூடங்குளம் வந்தார். அவர், ''கேரளாவில் மட்டும் அல்ல, தமிழகத்திலும் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை. இங்கு மாஃபியா ஆட்சி நடக்கிறது. அதனால்தான் அமைதி வழியில் போராடும் மக்கள் மீது தேசத்துரோகம், தேசத்துக்கு எதிராகப் போர் தொடுத்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப் போடுகிறார்கள்.  

நான் இங்கே வருவதற்கு முன், முதல்வர் ஜெயலலிதாவுக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பினேன். அதில், 'நானும் போராடும் மக்களுக்கு ஆதரவாக இடிந்தகரைக்குப் போகிறேன். நீங்கள் விருப்பப்பட்டால் என் மீதும் தேசத்துக்கு எதிராகப் போர் தொடுத்ததாக வழக்குப் போட்டு கைது செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டு இருக்கிறேன். அமைதி வழியில் அகிம்சையைக் கடைபிடித்து நல்ல நோக்கத்துக்​காகப் போராடும் உங்களுக்குத் துணையாக எப்போதும் நான் நிற்பேன்''என்று ஆக்ரோஷப்பட்டார்

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு