Published:Updated:

ஆபாச அர்ச்சனை... அதிரடி ராஜினாமா!

மீண்டும் சிக்கலில் தமிழ்ப் பல்கலைக்கழகம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக திருமலை நியமிக்கப்பட்டதும், பட்டாசு வெடிக்காத குறையாகக் கொண்டாடிய கல்வியாளர்களின் மகிழ்ச்சி மூன்று மாதங்கள்கூட நீடிக்கவில்லை. திருமலை தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார். 

என்ன நடந்தது?

''துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 30 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் இரண்டு பேருக்கு மன்னார்குடி வட்டாரம் பரிந்துரை செய்திருந்தது. ஏராளமான தடைகளைத் தாண்டித்தான், துணைவேந்தராக திருமலை நியமிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி 10-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். நிதிப்பற்றாக்குறையில் சிக்கித் தவித்த பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் திருமலை தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். பல்கலைக்கழக மானியக் குழு நிதித் திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளாக நான்கு பேர் வேலை செய்​கிறார்கள்.  'இந்த ஆண்டும் வழக்கம் போன்று மானியக் குழுவில் இருந்து சம்பளம் வழங்க வேண்டும்’ என்று முறையிட்டனர். 'மானியக் குழுவில் நிதி இல்லை. எனவே, தினச்சம்பளத்தில் பணி அமர்த்திக்​கொள்கிறோம்’ என்று, அவர்களை பணி நீக்கம் செய்தார் திருமலை. உடனே, எஸ்.சி., எஸ்.டி., ஆசிரியர் மற்றும் பணியாளர் மேம்பாட்டுச் சங்கத்தினர் துணை வேந்தரைச் சந்தித்து, 'நான்கு பேரையும் மீண்டும் சேர்த்து மானியக் குழு சம்பளமே வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். ஆபாச வார்த்தைகளால் துணைவேந்தரைத் திட்டினர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுக்கப் போவதாகவும் மிரட்டினர். அவமானம் தாங்க முடி யாமல்தான் திருமலை ராஜினாமா செய்து விட்டார்'' என்று சொன்னார்கள் பல்கலைக்கழக ஊழியர்கள்.

ஆபாச அர்ச்சனை... அதிரடி ராஜினாமா!
ஆபாச அர்ச்சனை... அதிரடி ராஜினாமா!

மாணவர்கள் தரப்பில் பேசிய பழனிவேல் மற்றும் குமார் ஆகியோர், ''துணைவேந்தரின் ராஜி னாமாவை ஆளுநர் ஏற்கக் கூடாது. இதற்காக எங்கள் இறுதித் தேர்வைக்கூட புறக்கணித்துள்ளோம். அவருக்கு சிலர் இடையூறு செய்கிறார்கள்'' என்றனர்.

இதுபற்றி எஸ்.சி., எஸ்.டி., ஆசிரியர் மற்றும் பணியாளர் மேம்பாட்டு சங்கத் தலைவர் ரவிவர்மனிடம் கேட்டோம். ''நீக்கப்பட்ட பணியாளர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட்டவர்கள். முன்அறிவிப்பு இன்றி வெளியே போகச்சொன்னார் துணை வேந்தர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றுதான் துணைவேந்தரிடம் பேசினோம். ஏற்கெனவே பல்கலைக்கழகத்துக்குள் பல பிரச்னைகள் உள்ளன. பல பேராசிரியர்கள் துணைவேந்தருக்கு எதிராகச் செயல்பட்டு வந்தனர். எங்கள் பிரச்னைக்காக அவர் ராஜினாமா செய்திருக்க மாட்டார்'' என்றார்.

துணைவேந்தர் திருமலையிடம் பேசினோம். ''இப்போது விஷயம் அரசின் கவனத்தில் இருப்பதால், எதுவும் சொல்ல விரும்பவில்லை'' என்றார்.

நல்லதே நடக்கட்டும்!  

- சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு