Published:Updated:

சுவாமி சவாலை சந்திப்பாரா கார்த்தி?

சிதம்பர சிக்கல் தொடர்கிறது!

சுவாமி சவாலை சந்திப்பாரா கார்த்தி?

சிதம்பர சிக்கல் தொடர்கிறது!

Published:Updated:
##~##

ப.சிதம்பரத்தின் தலை நாடாளுமன்றத்தில் உருள்வதற்கு அவரது பையனே காரணம் ஆகிவிட்டார். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. அதுவரை, ப.சிதம்பரம் பதவியில் இருந்தால், கின்னஸ் சாதனையிலேயே அவர் பெயரைப் போடலாம். அந்த அளவுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள். அதுவும் கார்த்தி சிதம்பரத்தை மையம்கொண்டு சுழலும் சர்ச்சை சூறாவளி, சிதம்பரம் பதவியைக் காவு வாங்காமல் ஓயாது போலத் தெரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார்த்தி சிதம்​பரத்துக்கு எதிராக முதல் குண்டைப் போட்டவர் பா.ஜ.க. தேசிய செயலாளர் கிரிட் சோமையா. கடந்த மார்ச் மாதம் பத்திரிகையாளர்களைச் சந்தித்​தவர், ''ராஜஸ்தான் மாநிலத்தில் '108’ ஆம்புலன்ஸ் சேவையை, மத்திய அரசும் ராஜஸ்தான் மாநில அரசும் இணைந்து செயல்படுத்துகின்றன. இதற்கு, 'சிகிட்சா ஹெல்த் கேர்’ என்ற நிறுவனம் ஆம்புலன்ஸ்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது.

சுவாமி சவாலை சந்திப்பாரா கார்த்தி?

இந்த நிறுவனத்தில் இயக்குனர்களாகவும், பங்குதாரர்​களாகவும் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்ணா மற்றும் சில காங்கிரஸ் புள்ளிகள் உள்ளனர். இந்த நிறுவனத்துக்குப் போட்டிஇன்றி வெளிப்படையற்ற முறையில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் '108’ ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் பணியில் இந்த நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. கடந்த செப்டம்பர்

சுவாமி சவாலை சந்திப்பாரா கார்த்தி?

மாதம், 50 ஆம்புலன்ஸ்கள் 55,326 முறை சேவை வழங்கியதாகக் கூறி இருந்தனர். ஆய்வு செய்தபோது 37,458 முறைதான் அவை இயக்கப்பட்டுள்ளன. ஓர் ஆம்புலன்ஸ் ஒரே நாளில் 234 நோயாளிகளை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றதாகக் கணக்கு காட்டப்பட்டு உள்ளது.  போலி ரசீது கொடுத்து, அரசை ஏமாற்றி 100 கோடிக்கு மேல் கொள்ளை அடித்துள்ளனர். தேசியக் கிராமப்புற அதிகாரிகள் முதலில் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், மாநிலத் தலைமைச் செயலரும், மத்திய சுகாதாரச் செயலரும் நடவடிக்கையை நிறுத்தி விட்டனர்'' என்று  சீறினார்.

எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல, அடுத்த குற்றச்சாட்டை வாசித்தார் சுப்ர மணியன் சுவாமி...

''ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்ற விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளது. 2006-ல் அவர் நிதி அமைச்சராக இருந்த போது ஏர்செல் பங்குகளை விற்பது தொடர்பான கோப்பில் கையெழுத்துப் போடாமல் காலம் தாழ்த்தினார். அந்த நிறுவனத்தின் பங்குகள் சில வற்றை சிதம்பரத்தின் மகன் கார்த்தி வாங்கினார். அதன்பிறகே விற்பனைக் கோப்பில் சிதம்பரம் கையெழுத்துப் போட்டார். எனவே, ஏர்செல் - மேக் சிஸ் வழக்கில், ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி பெயரையும் சி.பி.ஐ. சேர்க்க வேண்டும்'' என்று பகீர் கிளப்பினார்.

உடனே, இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பிய பி.ஜே.பி. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, ''ஏர்செல் நிறுவனத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஐந்து சதவிகிதப் பங்குகள் உள்ளன'' என்று கொளுத்திப்போட... ஒட்டு மொத்த பா.ஜ.க உறுப்பினர்களும் சபாநாயகர் மீரா குமாரைச் சூழ்ந்துகொண்டு ப.சிதம்பரத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி அமளியில் இறங்கினர். கடும் கூச்சல் குழப்பத்தால், நாடாளுமன்றம் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தடுத்து கார்த்தி சிதம்பரம் சர்ச்சையில் சிக்குவதை கூர்ந்து நோக்கும் கதர்ச் சட்டைகள், சிதம்பரம் தலை தப்புமா என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து கார்த்தி சிதம்பரம், ''ஏர்செல் நிறுவனத்தில் எனக்கு ஐந்து சதவிகிதப் பங்குகள் இருப்பதாகக் கூறப்படுவது உண்மை அல்ல. அபாண்டக் குற்றச்சாட்டைக் கூறுபவர்கள், ஆதாரத்தைக் காட்டத் தயாரா? எனக்கு மட்டும் அல்ல, எனது குடும்பத்தினர் யாருக்குமே எந்த ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திலும் பங்குகள் கிடையாது. குறிப்பாக, ஏர்செல் நிறுவனத்திலோ அல்லது மாக்சிஸ் நிறுவனத்திலோ எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. தவறான தகவல் கொடுத்த சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்குப் போடப் போகிறேன்'' என்று சொல்கிறார்.

''கார்த்தி சிதம்பரம் முதலில் வழக்கைப் போடட்டும். அப்போது பார்க்கலாம்'' என்று, எதிர்சவால் விடுகிறார் சுப்பிரமணியன் சுவாமி. சுவாமியைச் சந்திப்பாரா கார்த்தி?

- தி.கோபிவிஜய், படம்: கே.ராஜசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism