Published:Updated:

''முதல்வருக்குத் தெரியாமலா மணல் கொள்ளை நடக்கிறது?''

வறட்சியை நோக்கி தமிழகம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

''தமிழகத்தின் ஆற்றுப்படுகைகளில் ஆளும் கட்சியினர் கணக்கின்றி மணலை அள்ளி விற்பனை செய்து, நமது ஆற்று வளத்தைச் சூறையாடி வருகிறார்கள். தமிழக அரசின் மிக மோசமான மக்கள் விரோத நடவடிக்கையாகவே இந்தச் செயல் விளங்குகிறது'' - இப்படி ஒரு காட்டமான அறிக்கையை வைகோ வெளியிட்டு இருந்தார். 

மணல் விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?

ம.தி.மு.க.வின் இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலியிடம் பேசினோம். ''தமிழகத்தில் எந்த ஆட்சி இருந்தாலும் மணலைப் பொறுத்தவரை கோவையைச் சேர்ந்த ஒரு தனிமனிதரின் கட்டுப்​பாட்டில்தான் இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, ஒட்டுமொத்த மணல் கான்ட்ராக்ட்டும் அந்தக் கோவைப் பிரமுகரின் கைக்கே மீண்டும் போய்விட்டது. இப்போது மணல் விற்பனையில், அவர்கள் வைப்பதுதான் விலை. மணலை பொக்லைன் இயந்திரம் மூலமாக அள்ளக் கூடாது என்று சட்டமே இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் பொக்லைனை வைத்துத்தான் லோடு லோடாக மணலைக் கொள்ளையடித்து வருகிறார்கள். இது எல்லாம் முதல்வருக்குத் தெரியாமலா நடக்கும்? ஆளும் கட்சியின் ஆசியோடுதான் தமிழகத்தில் மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது.
 

''முதல்வருக்குத் தெரியாமலா மணல் கொள்ளை நடக்கிறது?''

கிராமங்களில் இருக்கும் குளம், குட்டை, கண்மாய்களைக்கூட ஆளும் கட்சியினர் விட்டுவைக்கவில்லை. எல்லா இடங்களிலும் மணல் மற்றும் மண்ணைச் சுரண்ட ஆரம்பித்து​ விட்டார்கள். மணல் மற்றும் மண் கொள்ளையை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்தவில்லை என்றால், எங்கள் தலைவர் வைகோவின் அனுமதியோடு தமிழகம் முழுவதும் தீவிரப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம்'' என்று கொட்டித் தீர்த்தார்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்​செல்வத்தை

''முதல்வருக்குத் தெரியாமலா மணல் கொள்ளை நடக்கிறது?''

சந்தித்தோம். ''நாங்க யாருமே நேரடியாக ஆற்றில் போய் மணல் அள்ள முடியாது. ஒட்டுமொத்த மணல் கான்ட்ராக்ட்டும் ஒருத்தருக்குத்தான் கொடுத்திருக்காங்க. அவங்க மணலை அள்ளிவந்து கரை ஓரத்தில் குவிச்சு வைப்பாங்க. ஒரு யூனிட்டுக்கு 2,000 ரூபாய் கொடுத்து நாங்க அவங்களிடம் இருந்து மணலை வாங்கிட்டு வர்றோம்.

மணல் விலையைக் குறைக்கணும் என்றால், அரசாங்கம் நேரடியாக மணல் விற்பனை செய்ய வேண்டும். கனிமவளத் துறையில் பணத்தைச் செலுத்தி விட்டு, நேரடியாக மணலை அள்ளிக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அப்படிச் செய்தால், இடைத் தரகர்களுக்குக் கொடுக்கும் பணம் மிச்சமாகும். மக்களுக்கும் குறைந்த விலையில் மணல் கிடைக்கும். மணல் வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று, நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வருகிறோம். அப்படி மணல் வாரியம் அமைக்கப்பட்டால் மட்டுமே, இதுபோன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்'' என்றார்.

தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்திடம் பேசினோம். ''மணலைப் பொறுத்தவரை எல்லாமே முறைப்படி டெண்டர் விடப்பட்டுதான் அள்ளப்படுகிறது. எங்கேயும் விதிமீறல்கள் நடக்கவில்லை. அப்படி விதிமீறல் இருப்பது என் கவனத்துக்கு வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன். மணல் வாரியம் அமைப்பது பற்றி இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை. கிராமங்களில் உள்ள குளங்களிலோ, கண்மாய்களிலோ மணலையோ, மண்ணையோ அள்ளுவதற்கு யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. அப்படி எங்காவது நடக்கிறதா என்பதை உடனே விசாரிக்கிறேன்.  அம்மா ஆட்சியில்தான் நீர்வளம் பாதிக்கப்படாமல் முறையாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. சிலர், தேவைஇல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களைச் சொல்கிறார்கள். உண்மை நிலை மக்களுக்குத் தெரியும்'' என்று சொன்னார்.

தி.மு.க. ஆட்சியில் மணல் கொள்ளை நடக்கிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஆவேசமாகப் பேசியவர் ஜெயலலிதா. இப்போது அவரது ஆட்சியிலும் அதே புகார் சொல்லப்படுகிறது. என்ன செய்யப்​போகிறார் முதல்வர்?

- கே.ராஜாதிருவேங்கடம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு