Published:Updated:

''ஆண்டவன் சொத்தையே ஆட்டையைப் போடுறாங்க!''

வருவாய்த் துறைக்குக் கிடுக்கிப்பிடி

##~##

ந்து லட்சம் கோடி ரூபாய். எண்ணால் எழுதினால் கூட்டிப் பார்க்கவே பலருக்குத் தெரியாது. தமிழகக் கோயில்களுக்குச் சொந்தமான 4.75 லட்சம் ஏக்கர் நிலங்களின் தற்போதைய பண மதிப்புதான் இந்தத் தொகை. 

ஆனால், இந்தச் சொத்துக்கள் முழுமையாகக் கோயில்கள் வசம் இல்லை. இவற்றை ஆக்கிரமித்து வைத்துள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து மீட்பதற்காக அரசு சட்டம் போட்டும், சொத்துக்களை மீட்க முடியவில்லை. அதனால், இப்போது சென்னை உயர் நீதிமன்றம் களம் இறங்கி இருக்கிறது. கோயில்களைக் காப்பாற்ற கோர்ட் முடிவு எடுத்துள்ளது!

இந்து சமய அற​நிலையத் துறையின் கட்டுப் பாட்டில் 38 ஆயிரத்து 643 கோயில்கள் இருக்கின்றன. இந்தக் கோயில்களுக்குச் சொந்த​மான நிலம் பற்றிய முறை​யான ஆவணங்கள், கோயில்

''ஆண்டவன் சொத்தையே ஆட்டையைப் போடுறாங்க!''

அறங்காவலர்கள் அல்லது செயல் அலுவலர்களிடம் இருப்பது இல்லை. அதனால் சொத்துக்களில் பெரும்பாலானவை, ஆக்கிரமிப்பாளர்களால் கபளீ​கரம் செய்யப்பட்டு உள்​ளன. இதற்குச் சில அறங்​காவலர்களும், செயல் அலு​வலர்​களுமே உடந்தை என்பதுதான் கொடுமை.

இந்த நிலங்களை மீட்டு, கோயில்களின் வளர்ச்சிக்கு அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்தன. அதனால், இந்து சமய அறநிலையத் துறைக் கூட்டத்தை கூட்டி அவசர ஆணை ஒன்றைப் பிறப்பித்தார் முதல்வர் ஜெயலலிதா. அதன்படி, 'தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்​களுக்குச் சொந்தமான நிலங்​களின் பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் வரைபடங்களை முறையாகத் தொகுத்து, அதனை சி.டி-யில் பதிவு செய்து இந்து சமய அறநிலையத் துறையிடம் வருவாய்த் துறையினர் ஒப்படைக்க வேண்டும். அந்த விவரங்களை வைத்து இந்து சமய அறநிலையத் துறையினர், கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்த ஆணைக்குப் பிறகும்  வருவாய்த் துறையினர் எவ்விதமான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் ஆணையை விரைந்து செயல்படுத்துமாறு வருவாய்த் துறைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடியது, அகில உலக ஸ்ரீ வைஷ்ணவ தர்ம சம்ரக்ஷனா சொசைட்டி என்ற ஆன்மிக அமைப்பு.

இந்த அமைப்பின் தலைவர் கோவிந்த ராமானுஜதாசர், ''கோயில் நிலங்கள் பற்றிய அனைத்து விவரங்களும், அவற்றின் வரைபடங்களும் வருவாய்த் துறையிடம் இருக்கின்றன. பல ஆண்டு​களுக்கு முன்பே இவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்​பட்டு விட்டன. வருவாய்த் துறை அலுவலக

''ஆண்டவன் சொத்தையே ஆட்டையைப் போடுறாங்க!''

கம்ப்யூட்டரில் இருக்கும் விவரங்களை, அறநிலையத் துறையின் கையில் ஒப்படைத்தால், அவை பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களாக மாறும். இந்த விவரங்களை சி.டி-யாக வழங்குவது வருவாய்த் துறைக்கு மிக எளிய காரியம்தான். ஆனால் ஏனோ அதைச் செய்யாமல் இழுத்தடிக்கின்றனர். தமிழக முதலமைச்சரே ஆணையிட்ட பிறகும் அவர்கள் காலம் தாழ்த்துவது, பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புவதால்தான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இன்னும் நான்கு மாதங்களுக்குள் அனைத்து விவரங்களையும் சி.டி-யாகப் பதிவு செய்து தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் இப்போது உத்தரவு போட்டுள்ளது'' என்றார்.

வருவாய்த் துறையினரிடம் இந்தப் புகார் குறித்துக் கேட்டோம். பெயர்களை மறைத்துப் பேசினார்கள். 'கோயில்களுக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்ட நேரத்தில், அது தொடர்பான ஆவணங்கள் கல்வெட்டுகளாகவும், செப்புப் பட்டயங்களாகவும், ஓலைச் சுவடிகளாகவும் பதிவு செய்யப்பட்டன. 1863-ம் ஆண்டுக்கு முன்னரே அவை எல்லாம் முறையாகத் தொகுக்கப்பட்டு இனாம் பதிவேடு அல்லது இனாம் பேர் ரிஜிஸ்டர் என்ற பெயரில் பாதுகாக்கப்படுகின்றன. யாரால் வழங்கப்பட்டது? எந்தக் கோயிலுக்கு வழங்கப்பட்டது? எவ்வளவு நிலம் வழங்கப்பட்டது? என்பது தொடங்கி, இப்போது அதை யார் அனுபவித்து வருகிறார்கள் என்பது வரை தகவல்கள் பத்திரமாக இருக்கின்றன. எங்களிடம் இல்லாத பல விவரங்கள் சென்னை ஆவணக் காப்பகத்தில் உள்ளன.

கோயில் நிலங்களில் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில்,  ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசமே கிடையாது. ஆனால் இது தவிர்த்து, பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்குப் போலிப் பட்டா தயாரிக்கப்பட்டு, வேறு பெயர்களுக்கு மாற்றப்பட்டு விட்டன. இந்த மோசடியை எங்கள் துறை அதிகாரிகள் துணை இல்லாமல் மற்றவர்களால் செய்ய முடியாது. இப்போது தகவல்களைக் கொடுத்தால், உண்மை வெளியாகி தங்கள் தவறுகளும் தெரிந்து மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில்தான் அந்தந்த மாவட்டப் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இதனால்தான் விவரங்களைத் தொகுத்து சி.டி-யாக வழங்குவது தாமதமாகிறது. உதாரணமாகச் சொல்வது என்றால், மதுரை மாவட்டத்தில் மட்டும் 1,201 பட்டா நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, இப்போதுதான் மீட்கப்பட்டுள்ளன. இதேபோல், கோவையில் 769 பட்டா நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் குளறுபடி நடந்து இருப்பதால்தான், எங்கள் உயர் அதிகாரிகள் சி.டி. தயார் செய்ய தாமதம் செய்கிறார்கள்'' என்று காரணம் சொன்னார்கள்.

சாட்டையைச் சொடுக்கவேண்டிய நேரம் இது!

- ஜோ.ஸ்டாலின்