Published:Updated:

லாபம் ரூ.60, ஆளும் கட்சிக்கு ரூ.40?

அதிரவைக்கும் உளுந்து ஊழல்

##~##

தானே புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்வுக்காக, முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்று, விவசாயிகள் பயிர் செய்வதற்காக தலா எட்டு கிலோ உளுந்து அல்லது பயிறு வழங்கும் திட்டம். புயல் பாதித்த கடலூர், நாகை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 3.60 லட்சம் விவசாயிகளுக்கும் தலா ஒரு பாக்கெட் விதை தருவதற்கான மிகப்பெரிய திட்டம். இந்தத் திட்டத்தில்தான் மிகப் பெரியமோசடி நடக்கிறது என்று புகார். 

இதுகுறித்துப் பேசிய காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் கீவளூர் தனபாலன், ''டிசம்பர் மாதம்தான் உளுந்து விதைக்கும் சீஸன். பிப்ரவரி, மார்ச்சில் அறுவடைக்கு வந்து விடும். அதனால், விவசாயிகளுக்கு உளுந்து மற்றும் நுண்ணுயிரிகள்கொண்ட மினிகிட் பாக்கெட்டுகளை வரும் டிசம்பரில்தான் கொடுக்க வேண்டும். ஆனால், இப்போதே கொடுக்கிறார்கள். அதுவும் நல்ல தரமான விதைகள் இல்லை என்பதுதான் அதிர்ச்சி. நல்ல விதை என்பது, அது விளைந்த பருவத்துக்கு அடுத்த பருவத்தில்தான் விதைக்க வேண்டும். இப்போது கொடுக்கும் விதைகள், இந்த மார்ச்சில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு பேக்கிங் செய்யப்​பட்டவை. சித்திரைப் பட்டத்தில் இதை விதைக்க முடியாது. இதில் முளைப்புத்தன்மை இருக்காது. முளைத்தாலும் விளைச்சல் இருக்காது. இதைச் சித்திரைப் பட்டத்துக்கு விதையுங்​கள் என்கிறார்கள். அது, பம்ப்செட் வைத்திருப்​பவர்கள் மட்டும்தான் செய்ய முடியும். இதை வாங்கி விதைப்பெருக்கம் செய்ய முடியாது. இட்லி, வடைதான் செய்து சாப்பிட முடியும்'' என்கிறார்.

லாபம் ரூ.60, ஆளும் கட்சிக்கு ரூ.40?

இந்த விதைகளைத் தருவதற்கு டெண்டர் எடுத்த பல நிறுவனங்கள் விதைத் தயாரிப்பில் முன்அனுபவமும் இல்லாதவை என்றும் கூறுகிறார்கள். கோவில்பட்டி ஏரியாவில் கமிஷன் மண்டிகளில் இருந்த உளுந்தை வாங்கி, விதைகள் என்ற பெயரில் அரசிடம் விற்பனை செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

லாபம் ரூ.60, ஆளும் கட்சிக்கு ரூ.40?
லாபம் ரூ.60, ஆளும் கட்சிக்கு ரூ.40?

''விதை உளுந்து மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்ட​போதுகூட, கிலோ 60 ரூபாய் விலையைத் தாண்டியது இல்லை. ஆனால், இந்தத் தரமற்ற விதைகளை விவசாயிகளிடம் 33 ரூபாய்க்கு வாங்கி, பாக்கெட்டுகளில் அடைத்து 93 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். இதை அரசு எப்படி அனுமதிக்கிறது என்றுதான் தெரியவில்லை. இதை, உடனே தடுத்து நிறுத்தி விசார¬ணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்கிறார் வீராணம் பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன்.

''இன்னும் பாதி விவசாயிகளுக்குக்கூட விதை பாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. அதனால் இப்போதே விதைகளைக் கைப்பற்றி சோதனை செய்தால், டெண்டர் எடுத்த நிறுவனங்களின் பித்தலாட்டம் தெரிந்து விடும். கர்நாடக விதைக்கழகம் மற்றும் வம்பன் பயிறு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து விதைகள் வாங்கி சப்ளை செய்கிறோம் என்று டெண்டரில் குறிப்பிட்டு ஆர்டர் வாங்கிய நிறுவனங்கள், அங்கே கொஞ்சம் மட்டும் வாங்கி இருக்கிறார்கள். மற்றபடி, விவசாயிகள் மற்றும் கமிஷன் மண்டிகளில் வாங்கிய உளுந்தைத்தான் வழங்குகிறார்கள். ஒரு கிலோ விதையில் 60 ரூபாய்க்கு மேல் லாபம் இருக்கிறது. அதில் 40 ரூபாய் வரை ஆளும் கட்சியினருக்குக் கமிஷனாகக் கொடுக்கப்படுகிறது. முக்கிய அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான மதுரைப் பிரமுகர்  ஒருவரின் கைதான் இதில் ஓங்கியிருக்கிறதாம். வேளாண்மைத் துறையில் விடப்படும் டெண்டர்கள் அனைத்தையும் இந்தப் பிரமுகர்தான் முடிவு செய்கிறார்'' என்று வேதனைப்படுகிறார்கள், பெயர் சொல்ல விரும்பாத விவசாய சங்க நிர்வாகிகள்.

இதுகுறித்து, தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரனிடம் பேசினோம். ''விவசாயிகள் கேட்டுக்கொண்டதால்தான் உடனடியாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. டெண்டர் விட்டு அதில் குறைந்த விலையைக் குறிப்பிட்ட நிறுவனங்களுக்குத்தான் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தரமற்ற விதைகளை வழங்குவதாக யாரும் இதுவரை புகார் சொல்லவில்லை. நீங்கள் சொல்வதால்,  விதைகளின் தரம் குறித்து உடனே ஆய்வு செய்கிறோம்'' என்றார்.

எந்த ஒரு திட்டமும் பயனாளிகளை முழுமையாகச் சென்றடைய வேண்டும், யாரோ ஒரு சிலரின் பாக்கெட்டுகளுக்கு அல்ல!

- கரு.முத்து