Published:Updated:

''சி.பி.ஐ-யை இழுத்து மூடுங்கள்!''

சீறிய ராஜஸ்தான் நீதிமன்றம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'அரசுக்கு வேண்டப்​பட்ட​வர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டால், சி.பி.ஐ. சலுகை காட்டுகிறது, கும்பிடு போடுகிறது. பிறகு அவர்களை சகல வசதிகளுடனும் நீதிமன்றக் காவலில் வைக்கிறது. ஆனால் ஒரு சில வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கு எந்த சலுகையும் கிடைப்பது இல்லை. எண்ணிலடங்கா நாட்கள் போலீஸ் காவல்தான் கிடைக்கிறது. சி.பி.ஐ. ஏற்படுத்தப்பட்ட நோக்கமும் குறிக்கோளும், சமரசங்களுக்கு அடி பணிந்துவிட்டன. எப்போது அரசியல் சுய லாபங்களுக்காக குற்ற​வாளிகளுக்கு சி.பி.ஐ. சலுகை காட்ட ஆரம்பித்துவிட்டதோ... அப்போதே அது தேவை இல்லை. சி.பி.ஐ-யை இழுத்து மூடுங்கள்’ - இப்படிச் சொல்லி வருத்தப்பட்டது யாரோ ஒரு மனித உரிமைப்

''சி.பி.ஐ-யை இழுத்து மூடுங்கள்!''

போராளியோ, வழக்கறிஞரோ அல்ல. உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மா! 

ஏன் அப்படிச் சொன்னார்?

2006-ல் நடந்த என்கவுன்டர் வழக்குதான் காரணம். ''ராஜஸ்தானைச் சேர்ந்த சூரு மற்றும் ஜுன்ஜுனு மாவட்டங்களில் இரண்டு 'லிக்கர் மாஃபியா’க்களின் கொடி பறந்தது. அதில் ஒரு குழுவை தாரா சிங் என்ற தாதாவும் இன்னொரு குழுவை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் வீரேந்தர் சிங் நயாங்லியும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இரண்டு குழுக்களுக்கும் இடையே நாளுக்கு நாள் பகையும் சண்டையும் வலுத்துக்கொண்டே போனது. இந்த நிலையில் வீரேந்தர் சிங் குழுவுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கினார், பி.ஜே.பி-யின் முன்னாள் அமைச்சரும், இப்போதைய எம்.எல்.ஏ-வுமான ராஜேந்தர் சிங் ரத்தோர். தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி,

''சி.பி.ஐ-யை இழுத்து மூடுங்கள்!''

ஏ.டி.ஜி.பி.யான ஏ.கே. ஜெயின் மூலம், தாரா சிங்கை என்கவுன்டரில் போட்டுத்தள்ள உத்தரவிட்டார் ரத்தோர். 'ஸ்பெஷல் ஆபரேஷன் குரூப்’ மூலம் அந்தக் காரியம் கச்சிதமாக நடந்து முடிந்தது'' என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.  

ஆனால், இந்த விவகாரம் குறித்து 2006-ல் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் ரத்தோரின் பெயர் இல்லை. அதனுடன் பதிவு செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் அவர் பெயர் இல்லை. அதன் பிறகு 2008-ல் நடந்த மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அசோக் கெஹ்லாட் அரசு பதவி ஏற்றவுடன், இந்த வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்தது. அப்போது சி.பி.ஐ. பதிவு செய்த முதல் குற்றப் பத்திரிகையிலும் ரத்தோரின் பெயர் இல்லை. தவிர, தாரா சிங்கின் மனைவி தாக்கல் செய்த இரண்டு மனுக்களிலும் ரத்தோரின் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து, ஏப்ரல் 2008-ல் சி.பி.ஐ. பதிவுசெய்த துணை குற்றப் பத்திரிகையில்தான் ரத்தோரின் பெயர் இடம் பிடித்தது. இதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி கொடுத்த திடீர்  நெருக்கடிதான் காரணம் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. அதனால் கொஞ்ச காலம் அந்த வழக்கு மேற்கொண்டு நகரவே இல்லை.

சமீபத்தில் இதே வழக்கில் தொடர்புடைய ஜக்ராம் எனும் ஹெட் கான்ஸ்டபிள், 'எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்படாமல் தன்னை 11 மாதங்களுக்கும் மேலாகச் சிறையில் வைத்​திருப்பதாகவும், வேண்டுமென்றே விசாரணையை அரசு தாமதப்படுத்துவதாகவும்’ ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணைக்கு

''சி.பி.ஐ-யை இழுத்து மூடுங்கள்!''

எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம்தான், சி.பி.ஐ. செய்திருக்கும் தில்லுமுல்லுகளைப் பார்த்துக் கொதித்துப்போனது. குற்றவாளிகளிடத்தில் காட்டும் வேறுபாடுகளையும் அரசுக்கு ஆதரவாக நடந்திருப்பதையும் கண்டுதான், நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மா முதல் பத்திக் கருத்தை வேதனையுடன் வெளிப்படுத்தி இருக்கிறார்.

யார் இந்த ரத்தோர்? ஏன் காங்கிரஸ் அரசு அவர் மீது பாய்கிறது?

''1970-களில் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்து, அதன் பின் ஜனதா தளக் கட்சி மூலம் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். சில காலங்களுக்குப் பிறகு பி.ஜே.பி-யில் சேர்ந்தார். ரஜபுத்திரர் இனத்தவர் என்பதால், அந்த இனத்தின் ஓட்டு வங்கி பி.ஜே.பி-க்குத் தேவைப்பட்டது. அதனால் ரத்தோருக்கு ஸீட் தரப்பட்டது. அவர் வென்று, ஷெகாவத் மற்றும் வசுந்தரா ஆட்சிக் காலங்களில் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்ந்தார். அமைச்சராக இருந்த காலங்களில் விவசாயிகளின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டது, குஜ்ஜார் இன மக்களின் கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றியது, உட்கட்சி பூசல் குழப்பங்களைச் சமாளித்தது என்று ஆக்கபூர்வமாகவே பல நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறார் ரத்தோர்.

ரத்தோரைச் சிறையில் தள்ளுவதன் மூலம் பி.ஜே.பி-க்குக் கிடைக்க இருக்கிற ரஜபுத்திர இன ஓட்டு வங்கியை உடைக்கலாம் என்றும், தாரா சிங்கின் இனமான ஜாட் இனத்தவரின் ஓட்டுக்களைப் பெற முடியும் என்று காங்கிரஸ் காய் நகர்த்தியது. ரத்தோர் கைது செய்யப்பட்டதற்கு இதுதான் அடிப்படை'' என்கிறார்கள் பா.ஜ.க-வினர்.

கோர்ட் பலமாகக் குட்டு வைத்தாலும், இதுவரை சி.பி.ஐ. அல்லது காங்கிரஸ் கட்சி எந்த விளக்கத்தையும் சொல்லவே இல்லை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும்?

- ந.வினோத்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு