Published:Updated:

மோதலைத் தூண்டுகிறாரா பச்சைமால்?

அமைச்சர் மீது பாயும் நாடார்கள்

பிரீமியம் ஸ்டோரி
மோதலைத் தூண்டுகிறாரா பச்சைமால்?

ன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்​கலம் பகுதியில் தனியார் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு அமைச்சர் பச்சைமால் அதீத ஆர்வம் காட்ட, அவருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து இருக்கிறார்கள் இந்து நாடார் சமூகப் பிரமுகர்கள்.

 'கூடங்குளம் விவகாரத்தில் கை கோத்து நின்ற இந்து நாடார், கிறிஸ்துவ மீனவர் ஒற்றுமை​யைச் சீர்குலைக்கவும், இரு சமூ கத்தினர் இடையே மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிளவை ஏற்படுத்தவும்தான் இந்தத் தனியார் மீன்பிடித் துறைமுகம் வருகிறது. இதைச் செயல்படுத்தினால், குமரி மாவட்டம் மிகப்பெரிய கலவரத்தைச் சந்திக்கும். அதனால், தனியார் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும். இல்லை என்றால், நாங்கள் ஊரைக் காலிசெய்யப் போகிறோம்’ என்று இராஜாக்கமங்கலம் பகுதி முழுவதும் போஸ்டர்கள்.

அப்படி என்னதான் பிரச்னை? போராட்​டத்தில் இருந்த பால பிரஜாதிபதி அடிகளாரிடம் பேசினோம்.

''இராஜாக்கமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்ணையூர் பகுதியில் இந்து நாடார்கள் மட்டுமே வாழ்கிறார்கள். இந்த ஊரின் தெற்குப் பகுதியில் கடலும், வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் காயலும், கிழக்குப் பகுதியில் பன்றி வாய்க்கால் ஆறும் அமைந்த தீவு போன்ற கிராமம்.

##~##

மீனவர்கள் யாருமே இல்லாத பண்ணையூரில் இப்போது தனியார் மீன்பிடித் துறைமுகம் என்ற பெயரில், பன்றி வாய்க்கால் ஆற்றை அடைத்து​வைத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் லேசான மழை பெய்தால்கூட, ஆற்று நீர் ஊருக்குள் புகுந்து பண்ணையூருக்கும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களுக்கும் பேரழிவு ஏற்படும். முந்தைய தி.மு.க. ஆட்சியிலேயே இந்தத் தனியார் மீன்பிடித் துறை முகத்தைச் செயல்படுத்த முயன்றார்கள். நாங்கள் போராடியதைத் தொடர்ந்து, அந்தத் திட்டத்தைக் கைவிட்டார்கள். ஆனால், அம்மாவின் ஆட்சியில் அம்மாவுக்கே தெரியாமல் இந்த அநியாயத்தை நடத்துகிறார்கள்.

ஓட்டுப் போட்ட இந்து நாடார்களுக்குத் துரோகம் செய்துவிட்டு, ஒரு தனியார் துறைமுகம் கொண்டு வர, அமைச்சர் ஆர்வம் காட்டுகிறார் என்றால், அதில் மிகப்பெரிய முறைகேடு நடந்து இருப்பதாகச் சந்தேகப்படுகிறேன். இந்தத் தனியார் மீன்பிடித் துறைமுகத்தால் மீனவர்களுக்கோ, அரசுக்​கோ எந்த லாபமும் இல்லை. ஏதோ சிலரின் தனிப்பட்ட லாபத்துக்காக பண்ணையூர் கிராமத்தில் வாழும் இந்து நாடார்கள் வாழ்வை சீரழிக்கப் போகிறார்கள்.

மோதலைத் தூண்டுகிறாரா பச்சைமால்?

பக்கத்திலேயே இராஜாக்கமங்கலம் துறையில் மீனவர்கள் இருக்கும்போது, துறைமுகத்தை அங்கு

மோதலைத் தூண்டுகிறாரா பச்சைமால்?

அமைக்காமல் இந்து நாடார்கள் மட்டுமே வசிக்கும் பண்ணையூரில் அமைப்பதால், மத ரீதியிலும் கலாசார ரீதியிலும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த நிலை நீடித்தால், பண்ணையூர் கிராம மக்கள் ஊரைக் காலி செய்து விட்டுப் போக வேண்டியதுதான்'' என்றார் ஆவேசமாக.

பி.ஜே.பி-யின் இராஜாக்கமங்கலம் ஒன்றிய செயற்​குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான சுகுமாரன், ''இராஜாக்கமங்கலத்துக்கு பக்கத்திலேயே பிள்ளைத்தோப்பு பகுதியில் ஒரு மீன்பிடித் துறைமுகம் இருக்கிறது. அருகிலேயே இன்னொரு துறைமுகத்தை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தத் துறைமுகம் வந்தால், பண்ணையூர், தெக்குறிச்சி, அளத்தங்​கரை, முருங்கைவிளை, கணபதிபுரம், தெக்கூர் என்று இந்து நாடார்கள் வசிக்கும் பகுதிகளின் கட்டமைப்புகளும் மாறிவிடும். துறை​முகம் வந்தால், அவர்​களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இங்குள்ள இந்து நாடார்களின் இடத்தைக் கைப்பற்றி அவர்களை அடி​மைப்​​​படுத்தும் முயற்சி நடக்கிறது'' என்று கொதித்தார்.

இந்த விவகாரம் குறித்து வனத்துறை அமைச்சர் பச்சைமாலிடம் பேசினோம். ''இந்தத் திட்டம் முந்தைய அம்மா ஆட்சியிலேயே போடப்பட்டதுதான். அப்போதே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உட்பட அனைத்து துறையிலும் அனுமதி வாங்கித்தான் இந்த இடத்தை தேர்ந்து எடுத்தார்கள். துறைமுகம் வரு வதால், இந்தப் பகுதி முழுவதும் முன்னேற்றம் அடையும்.

இந்தத் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு சம்பந்தமாகப் பேச பண்ணையூர் மக்களை அழைத்தேன். அவர்கள்தான் வரவில்லை. சொத்த விளை, சங்குத் துறை கடற்கரைகளில் கூட இந்து ஆலயங்கள் இருக்கின்றன. அங்கு மீன்பிடித் தொழில் நடக்கத்தான் இருக்கிறது. இந்து ஆலயங்களுக்கோ, வழிபாட்டுக்கோ எவ்வித இடையூறும் இல்லையே? இப்போது துறைமுகம் அமைய இருக்கும் பகுதி இந்து நாடார்கள் வசிக்கும் பகுதி என்றாலும், ஏற்கெனவே மீனவர்கள் வலை காயப் போடுவதற்குப் பயன்படுத்திய பகுதிதான். இதில் வேறு எந்த முறைகேடும் இல்லை. மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான இந்தத் திட்டத்தில் மத ரீதி யிலான மோதலுக்கு வாய்ப்பே இல்லை'' என்றார் உறுதியாக.

மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை!

- என்.சுவாமிநாதன்

படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு