Published:Updated:

''10 ஐ.ஏ.எஸ்ஸுக்குப் பிறகுதான் அன்புமணி கையெழுத்துப் போட்டார்!''

அடுத்த சிக்கலில் பா.ம.க.!

பிரீமியம் ஸ்டோரி
##~##

ன்புமணி ராமதாஸுக்கு அடுத்த சிக்கல் சி.பி.ஐ. வடிவில் வந்துள்ளது. அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் நடந்த முருகானந்தம் கொலை வழக்கில் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகிய இருவரின் பெயர்​களும் அடிபட்டன. ராமதாஸின் தம்பி சீனிவாசன் உள்ளிட்ட 17 பேரைக் கைது செய்த சி.பி.ஐ., செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முதலாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. 'இரண்டாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கிறோம்’ என்றும் செக் வைத்துள்ளது. இந்த நிலையில்... டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகை ஒன்றில், அன்புமணி பெயர் இடம் பெறவே, பா.ம.க. வட்டாரம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 

என்ன பிரச்னை?

டெல்லி சி.பி.ஐ. வட்டாரத்தில் விசாரித்தோம். ''மத்திய அரசில் கடந்த ஆட்சியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் அன்புமணி ராமதாஸ். 2008-ம் ஆண்டு மத்தியப் பிரதேச

''10 ஐ.ஏ.எஸ்ஸுக்குப் பிறகுதான் அன்புமணி கையெழுத்துப் போட்டார்!''

மாநிலம் இந்தூர் என்ற ஊரில் இருக்கும் இன்டக்ஸ் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையத்​தில் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அன்புமணி அனுமதி வழங்கி இருக்கிறார். இதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில்​தான் நாங்கள் வழக்குப் பதிவு செய்தோம். இந்த வழக்கில் அன்புமணி ராமதாஸை முதல் குற்றவாளியாகவும், அவருக்கு உதவியாக இருந்த மற்ற ஒன்பது பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், சுகாதாரத் துறை அமைச்​சகத்தின் இயக்குனர் கே.வி.எஸ்.ராவ், சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செக்ஷன் ஆபீஸர் சுதர்சன்குமார், டெல்லியில் இயங்கி வரும் சப்தர்ஜங் மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் ஜே.எஸ்.துபியா, திபேந்திரகுமார் குப்தா ஆகியோர் மீதும்  குற்றச்சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். மேலும், இன்டக்ஸ் மருத்துவக் கல்லூரியின் தலைவர், டீன், கல்லூரியின் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 2005-ம் மாயங் நலச்சங்கம் என்ற ஒரு தனியார் அமைப்பு இந்தூரில் மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவக் கல்லூரியும் தொடங்கத் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக அரசிடம்

''10 ஐ.ஏ.எஸ்ஸுக்குப் பிறகுதான் அன்புமணி கையெழுத்துப் போட்டார்!''

அனுமதியும் கோரி இருக்கிறது. அப்போது அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், ஓர் ஆண்டுக்கு மட்டும் ஒப்புதல் அளித்திருக்கிறார். உடனடியாக அவர்கள், இன்டக்ஸ் மருத்துவக் கல்லூரியைத் தொடங்கினார்கள். இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அரசிடம் அனுமதி கோரியபோது, மருத்துவக் கவுன்சிலில் இருந்து ஒரு குழு அந்தக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழு ஆய்வு செய்தபோது, கல்லூரியில் போதிய பேராசிரியர்களோ, மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான வசதிகளோ இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. மருத்துவக் கவுன்சில் குழுவினர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அட்ஹாக் கமிட்டி, 'கல்லூரியின் அனுமதியைப் புதுப்பிக்க வேண்டாம்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு சிபாரிசு செய்திருக்கிறது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்டக்ஸ் மருத்துவக் கல்லூரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு கல்லூரி நிர்வாகம் விளக்கம் கொடுத்தது. அதன் பிறகுதான் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தலைமை மருத்துவர்கள் துபியா, குப்தா ஆகியோர் தலைமையில் ஒரு குழுவை சுகாதாரத் துறை அமைச்சகம், இன்டக்ஸ் மருத்துவக் கல்லூரியை மறு ஆய்வு செய்ய அனுப்பி இருக்கிறது. அந்தக் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு அன்புமணி ராமதாஸ் அனுமதி அளித்து விட்டார்.

கல்லூரிக்கு அனுமதி அளித்த பிறகு மருத்துவக் கவுன்சில் தாங்களாகவே ஓர் ஆய்வுக் குழுவை இன்டக்ஸ் கல்லூரிக்கு அனுப்பி ஆய்வு நடத்தியபோது, மறுஆய்வுக்காக செய்த சப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள்,  ஆய்வு செய்யாமலேயே அறிக்கை கொடுத்து இருப்பது தெரிந்தது. இது, அத்தனையும் 36 பக்கக் குற்றப் பத்திரிகையாக ஆதாரங்களுடன் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறோம். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அடுத்தடுத்த நடவடிக்கை தொடங்கும்'' என்று சொன்னார்கள்.

சி.பி.ஐ. தாக்கல் செய்திருக்கும் புகார்களுக்கு விளக்கம் கேட்டு அன்புமணி ராமதாஸை சந்திக்கச் சென்றோம். ''வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்று இருப்பதால், நான் பேசுவது சரியாக இருக்காது'' என்று அன்புமணி கூறினார்.

அவர் சார்பில், பா.ம.க-வின் மாநில இளைஞர் அணி செயலாளர் அறிவுச்செல்வன் பேசினார். ''ஐந்து வருடங்களுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த விவகாரத்தில், எங்கள் சின்ன ஐயா அன்புமணி மீது எந்தத் தவறும் கிடையாது. 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பார்த்து சரியான ஃபைல் என்று முடிவு செய்து கையெழுத்துப் போட்ட பிறகுதான், அன்புமணி கையெழுத்துப் போட்டிருக்காரு. அவரைப் பொறுத்தவரை, தப்பு என்றால்... அது யார் செஞ்சாலும் தப்புதான். எந்தக் காலத்திலும் அவர் தவறுகளுக்குத் துணைபோனது கிடையாது. இந்த நிலையில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள வழக்கு, முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான். எங்களது 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கை... புதிய பாதை...’ என்ற வளர்ச்சியை மாநிலத்திலும் மத்தியிலும் உள்ள ஒரு சில கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் எல்லா இடங்களிலும் எங்கள் ஐயா மீதும், சின்ன ஐயா மீதும் பழி வாங்கும் படலத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அத்தனை வழக்குகளில் இருந்தும் மீண்டு வருவோம்'' என்றார்.

நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

- கே.ராஜாதிருவேங்கடம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு