உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

பணம்.. துப்பட்டா... படுக்கை!

சர்ச்சை சுழலில் மதுரை ஆதீனம்

##~##

''மதுரை ஆதீனத்தில் பெண்கள் மேலாடை இல்லாமல் திரிகிறார்கள். திரும்பிய திசை எல்லாம் பெண்களும் படுக்கை களுமாக விபசார விடுதி போல இருக்கிறது'' என்று, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்து, பரபரப்பைப் பற்றவைத்துள்ளார் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் கே.எம்.முத்துராஜ். அந்தப் பேட்டி வெளியான மறுகணமே, ஆதீனம் பற்றிக்கொண்டது. 'எங்களை மிரட்டிப் பணம் கேட்டார் முத்துராஜ். தர மறுத்ததால், அவதூறான செய்திகளைப் பரப்பு கிறார். அவரைக் கைது செய்யவேண்டும்’ என்று ஆர்ப்பாட்டம் நடத்திய நித்தியானந்தா தரப்பினர், மதுரை கலெக்டரிடம் மனுவும் கொடுத்தார்கள். 

உண்மையில் என்ன நடந்தது என்று விசாரித் தோம்.

நித்தியானந்தா மடத்துப் பொறுப்பாளரான சர்வானந்தா நம்மிடம், ''14-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு முத்துராஜ் என்பவர் 15 ஆட்களுடன் வந்தார். 'சந்நிதானத்துக்கு ஆதரவும் வாழ்த்தும் சொல்றதுக்காக வந்திருக்கோம்’னு சொன்னாங்க. அதனால ஞானப்பால், பிரசாதம் எல்லாம் கொடுத்து உபசரித்தோம். 'நாங்க ஆதரவு கொடுக்கிறதுக்கு சந்நிதானம் ஏதாவது ஏற்பாடு பண்ணுவாங்களா?’னு கேட்டாங்க. 'இங்க வந்தா பிரசாதம் வாங்கலாம்; ஆசீர்வாதம் வாங்கலாம்; வேற என்ன ஏற்பாடுன்னு புரியலையே?’னு கேட்டேன்.

பணம்.. துப்பட்டா... படுக்கை!

'அட... அது இல்லீங்க. ஆதீன மீட்புக் குழுவுல பாதிப் பேரை இழுத்துட்டு வந்து உங்களுக்கு ஆதரவா அறிக்கைக் கொடுக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. மத்தியஸ்தர் வேலை பார்க்கிறதுக்கு எனக்கு நாலு லட்ச ரூபாய் கொடுத்துடுங்க. அவங்க எவ்வளவு எதிர்பார்க்கிறாங்கனு கேட் டுச் சொல்றேன்’ என்று சொன்னார்.

பணம்.. துப்பட்டா... படுக்கை!

'அந்த மாதிரி எல்லாம் நாங்க யாருக்கும் பணம் கொடுக்கிறது இல்லைங்க. அதனால, உங்களோட கோரிக்கையை சந்நிதானத்தோட கவ னத்துக்குக் கொண்டுபோக முடியாது’னு சொன்னேன். உடனே அவர் கோபமாயிட்டார்.

'வெளியே போய் என்ன பண்றேன்னு பாரு’ என்று கத்தினார். பெண் பக்தைகளையும், பிரம்மச் சாரிகளையும் அவதூறாகத் திட்டினார். பிறகு, ஆதீ னத்தில் உள்ள மணியை வேகமாக அடிச்சுட்டு வெளியே போனார். அவருடைய ஆட்களும் கோஷம் போட்டுக்கிட்டே வெளியே போயிட்டாங்க. நாங்கள் பணம் கொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில்தான், இங்கே நடக்காததை எல்லாம் கண்ணால் பார்த்தது போல், அவதூறாகப் பேட்டி கொடுத்து இருக்கார்'' என்றார்.

இந்த விவகாரம் பற்றி பேசிய ஆத்மபிரியானந்தா, மாநித்தி கோபிகானந்தா ஆகியோர், ''பிரம்மச்சாரினிகளான நாங்க எல்லாம் ஃபுல் டைம் வாலன்டியர்களாக இங்கே தங்கி இருக்கிறோம். அன்னைக்கு முத்துராஜ் கூட வந்தவர்களை பக்தர்கள் என்று நம்பி, தியானம் செய்வது பற்றி எடுத்துச் சொன்னோம். ஆனால், அவர்களின் பார்வை ரொம்பவும் தவறாக இருந்தது. அவர்களின் பேச்சும் ஒரு மாதிரியாகவே இருந்தது. பெண் பக்தைகளைக் கையைப் பிடித்துப் பேசுவது, இழுப்பது, இடிப்பது என்று அருவெறுப்பாக நடந்துகொண்டார்கள். அவர்கள் ஆதீனத்துக்குள் அருவெறுக்கத்தக்க வகையில் நடந்துகொண்டு, வெளியே போய் எங்களைப் பற்றி தப்புத் தப்பாகப் பேட்டி கொடுக்கிறார்கள். மீனாட்சி அம்மன் மண்ணில் இருந்து சொல்கிறோம். எங்களோட சாபம் அவர்களைச் சும்மாவே விடாது'' என்றார்கள் ஆத்திரத்துடன்.

''உண்மையைச் சொல்லுங்கள். உள்ளே என்னதான் நடந்தது? நீங்கள் பணம் கேட்டு மிரட்டினீர்களா..?'' என்று முத்துராஜிடம் கேட்டோம்.

''முதலில் நான் யார் என்பதைச் சொல்லிவிடுகிறேன். நிர்வாணச் சாமியார் என்று அழைக்கப்படும்

பணம்.. துப்பட்டா... படுக்கை!

கலியுகச் சித்தர் ராஜசேகர சுவாமிகளின் சீடன் நான். திவாகரன் ஆட்களால் சுவாமிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில், அவரைப் பாதுகாப்பாக மதுரைக்கு அழைத்துக்கொண்டு வந்தவன் நான். அவர் மதுரையில் தங்கி இருந்த நேரத்தில் மட்டும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போனாங்க. நான் பணத்தாசை பிடிச்சவன் என்றால், அந்த பக்தர்களிடம் ஆளுக்கு 100 ரூபாய் டோக்கன் போட்டே பல லட்சங்களைச் சம்பாதித்து இருப்பேன். எனக்குப் பணம் மீது ஆசை கிடையாது.

நித்தியானந்தாவுக்கு வாழ்த்துச் சொல்ல ஆதீனத்துக் குள் போனது உண்மைதான். 'உங்களுக்குப் பணம், புகழ் எல்லாம் இருக்கும்போது, ஏன் இந்தச் சின்னப் பதவிக்கு ஆசைப்பட்டு பிரச்னையில் சிக்குறீங்க. திருஞானசம்பந்தர் இருந்த இந்த இடத்துல பெண்களைக் கொண்டுவந்து கூத்தடிக்கிறது நல்லாவா இருக்கு? பேசாம இந்த பதவியில் இருந்து விலகுங்க’ என்று நித்தியானந்தருக்கு அறிவுரை சொல்லத்தான் போனேன். ஆனால், அதற்குள் என்னைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டதால், பார்க்க மறுத்து விட்டார்.

சுமார் மூன்று மணி நேரத்துக்குப் பிறகுதான், 'உங்களைப் பார்க்க சாமி விரும்பலை’னு சொன்னாங்க. உடனே எனக்குக் கோபம் வந்துடுச்சு. அதனால, அங்க இருந்த திருஞானசம்பந்தர் சிலையைப் பார்த்து, 'சாமி... நீதி கிடைக்கலை சாமி’னு சத்தமாச் சொல்லிட்டு, அங்கே இருந்த மணியை ஓங்கி ஓங்கி அடிச்சேன். உடனே, திமுதிமுன்னு அவங்க ஆளுங்க வந்தாங்க. கோஷம் போட்டுக்கிட்டே நாங்க வெளியே வந்துட்டோம்.

இன்னும் கொஞ்ச நேரம் உள்ளே இருந்திருந்தா, என்னோட வந்தவங்க எல்லாம் அவங்க பக்கம் சாஞ்சு இருப்பாங்க. ஏன்னா... 16, 18 வயசுப் பிள்ளைங்க எல்லாம் அவங்க முகத்துக்கு நேரா ரெண்டு கையையும் காட்டி என்னமோ செஞ்சாங்க. எங்க பசங்க எல்லாம் மகுடிக்கு மயங்கின பாம்பாட்டாம் ஆடிக்கிட்டு இருந்தாங்க. துப்பட்டா எதுவும் போடாம பெண்கள் நடமாடினார்கள். மேலும் அங்கங்கே படுக்கைகள் கிடந்தன. அதனால்தான், விபசாரம் நடக்கிற இடம் மாதிரி இருந்துச்சுன்னு சொன்னேன். இதுபற்றி கலெக்டரிடமும் புகார் செய்து இருக்கேன். 'அறநிலையத் துறை அதிகாரிகளை அனுப்பி விசாரிக்கிறேன்’னு சொல்லி இருக்கார். என் மீது நித்தியானந்தா வழக்குப் போட்டால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். நித்தியானந்தாவை மதுரையில் இருந்து விரட்டும் வரை ஓய மாட்டேன்'' என்று சவால் விட்டார்.

மதுரை ஆதீன மீட்புக் குழுவைச் சமாளிப்பதற்காக, மதுரை ஆதீன பாதுகாப்புக் குழு என்ற ஓர் அமைப்பைத் தொடங்கி இருக்கிறார் நித்தியானந்தா. ''அந்த அமைப்புக்கு ஆள் சேர்ப்பதற்காக பெங்களூருவில் இருந்து பல கோடி ரூபாய் வந்துள்ளது. ஆதரவு தெரிவித்து வரும் அமைப்புகளுக்குத் தலா 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படுகிறது.  அதனால்தான் இந்தப் பிரச்னைக்குச் சம்பந்தமே இல்லாத அமைப்புகள் எல்லாம் நித்தியானந்தாவுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றன. சில லெட்டர் பேடு அமைப்புகள் எல்லாம் ஏமாற்றிப் பணம் வாங்கியதால்தான், உஷாராக முத்துராஜை அவர் உள்ளே அனுமதிக்கவில்லை'' என்றும் சொல்கிறார்கள். ''நித்தி யானந்தாவிடம் கூட்டிட்டுப் போய் பணம் வாங்கித் தர்றேன்'' என்று சில புரோக்கர்களுக்கும் மதுரையில் கிளம்பி விட்டதாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி துரை என்பவர், அகில இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் நல்வாழ்வு இயக்கம், தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் என்று ஒரே நேரத்தில் இரண்டு அமைப்புகள் சார்பில் நித்தியானந்தாவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ''நித்தியானந்தாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகளுக்கு பணம் கொடுப்பதாகச் சொல்கிறார்களே... நீங்களும் பணம் வாங்கினீர்களா?'' என்று அவரிடம் கேட்டோம். ''நான் ஒரு தியாகியின் மகன். துணிச்சலும் சக்தியும் மிக்கவர் என்பதால்தான் அவரை ஆதரிக்கிறோமே ஒழிய, பணத்துக்காக அல்ல'' என்றார்.

நித்தியானந்தா அரசியல் மதுரையில் ஜெக ஜோதியாக நடக்கிறது!

- கே.கே.மகேஷ்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பா.காளிமுத்து