உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

சாதியின் பலம் தெரிந்துவிடுமா?

கணக்கெடுப்பில் நேரடி விசிட்

##~##

பேப்பரைத் திறந்தால், 'நம் சாதிக்காரர்கள் அனைவரும் ...... என்ற பெயரில்தான், சாதிவாரிக் கணக்கெடுப்பில் பதிவுசெய்ய வேண்டும்’ என்று தினமும் அறிக்கைகள் வந்தபடியே இருக்கின்றன. இதை, மக்கள் எவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று நேரில் பார்க்க விரும்பி​னோம். 

''வாங்க சார், வந்து என்னா நடக்குதுன்னு நீங்களே பாருங்க'' என்று, அழைத்தார் காஞ்சிபுரம் மாவட் டத்தில் கணக்கெடுப்​பில் ஈடுபட்டிருக்கும் அரசு அலுவலர் ஒருவர்.

மதுராந்தகத்தைத் தாண்டி 15 கி.மீ. தொலைவில் புளியரணம்​கோட்டை பஞ்சாயத்தைச் சேர்ந்த கீரல்வாடி கிராமம். மொத்தமே 144 வீடுகள் கொண்ட மிகச்சிறிய கிராமம் இது. மதிய நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள் பெண்களும் முதியவர்களுமே.

சாதியின் பலம் தெரிந்துவிடுமா?

கணக்கெடுப்பு நடத்து பவர்கள் தன் வீட்டுக்கு வரு வதைப் பார்த்ததும், தென்னை மர நிழலில் பாய் விரித்துப் போடுகிறார் மணிமேகலை. ''சொல் லுங்கம்மா, குடும்பத்துல யார், யார் இருக்கீங்க?'' என்று ஆரம்பிக்கிறார் சுசீலா. சத்துணவுப் பணி​யாளரான சுசீலா, இப்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியாளர். கூடவே, உதவியாளராக லதா என்ற பெண். 'ஐ-பேடு’ போன்ற கருவியில் ஒரு கீ-போர்டை இணைத்து, மக்கள் சொல்வதை அதிலேயே அப்டேட் செய்து கொள்கின்றனர்.

பெயர், வயது, தொழில்... ஒவ்வொன்றாகப் பதில் சொல்லிக்கொண்டே வந்த மணிமேகலை, 'உங்க வீட்டுல கிச்சனையும் சேர்த்து எத்தனை ரூம் இருக்கு?’ என்றதும் கொஞ்சம் ஜெர்க் ஆனார். ''ஏங்க இருக்குறதே கூர வீடு. அதுல எங்கே போக ரூமுக்கு?'' என சிணுங்க... ''என்னம்மா பண்றது,

சாதியின் பலம் தெரிந்துவிடுமா?

கேட்டுத்தாம்மா ஆகணும். சொல்லு'' என்று கூல் பண்ணி குறித்துக் கொள்கின்றனர். எல்லாக் கேள்வி​களும் முடிந்து, ஒரு முறை வாசித்துக் காட்டி அவர்களிடம் கையெழுத்து வாங்கி, வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டிக் கிளம்புவதற்கு, ஒரு வீட்டுக்கு குறைந்தது 20 நிமிடங் களாவது ஆகிறது.

அவர்கள் அடுத்த வீட்டுக்குக் கிளம்பும்போது, அதுவரை வீட்டுத் திண்ணையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்த முதியவர், ''யம்மா, இந்த 100 நாளு வேலைக்கு முழுச் சம்பளத்தை தர மாட்டேங்குறாங்கம்மா... அதையும் எழுதிக்க'' என்று பிராது கொடுத்தார். அடுத்த வீட்டு ஏகவள்ளி, தன் வீட்டுக்குக் கணக்கெடுக்க வந்த உடனேயே மகனை மரம் ஏறச்சொல்லி வெயிலுக்கு இதமாக இளநீர் வெட்டிக்கொடுத்தார். ''வீட்டுல டி.வி. இருக்கா?'' என்​றதும், ''இருக்கு'' என்றார். ''யார், யாரெல்லாம் கூட இருக்காங்க? மாமியார் இருக்காங்களா?'' என்று கேட்க, ''ஆமா மேடம், இன்னா பண்ணித் தொலைக்கிறது? அடிச்சா தொரத்த முடியும்?'' என்றார் சீரியஸாக.

இப்போதைய கணக்கெடுப்பில், ஒருவர் தன் சாதியைக் குறிப்பிட விரும்பவில்லை என்றால், அதற்கும் வழி உண்டு. நாம் பார்த்தவரையில் கிராமப் பகுதிகளில் சாதியை அழுத்தம் திருத்தமாகவே சொல்கிறார்கள்.

சரி, நகரத்துக் கணக்கெடுப்பு எப்படி நடக்கிறது?

சென்னை ஓட்டேரி ஹாஜி முகமது அப்பாஸ் சாஹிப் தெரு... பெரும்பான்மை முஸ்லிம்கள் நிறைந்த தெருவில் ஒரு வீட்டு முற்றத்தில் லாவண்யாவும், ஷைலஜாவும். அங்கு இருந்தது முழுக்க உருது பேசும் லெப்பை முஸ்லிம்கள். அவர்களுக்கு தாங்கள் முஸ்லிம் என்று தெரிகிறதே தவிர, 'பி.சி-யா, எம்.பி.சி-யா’ என்று தெரியவில்லை. இந்தக் குழப்பங்களைத் தீர்ப் பதற்காகவே ஒவ்வொரு கணக்கெடுப்பாளருக்கும் ஒரு கையேடு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டு சாதிகள் அனைத்தும் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்டோர் (BC) பிரிவில் மொத்தம் 132 சாதிகளும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களில் 7 பிரிவுகளும், ஷெட்யூல்டு பிரிவில் (SC) 76 சாதிகளும், சீர் மரபினர் (DNC) பிரிவில் 68 சாதிகளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவில் 40 சாதிகளும், ஷெட்யூல்டு பழங்குடியினர் (ST) பிரிவில் 36 சாதிகளும் தமிழ்நாட்டில் உள்ளன. முற்பட்ட வகுப்பினர் பற்றிய விவரங்கள் அதில் இல்லை.

அதே ஓட்டேரி திரு.வி.க. நகரில் மற்றொரு குழுவினர் கணக்கெடுப்பில் இருந்தனர். ''இந்தத் தெரு முழுக்க எங்காளுகதான். ஒரு வீடு விடாம எடுங்க'' எனத் தன் சாதியின் பலத்தைக் நிரூபிப்பதற்கான முயற்சியில் இருந்தார் லுங்கி அணிந்த பெரியவர் ஒருவர். நாம் பார்த்த வரையில் யாரும் 'சாதியைச் சொல்ல விருப்பமில்லை’ என்று சொல்லவில்லை. பெரும்பாலா​னவர்களுக்கு பி.சி-யா, எம்.பி.சி-யா என்ற குழப்பம்தான் இருக்கிறது.

ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இந்தக் கணக்கெடுப்பின் ரிசல்ட் வந்ததும், 'இந்தக் கணக்கெடுப்பை ஏற்க முடியாது. எங்கள் இனத்தவர் எண்ணிக்கையை குறைத்துக்காட்டுவதற்கு சதி நடந்திருக்கிறது’ என்ற ரீதியில் அனைத்து சாதிச் சங்கங்களும் நிச்சயம் கொந்​த​ளிக்கும்!

- பாரதி தம்பி, படம்: வீ.ஆனந்தஜோதி