Published:Updated:

அண்ணாச்சியை அமுக்க, மகனை வளைத்த போலீஸ்!

மும்பை டு சூலக்கரை

பிரீமியம் ஸ்டோரி
##~##

துவரை தி.மு.க-வின் எத்தனையோ முன்னாள் அமைச்சர்கள் கைதாகி வெளியே வந்துள்ளார்கள். கிட்டத்தட்ட எல்லோருமே நில அபகரிப்புப் பிரிவில்தான் வளைக்கப்பட்டனர். ஆனால், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கைதாகி இருப்பது, ஒரு கொலை வழக்கில். அதுவும் அவரே முன்வந்து சரண் அடையும் அளவுக்கு, போலீஸார் தங்கள் வலையை இறுக்கமாகப் பின்னிவிட்டனர். 

போஸ்ட் மாஸ்டர் லட்சுமணன் கொலை விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லி கைது செய்ய, போலீசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்பதைக் கடந்த ஜூ.வி. இதழில் (மதுரை மண்டலம் மட்டும்) 'கொலையாளியைக் காப்பாற்றினாரா முன்னாள் அமைச்சர்?’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்த இதழ், புதன்கிழமை விற்பனைக்கு வரும் முன்னரே, அவரைக் கைது செய்து விட்டது விருதுநகர் போலீஸ்.

அண்ணாச்சியை அமுக்க, மகனை வளைத்த போலீஸ்!

தி.மு.க., அ.தி.மு.க.எந்தக் கட்சி தமிழ்நாட்டை ஆண்டாலும் அண் ணாச்சிஎந்தக் கட்சியில் இருக்கிறாரோ, அதுதான் விருதுநகரைப் பொறுத்தவரை ஆளும்கட்சி. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் எதிர்க் கட்சியினர் இவருக்கு அடக்கமாகவே இருப்பார்கள். அதனால்தான், தி.மு.க-வின் பல அமைச்சர்கள் சிறைக்குப் போகவேண்டிய சூழலிலும், இவர் மட்டும் தப்பிவந்தார். எப்படி அண்ணாச்சியைப் பிடிப்பது என்று போலீஸார் மூளையைக் கசக்கிய நேரத்தில்தான், சிக்கியது சாகுல் ஹமீது விவகாரம்!

அருப்புக்கோட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரான சாகுல் ஹமீது, போஸ்ட் மாஸ்டர் லட்சுமணன்

அண்ணாச்சியை அமுக்க, மகனை வளைத்த போலீஸ்!

என்பவரைக் கொலை செய்த வழக்கில் கைதாகி, மதுரை சிறையில் இருக்கிறார். ''போஸ்ட் மாஸ்டர் லட்சுமணனின் மனைவி மாரியம்மாளுக்கும் சாகுல் ஹமீதுவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அதை லட்சுமணன் கண்டித்தார். எனவே, அவரைக் கொலை செய்ய சாகுல் ஹமீதும் மாரியம்மாளும் சேர்ந்து திட்டம் போட்டனர். லட்சுமணனையும் மாரியம்மாளையும் சமாதானம் பேசுவதற்காக என்று சொல்லி, 30.9.2007 அன்று அருப்புக்கோட்டைக்கு வரவழைத்தார் சாகுல் ஹமீது. இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு சென்றார். லட்சுமியாபுரம் அருகில் செல்லும்போது பெரிய டார்ச் லைட்டால் லட்சுமணனின் பின்னந்தலையில் பலமாகத் தாக்கி, அவரைக் கீழே தள்ளி, அவர் உடல் மீது காரை ஏற்றி நசுக்கி இருக்கிறார்கள். அதன்பிறகு, பிரபல அரசியல்வாதி ஒருவரிடம் தஞ்சமடைந்தார் சாகுல். அதனால், கைது செய்யப்படாமல் தப்பினார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் மீண்டும் இந்த வழக்கு தோண்டி எடுக்கப்பட்டது. சாகுல் ஹமீது, மாரியம்மாள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்கள். அதன்படி, சாகுல் ஹமீதுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்'' என்று விருதுநகர் கூடுதல் எஸ்.பி. சாமிநாதன் நம்மிடம் கூறி இருந்தார்.

இந்த விவகாரம் வெளியே கசியவும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார் அண்ணாச்சி. ஆனால், ஏப்ரல் 12-ம் தேதிக்கு அந்த மனுவின் விசாரணையைத் தள்ளி வைத்தனர் நீதிபதிகள். முன்ஜாமீன் கிடைப்பது தாமதம் ஆனதால், மும்பைக்குச் சென்று விட்டதாக அவரது ஆதரவாளர்கள் பேசிக்​கொண்டனர். இதையடுத்து, அந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டு, முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டன.

அண்ணாச்சியை அமுக்க, மகனை வளைத்த போலீஸ்!

உடனே, மேலிடத்தில் இருந்து, 'ராமச்சந்திரனைக் கைது செய்யலாம்... இதுவரை ஏன் இந்த வழக்கைச் சரியாகக் கையாளவில்லை?’ என்று உயர் அதிகாரிகளிடம் இருந்து கேள்வி எழுப்பப்பட்டதாம்.

அதனால், விருதுநகர் எஸ்.பி. நஜ்மல் கோதாவின் நேரடிக் கண்காணிப்பில், கூடுதல் எஸ்.பி. சாமிநாதன் தலைமையிலான தனிப்படை வேகமெடுத்தது. அண் ணாச்சியைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றதும், வேறு ஓர் அஸ்திரத்தைக் கையில் எடுத்தது. அதன்படி, ராமச்சந்திரனின் தம்பி சுப்பாராஜ் அல்லது மகன் ரமேஷைக் தங்கள் கஸ்டடிக்குக் கொண்டு வருவது என்று முடிவு செய்தார்கள்.

அருப்புக்கோட்டை பைபாஸ் ரோட்டில் பஞ்சு மில் பங்களாவில் குடியிருக்கும் மகன் ரமேஷ் வீட்டுக்குள் ஏப்ரல் 10-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நுழைந்தது போலீஸ். விசாரணைக்கு என்று அவரை அழைத்துச் சென்றனர். அருப்புக்கோட்டையில் இருந்து சாத்தூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பல இடங்களுக்கும் டெம்போ வேனில் வைத்து அலைக்கழித்தனர்.

ராமச்சந்திரனின் மனைவி ஆதிலட்சுமியும், ரமேஷின் மனைவி பவித்​ராவும் விருதுநகர் எஸ்.பி. ஆபீஸுக்கு வந்து கதறத் தொடங்கியதும், 'ரமேஷை விசாரணைக்குத்தான் அழைத்து வந்து இருக்கிறோம்’ என்று சொல்லிச் சமாளித்தனர். தகவல்அறிந்த தி.மு.க. புள்ளிகள் ஆளாளுக்குக் காரை எடுத்துக்கொண்டு பறக்க ஆரம்பித்தார்கள். ரமேஷைக் கொண்டுசெல்லும் போலீஸ் டெம்போ வேனைத் தொடர்ந்து பலரும் சென்றார்கள். 'ரமேஷ் மீது கஞ்சா கேஸ் போடப்போகிறார்கள்’ என்று கிளம்பிய வதந்தி, ராமச்சந்திரனுக்குப் போனது. அதுவரை, போலீஸுக்குத் தண்ணி காட்டி வந்தவர், கூடுதல் எஸ்.பி. சாமிநாதனை போனில் தொடர்புகொண்டார். 'நான் மும்பையில் இருக்கிறேன். மதுரைக்கு விமானத்தில் வந்து மாலை 5 மணிக்கு சரண் அடைகிறேன்... என் மகனை விட்டுவிடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். ஆனால், மும்பையில் இருந்து அவர் விமானம் ஏறுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. அதாவது,  ராமச்சந்திரனைத் 'தலைமறைவுக் குற்றவாளி’ என்று அறிவித்து பாஸ்போர்ட்டை முடக்கும்படி ஒரு சுற்றறிக்கை தயாரித்து, எல்லா விமான

அண்ணாச்சியை அமுக்க, மகனை வளைத்த போலீஸ்!

நிலைங்களுக்கும் ரகசியமாக அனுப்பி இருந்ததாம் போலீஸ். இதை வைத்துக்கொண்டு மும்பை அதிகாரிகள் தடை போட்டார்கள். தகவல் தமிழகத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு, முந்தைய சுற்றறிக்கையை ரத்து செய்த தகவலை அனுப்பினர். அதன்பிறகே, ராமச்சந்திரனை விமானம் ஏற மும்பை அதிகாரிகள் அனுமதித்தனர்.  

மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தவர், அங்கே இருந்து ஜெட் ஏர்வேஸ் மூலம் மாலை 3.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார்.

அதற்குள், விருதுநகர் மாவட்டத் தி.மு.க-வினர் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஏர்போர்ட்டில் திரண்டு நின்றனர். கூடுதல் எஸ்.பி. சாமிநாதன் தலைமையிலான டீமும் கைது செய்யத் தயாராக இருந்தனர். விமான நிலையத்துக்கு வெளியே காரில் காத்திருந்த விருதுநகர் எஸ்.பி. நஜ்மல் கோதா, ''விமானநிலையத்தில் கைது செய்தால் பிரச்னை ஏற்படலாம்... இப்போது கைது செய்ய வேண்டாம்'' என்று, போலீஸ் டீமுக்கு உத்தரவு போட்டார்.

அதையடுத்து, விமான நிலையத்தில நிருபர்களுக்குப் பேட்டி கொடுத்த ராமச்சந்திரன், ''இது, அ.தி.மு.க. அரசின் பழி வாங்கும் நடவடிக்கை. விசாரணைக்காக அழைத்து இருக்கிறார்கள். அதற்காக வந்திருக்கிறேன்'' என்று சொல்லி விட்டு அவரது சொகுசுக் காரில் புறப்பட்டார். தி.மு.க-வினர் 40 கார்களில் பின்தொடர, ராமச்சந்திரனின் கார் சென்றது. அவர் காருக்கு முன்னால் போலீஸார் சென்றனர். திடீரென்று, விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரன்பட்டி கிராமம் அருகே காரை நிறுத்தச் சொன்ன போலீஸார், கைது செய்வதாகச் சொல்லி, ராமச்சந்திரனை டெம்போ வேனில் ஏற்றிக்கொண்டனர்.

கட்சியினரின் வாகனங்களைத் தடுத்து நிறுத்திவிட்டு ராமச்சந்திரனை மட்டும் சூலக்கரை காவல் நிலையத்​துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே, கூடுதல் எஸ்.பி. சாமிநாதன், சாத்தூர் டி.எஸ்.பி. சின்னையா ஆகியோர் விசாரணையை ஆரம்பித்தனர்.

'ஒன்றியச் செயலாளர் சாகுல் ஹமீது இப்படிச் செய்வான்னு நான் எதிர்பார்க்கலை. உங்ககிட்டச் சொல்லி என்ன ஆகப்போகுது... நீங்க செய்றதைச் செய்யுங்க. நான் கோர்ட்ல பார்த்துக்கிறேன்’ என்று சொல்லி அமைதியாகி விட்டாராம். அடுத்து, 'என் மகன் ரமேஷ§க்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்ககிட்ட சொன்ன மாதிரி நான் நடந்துக் கிட்டேன். அவனை விட்டுருங்க’ என்று சொல்லித் தழுதழுத்தாராம்.

ராமச்சந்திரன் மீது 302 (கொலை) மற்றும் 201 (அதிகார துஷ்பிரயோகம் செய்து உண்மை மற்றும் சாட்சியங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டதால், விருதுநகர் ஆயுதப்படை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரமேஷை, சூலக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு வேனில் அழைத்து வந்தார்கள். மனைவி ஆதிலட்சுமி, மருமகள் பவித்ராவையும் சந்திக்க அனுமதித்தனர். அதன்பிறகு, இரவு 8 மணிக்கு சாத்தூர் ஜே.எம். 2 மாஜிஸ்திரேட் சுபத்ரா முன்பு ஆஜர்படுத்தி, நள்ளிரவில் மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர். ஜென்டில்மேன் அக்ரிமென்ட்படி, ரமேஷ் 'விடுதலை’ செய்யப்பட்டார்.

சூலக்கரை போலீஸ் ஸ்டேஷனில் இருந்த ராமச்சந்திர​னிடம் பேசியபோது, ''அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் தி.மு.க-காரர்கள் மீது வரிசையாகப் பொய் வழக்குப் போடுகிறார்கள். தலைவர் கலைஞர் வழிகாட்டுதலின்படி, சட்ட ரீதியாக இந்த வழக்கை சந்திப்பேன்'' என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார்.

இந்த வழக்கில் சிக்கியிருக்கும் அண்ணாச்சியை லேசில் வெளியே விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறது போலீஸ். அதனால், தூங்கிக்கிடந்த வழக்குகளை எல்லாம் தூசி தட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஆக, அண்ணாச்சிக்கு இன்னும் கொஞ்ச நாளைக்குச் சிக்கல்தான்!

- எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு