Published:Updated:

கண்ணகிக்கு வந்த சோதனை

எட்டு மணி நேரம் தான் அனுமதி

கண்ணகிக்கு வந்த சோதனை

எட்டு மணி நேரம் தான் அனுமதி

Published:Updated:
##~##

ண்ணகி என்றாலே, சோகமும் சோதனையும்​தானா? இந்த ஆண்டும் கண்ணகி கோயில் விழாவில் பிரச்னை செய்துள்ளது கேரளம்! 

முதலில் ஒரு ஃப்ளாஷ்பேக்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. கோவலனைப் பறிகொடுத்த கண்ணகி, கோபத்தில் மதுரையை எரித்துவிட்டு பெரியாற்றின் கரை வழியே 14 நாட்கள் பயணப்பட்டு விண்ணோற்றிப் பாறை (இப்போது வண்ணாத்திப் பாறை என்கிறார்கள்!) வந்து, நெடுவேல் குன்றம் என்ற இடத்தில் சாந்தமாகி, இறைவன் அருளால் கோவலனோடு பூப்பல்லக்கில் ஏறி வானை நோக்கிப் பறந்தார். சித்ரா பௌர்ணமி அன்று அந்தக் காட்சியை, மலைப்பகுதியில் வசித்த பளியர்கள் பார்த்து, சேரன் செங்குட்டுவ மன்னனிடம் கூறியதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. சேரன் செங்குட்டுவன், இமய மலையில் இருந்து, கற்களைக் கொண்டுவந்து கண்ணகிக்குச் சிலை செய்து, கோயில் எழுப்பி வழிபட்டான். 11-ம் நூற்றாண்டில் அந்தக் கோயிலை, ராஜராஜ சோழன் புனரமைத்தான். அன்று முதல், சித்ரா பௌர்ணமி தோறும் தமிழர்கள் கண்ணகியை வழிபட்டு வருகிறார்கள்.

கண்ணகிக்கு வந்த சோதனை

1960-களில், கண்ணகி கோயில் திரு​விழா 15 நாட்கள் நடந்துள்ளது. அதன்பிறகு, 11 நாள், 7 நாள், 3 நாள் என்று குறைந்து இப்போது எட்டு மணி நேரம் மட்டுமே கொண்டாடப்படும் திருவிழாவாக மாறிவிட்டது. இந்தக் கண்ணகி கோயிலுக்குச் செல்ல இரண்டு பாதைகள் உண்டு. ஒன்று, குமுளி வழியே செல்லும் ஜீப் பாதை. அடுத்தது, கூடலூர் பளியன்குடி வழியே செல்லும் நடைபாதை. இந்தப் பாதைகள் மட்டும் கேரளாவின் எல்லைக்குள் வருவதுதான் ஒவ்வோர் ஆண்டும் பிரச்னையைக் கிளப்புகிறது.

இந்த விவகாரம் குறித்துப் பேசும் மங்கலதேவி கண்ணகி அறக்​கட்டளைக் குழுவின் பொருளாளர் முருகன், ''கண்ணகி கோயில், தமிழக வனப்பகுதியில் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில், மதுரை மாவட்டத்தில் தேனி இருந்​தது. அப்போது, மதுரை மாவட்ட வன அலுவலராக இருந்த லாங்கிரிக் என்பவர், 'கம்பம், கூடலூர், தேனிப் பகுதி மக்கள் பயன்பாட்டில் காப்புக்காடு வனப்பகுதி இருந்து வந்துள்ளது. அங்கு, பளியன்​குடி என்ற இடத்தில் இருந்து மேலே கண்ணகி கோயில் வரை உள்ள காட்டில் 12 அடி அகலத்துக்குப் பாதையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்று மதராஸ் ஃபாரஸ்ட் ஆக்ட் 5-ன் படி, 18-வது செக்சனில் 1882-ம் ஆண்டே அனுமதி கொடுத்து இருக்கிறார்.

கண்ணகிக்கு வந்த சோதனை

ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு அமைத்த இந்திய அரசு, நமது வனப்பகுதி மூலம் செல்வதற்கு சாலை வசதி செய்து தரவில்லை என்பதுதான் பிரச்னை. சில நாட்களுக்கு முன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்ச் செல்வன், கண்ணகி கோயிலுக்குச் செல்ல சாலை அமைப்பது பற்றி சட்டசபையில் கேள்வி எழுப்பியபோது, 'மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருக்கிறோம்’ என்று வனத்துறை அமைச்சர் பதில் கூறினார். உண்மையில், இதற்கு மத்திய அரசின் அனுமதியே தேவை இல்லை. இது சம்பந்தமாக, வனத்துறை, தொல்லியல் துறை, குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர்கள் அனைவருக்கும் கோரிக்கை அனுப்பியும் இதுவரை பயன் இல்லை. காமராஜர் காலம் முதல் இன்றைய ஜெயலலிதா அரசு வரையிலும் யாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை. அதனால்தான், கண்ணகி கோயில் விவகாரத்தில் தொடர்ந்து தமிழர்களுக்கு, கேரள மக்கள் இடையூறு செய்கிறார்கள்'' என்றார்.

கண்ணகி கோயில் அறக்கட்டளை மக்கள் தொடர்பாளர் சரவணன், ''காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை கோயிலுக்குச் செல்ல அனுமதி உண்டு. ஆனால், பகல் 12 மணிக்கே, தமிழகத்தில் இருந்து வந்வர்களை குமுளி செக் போஸ்ட்டில் கேரளப் போலீஸார் தடுத்து, திருப்பி அனுப்பி விட்டார்கள்'' என்றார்.

''இந்த ஆண்டு வந்த பக்தர்களின் எண்ணிக்கையை கேரள போலீஸார், 17,061 பேர்  என்றும், தமிழக போலீஸார் சுமார் 25,000 பேர் என்றும் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே 75,000 பேர் கலந்து கொண்டார்கள்'' என்கிறார்கள் திருவிழாவை நடத்தியவர்கள்.

இதுகுறித்து, கேரள இடுக்கி மாவட்டக் கலெக்டர் வெங்கடேசபதி, ''பக்தர்களைத் தடுத்து நிறுத்தியதாக எனக்குத் தகவல் வரவில்லை'' என்றார்.

தேனி கலெக்டர் கே.பழனிச்சாமி, ''இந்த ஆண்டு 350 வாகனங்களை அனுமதித்தோம். சச்சரவு எதுவும் நடக்கவில்லை'' என்றார்.

அடுத்த ஆண்டாவது, தமிழர்கள் தலை நிமிர்ந்து சென்று, கண்ணகியைக் கும்பிட வழி காட்டுங்கள்!

- சண்.சரவணக்குமார்

படங்கள்: வி.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism