Published:Updated:

வாழ்வின் சில உன்னதங்கள்

ஜூ.வி. நூலகம்

பிரீமியம் ஸ்டோரி

 விட்டல்ராவ், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு,

(தி.நகர் அஞ்சலகம் அருகில்) பாண்டி பஜார், சென்னை.17. விலை

வாழ்வின் சில உன்னதங்கள்

200

ஹிக்கின் பாதம்ஸ், லேண்ட் மார்க், ஒடிசி போன்ற புதிய புத்தகக் கடைகளுக்கு மட்டும்தான் வரலாறு சொல்ல வேண்டுமா? பழைய புத்தகக் கடைகளுக்கு ஏதாவது பாரம்பரியம் உண்டா?

'உண்டு’ என்று சாதாரணமாகச் சொல்ல வில்லை விட்டல்ராவ். ' இந்தப் பழைய புத்தகக் கடைகளில் கால்கடுக்க நின்று பார்த்து, வாங்கித் தூக்கிச் சென்றேனே... அதுதான் என்னுடைய வாழ்வின் சில உன்னதமான தருணங்கள்’ என்றும் சொல்கிறார்!

வாழ்வின் சில உன்னதங்கள்

''முதலியார் கடையில் நான் மௌனமாக நின்றபடி கண்களால் ஆராய்வேன். 'தினமும் வந்து நிற்கிறியே! என்னமோ பெருசா வாங்கறாப்பல. ஓரு ரூபாய்க்கு யாவாரம் பண்ணியிருப்பியா எங் கடையில?’ என்றார் முதலியார்.

'என்ன இருக்குன்னு பார்க்கறேன்?’

'இது தேவைப்படுமா?’ என்று கூறிக் கொண்டே ஒரு புத்தகக் கட்டை வெளியே எடுத்துப் போட்டார். மக்கிப் போன காகித மணம் குப்பென்று வீசியது. பிரித்துப் பார்த்தேன். 200 வருடங்களுக்கு முந்தைய சங்கதிகளைச் சொல்லி இருக்கும் 12 வருடங்களுக்கு முன் பதிப்பிக்கப்பட்ட நூல்கள். நூலின் முகவிலை மூன்று ரூபாய். பேரம் பேசியதில் முதலியார் கணக்கிட்டு கடைசியில் எழுபத்தைந்து பைசாவுக்குக் கொடுத்தார். அன்றைய கணக்கில் அது அதிகபட்ச விலையாகவே​பட்டது எனக்கு!'' என்று விட்டல்ராவ் வர்ணிக்கும் காட்சி நடந்த இடம், சென்னை மூர் மார்க்கெட். சுமார் 52 ஆண்டுகளுக்கு முன்னால்!

##~##

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அடுத்து​ கம்பீரமாக நின்ற மூர் மார்க்கெட் கட்டடம் உலகப் பொக்கிஷங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய இடமாக இருந்தது. முதலியார், நாயக்கர், ஐயர் என்று அழைக்கப்பட்ட மூன்று பேர் அங்கே இருந்து உலகத்தையையே கூவிக்கூவி விற்றுள்ளார்கள். ஒரு நாள், திட்டமிட்டு அந்த இடம் எரிந்தது. இதைக் கேள்விப்பட்டு சொந்த வீடு எரிந்த வருத்தமாக விட்டல்ராவ் அங்கு ஓடிப்போய் பார்த்ததை விவரிக்கிறார். நாயக்கர், ஐயர், முதலியார் கடை இருந்த இடங்களைத் தேடித்தேடிப் பார்க்கிறார். எல்லாம் கரிக்கட்டையாய் இருக்கின்றன. இந்தக் கடை வைத்து இருந்தவர்கள் ஒவ்வொருவர் வீட்டையும் தேடிச்சென்று பார்க்கிறார். நாயக்கரை பார்க்கச் செல்கிறார். தன்னுடைய கடையும், தான் சேகரித்து​ வைத்திருந்த புத்தகங்களும் எரிந்துவிட்டன என்பதைக் கேள்விப்பட்டதுமே சித்தப்பிரமை பிடித்து நோய் பீடித்து விட்டார் நாயக்கர். 'ஃபார் யு தி வார் இஸ் ஓவர்’ என்ற உலகப் புகழ் பெற்ற போரும் ஓவியமும் ஆன புத்தகத்தை விளக்கமாய் சொல்லி விற்கக்கூடிய நாயக்கர், சொந்த மனைவியைக்கூட அடையாளம் தெரியாதவராக மாறி நின்ற வெப்பக் காட்சி... புத்தகங்களின் மீதான விட்டல்ராவின் காதலை வெளிப்படுத்துகிறது.

மூர் மார்க்கெட்டில் அசைக்க முடியாத விற்பனை​யாள​ராக இருந்த ஐயர், அதன் பிறகு லஸ் கார்னர் ஆழ்வாரிடம் தினக்கூலி வேலைக்கு வந்து சேர்ந்ததும்... தன்னுடைய பழைய கஸ்டமர்கள் கண்டுபிடிக்கும்போது, 'நான் ஐயர் இல்லைங்க’ என்று சொல்வதும் குணச்சித்திரக் காட்சிகள். இந்த மகத்தான மனிதர்கள் மூலமாக, தான் என்னென்ன புத்தகங்கள், பத்திரிகைகள், இதழ்கள் வாங்கினேன் என்று விட்டல்ராவ் சொல்லும் பட்டியலைப் பார்க்கும்போது சாலையோரப் பல்கலைக்கழகங்களாகவே அதனைச் சொல்லத் தோன்றுகிறது!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு