Published:Updated:

தமிழர்களை வெளியேற்ற 'மூன்று அம்சத் திட்டம்'?

மிரட்டும் கேரளம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

முல்லைப் பெரியாறு குறித்த இறுதி அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் இருக்​கும் நிலையில், கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள, தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்​சோலை ஆகிய பகுதிகளுக்கு விசிட் அடித்தோம். மூன்று வகையான சிக்கல்களில் தமிழர்கள் சிக்கித் தவிப்பதை உணர முடிந்தது. 

ஒன்று: மறுக்கப்படும் உரிமைகள்

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கேரள மாநிலச் செயலாளரான வெள்ளத்துரை பாண்டி இதுபற்றி நம்மிடம் பேசினார். ''முல்லைப் பெரியாறு விவகாரத்துக்குப் பிறகு, தமிழர்களை இரண்​டாம்​தரக் குடி​மக்களாக நடத்தத் தொடங்கி ​விட்டது கேரள அரசு. 200 வருடங்களுக்கும் மேலாக, இன்னும் சொல்லப்போனால் கேரள மாநிலம் உருவாகும் முன்னரே, இங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். வருவாய் அலுவலகங்களில் பிள்ளை​​களின் படிப்புக்காகவும், உயர்கல்வி பெறவும் நிரந்தரக் குடியிருப்புச் சான்றிதழ் கேட்டால், தற்காலிக இருப்பிடச் சான்றிதழ்தான் வழங்குகிறது கேரள அரசு. '1951-ல் இருந்து இங்கு வாழ்வதற்குச் சான்று கொடுத்தால்தான் நிரந்தரக் குடியிருப்புச் சான்று வழங்க முடியும்’ என்கிறார்கள். தமிழ்வழிக் கல்வி முறையில் பயிலும் தமிழ்க் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க, மலையாள ஆசிரியர்களையே இப்போது நியமனம் செய்கிறார்கள். அதனால், தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. இது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு. இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறித்ததுபோலவே நாங்களும் உணர்கிறோம்'' என்று வேதனைப்பட்டார்.

தமிழர்களை வெளியேற்ற 'மூன்று அம்சத் திட்டம்'?

இரண்டு: பொய் வழக்குகள்

தமிழர்களை வெளியேற்ற 'மூன்று அம்சத் திட்டம்'?

முல்லைப் பெரியாறு பிரச்னையின்போது ஆட்டோ ஓட்டுனர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என ஒரு லட்சம் தமிழர்கள் மூணாறில் ஊர்வல​மாகச் சென்றது கேரள அரசைக் கடுப்படையச் செய்தது.  விடுதலைச் சிறுத்தை​கள் கட்சியின் இடுக்கி மாவட் டச் செயலாளர் ஜெயபால், ''மூணாறில் அமைதி ஊர்வலம் சென்ற 102 தமிழர்கள் மீது, தேச விரோதச் செயலில் ஈடுபட்​டதாகவும் மேலும் பல பிரிவுகளிலும் பொய் வழக்குப் போட்டார்கள், கேரள போலீஸார். இதில், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் சூட்டுசாமியின் மனைவி மல்லிகா மீது கிரிமினல், கூட்டுச்சேர்த்தல், தலைமை தாங்குதல் என பல பிரிவுகளில் முதல் குற்றவாளியாக்கி உள்ளார்கள்.

இன்றைய நிலவரப்படி, தமிழர்​கள் கொடுக்கும் புகார்களைக் கேரள போலீஸ் கண்டுகொள்வதே இல்லை. கடந்த மாதம், முல்லைப் பெரியாறு போராட்டச் செய்தி​களை வெளி​யிட்டதால், மூணாறு நிருபர் மன்னர் மன்னனை கேரளத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கிவிட்டார்கள். இதுபற்றி அவர் போலீஸில் புகார் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை'' என்று வருந்தினார்.

மூன்று: விரட்டும் நடவடிக்கை

தமிழர்களின் குடியிருப்புகளைக் காலி செய்யச் சொல்வதும், தமிழர்​களின் நிலங்களை அரசுநிலம் என்று பறிப்பதும் தொடர்கிறது. இதுபற்றி, இடுக்கி மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் தெய்வேந்திரன், ''இந்தியாவில் வேறு எங்குமே இல் லாத ஒரு திட்டத்தை முல்லைப் பெரியாறு பிரச்னைக்குப் பிறகு கேரளஅரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் ஒன்பது பேர்கொண்ட குழுவை உம்மன்சாண்டி அமைத்து, 'அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார். கேரளத்தில் வாழும் தமிழர்களின் குடியி​ருப்புகள், காலங்காலமாக அவர்கள் பயன்​படுத்தி வரும் பொது இடங்கள் மற்றும் விவசாய நிலங்களைப் பறிப்பதுதான் அவர்க​ளின் நோக்கம்.

தமிழர்கள் குடியிருந்த சிவன்மலை - பார்வதி மலைப் பகுதியில் வாழ்ந்த 2500-க்கும் மேற்பட்ட தமிழர்களின் குடியிருப்புகளை சமீபத்​தில் அகற்றி, அவர்களின் விவசாய நிலங்களையும் பறித்து விட்டார்கள். மதிகெட்டான் சோலை என்ற பகுதியில் விவசாயம் செய்து வந்த 4,000 குடும்பங்களை வெளியேற்றி விட்டு, அங்கு நேஷனல் பார்க் கட்டப்போவதாக கேரள அரசு அறிவித்தது. அடுத்து கோவிலூர், டாப் ஸ்டேஷன் போன்ற பகுதிகளில் வாழ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை வெளியேற்றிவிட்டு, அங்கு 8,000 ஏக்கரில் நீலக் குறிஞ்சி வகைப் பூக்களை பயிரிட்டு, 'தேசிய நீலக்குறிஞ்சிப் பூங்கா’ அமைக்கப்போவதாக அரசு அறிவித்து உள்ளது. இங்கே கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் தமிழர்களின் நிலத்தை எப்படி பறிக்கலாம்?

மேலும், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான உடும்பன்சோலை, பீர்மேடு, தேவிகுளம் ஆகிய மூன்று பகுதி​களையும் பாதுகாக்கப்பட்ட வனச்சரணாலயமாக அறிவித்து இருக்கிறது கேரள அரசு. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், தமிழர்களை ஒட்டுமொத்தமாக கேரளாவை​ விட்டு வெளியேற்ற, கேரள அரசு தீவிரம் காட்டுவது உறுதியாகிறது'' என்று கொதித்தார்.

இதைத் தடுத்து நிறுத்தப்போவது யார்?

- சண்.சரவணக்குமார்

படங்கள்: வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு