Published:Updated:

70 குடிசைகள்... ஒரு கோடி மோசடி?

அமைச்சர் முகம்மது ஜான் மீது பகீர் குற்றச்சாட்டு!

பிரீமியம் ஸ்டோரி
70 குடிசைகள்... ஒரு கோடி மோசடி?

'அ.தி.மு.க. ஆட்சியின் ஓர் ஆண்டுச் சாதனை யில், நில அபகரிப்புப் புகார் மீதான நடவடிக்கைகளுக்கு பொது மக்களிடம் அமோக ஆதரவு கிடைத்துள்ளது’ என்று, தமிழக முதல்வர் பெருமிதத்தோடு கூறி வருகிறார். இந்த நிலையில், தமிழக சிறுபான்மைத் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான முகம்மது ஜான் மீது, பகீர் நிலஅபகரிப்புப் புகார் கிளம்பவே, ஆளும்கட்சி அதிர்ந்து நிற்கிறது. 

மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. அலுவலகத் தில் புகார் கொடுத்து இருக்கும் வேலூர், சாயிநாத புரத்தைச் சேர்ந்த தாமோதரனிடம் பேசினோம். ''கடந்த 1998-ல் ஆற்காடு அருகில் நபார் அலிகான் என்பவரிடம் இருந்து கூட்டாக 18 ஏக்கர் நிலத்தை வாங்கி, முறைப்படி பத்திரப் பதிவும் செய்தேன். இதற்கு முறையாக வரியும் செலுத்தி வருகிறேன். இதில், தெற்கு ரயில்வேக்கு 2 ஏக்கர் 15 சென்ட் நிலத்தைக் கொடுக்க வேண்டியதாகி விட்டது. மேலும், இஸ்லாமிய மீடியா சென்டர் அமைப்புக்கு ஒரு ஏக்கர் நிலத்தை விற்று விட்டேன். மீதி நிலம் என்னுடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

கடந்த மாதம் திடீரென்று என்னுடைய நிலத்தில் குடிசைகள் முளைத்து இருந்தன. விசாரித்தபோது, 'அமைச்சர் முகம்மது ஜான் சொல்லித்தான் இங்கே குடிசைகள் போட்டு இருக்கிறோம்’ என்று கூறினர். உடனே, அமைச்சரைச் சந்தித்துக் கேட்டேன். ஆனால், அமைச்சரோ என்னைக் கண்டுகொள்ளவும் இல்லை, பதிலும் சொல்லவில்லை. நிலத்தை அபகரிப்பதை விட, அபகரிக்கத் தூண்டுவதும் மோசமான குற்றம்தானே?

70 குடிசைகள்... ஒரு கோடி மோசடி?
##~##

இந்த முகம்மதுஜான்,  கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய காரணத்தால், அ.தி.மு.க-வில் இருந்து 1998-ல் நீக்கப்பட்டவர். அதற்கான ஆதாரக்கடிதம் என்னிடம் இருக்கிறது. இந்த உண்மையை மறைத்துத்தான் எம்.எல்.ஏ. ஸீட் வாங்கி, அமைச்சர் பதவியும் வாங்கி இருக்கிறார்.

எனது நிலத்தில் இப்போது 70-க்கும் மேற்பட்ட குடிசைகள் இருக்கின்றன. இந்தக் குடிசை போடப்பட்ட

70 குடிசைகள்... ஒரு கோடி மோசடி?

நேரத்தில் அமைச்சர் நேரில் வந்து நின்று மேற்பார்வை செய்துள்ளார். என்னுடைய நிலத்தின் மதிப்பு இப்போது கிட்டத் தட்ட ஒரு கோடி ரூபாய். ரத்தமும், வியர்வையும் சிந்தி நான் வாங்கிய நிலம் என் கையைவிட்டுப் போய் விடுமோ என்று கவலையாக இருக்கிறது'' என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அறிய  அமைச்சர் முகம்மது ஜானைச் சந்தித்தோம். ''நீங்கள் சொல்லும் நபர் யார் என்றே எனக்குத் தெரியாது. அந்த நிலம் எங்கு இருக்கிறது என்றும் எனக்குத் தெரியாது. நான் எதற்கு நிலத்தை அபகரிக்க உடந்தையாக இருக்கப் போகிறேன்? ஆனாலும், உண்மையிலேயே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி குடிசைகளை அப்புறப்படுத்தச் சொல்கிறேன். கடந்த 1998-ம் ஆண்டு, அம்மா என்னைக் கட்சியைவிட்டு நீக்கவில்லை. 'தேர்தலில் நிற்கத் தகுதி இல்லை’ என்றுதான் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதன்பிறகு, என்னைக் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொண்டார். என் வளர்ச்சியைப் பிடிக் காத சிலர் இப்படிக் குறை கூறுகிறார்கள்'' என்று சொன்னார்.

இந்தப் புகார் மீதான நடவடிக்கை குறித்து கலெக்டர் அஜய் யாதவிடம் பேசினோம். ''குற்றச்சாட்டு உண்மைதானா என்பது விசாரிக் கப்படும். உண்மை என்று தெரிய வந்தால், தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும், குடிசைகளும் அகற்றப்படும்'' என்று தெரிவித்தார்.

தவறு செய்யும் ஆளும் கட்சியினர் மீதும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான், ஜெயலலிதா அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.

- கே.ஏ.சசிகுமார்

படங்கள் : ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு