Published:Updated:

பாடல் ஆசிரியை... டான்ஸ் டீச்சர்!

குடும்பச் சிக்கலில் தியாகு

பிரீமியம் ஸ்டோரி
பாடல் ஆசிரியை... டான்ஸ் டீச்சர்!

'எங்கிருந்து வந்தாயடா

 எனைப் பாடுபடுத்த நீ -

எனைப் பாடுபடுத்த.

எங்கு கொண்டு சென்றாயடா

எனைத் தேடி எடுக்க - நான்

எனைத் தேடி எடுக்க...’ - 'ஃபைவ் ஸ்டார்’ படத்துக்காக கவிஞர் தாமரை எழுதிய பாடல் இது. இன்று, தாமரையின் உண்மை நிலையும் இதுதான்!  

'தியாகு எங்கே?’ என்று, நாம் கடந்த 23.5.12 தேதியிட்ட ஜூ.வி-யில் செய்தி வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் புகார் மழை.

தியாகு பிடியில் விஜயலட்சுமி?

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரது மனைவி விஜயலட்சுமி. எல்லா விவகாரங்களுக்கும் காரணம் என்று இவரை நோக்கித்தான் விரல் நீட்டுகிறது, தாமரையின் நட்பு வட்டாரம். சண்முகசுந்தரத்தை அவரது ஊரில் சந்தித்தோம். ''2001-ம் ஆண்டு எங்களுக்குக் கல்யாணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைங்க. நாங்க ஒரு ஹோட்டல் நடத்தி வந்தோம். அந்தக் கடையில இருந்த ஒரு ரூபாய் காயின் போன்ல இருந்து, விஜி மணிக்கணக்கா யாருகிட்டயோ பேசிக்கிட்டே இருக்காங்கன்னு கடையில வேலை பார்க்கிறவங்க என்கிட்டச் சொன்னாங்க. அதனால விஜியை கடைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டேன்.

##~##

பக்கத்துல இருந்த ஒரு ஸ்கூல்ல டான்ஸ் டீச்சரா வேலைக்குச் சேர்ந்தாங்க. அங்கே போன பிறகு, 'ஸ்கூலுக்கு சரியா வருவதே இல்ல.. வந்தாலும் எப்பவும் போன் பேசிக்கிட்டே இருக்காங்க’னு புகார் சொன்னாங்க. யாருகூடப் பேசுறாங்கன்னு செல்போன் பில் வாங்கிப் பார்த்தேன். ஒரே எண்ணுக்குத்தான் தொடர்ந்து மணிக்கணக்குல பேசுறது தெரிஞ்சுது. யாருன்னு விசாரிச்சபோது, அது எங்க பக்கத்து ஊர்ப் பையன் கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்துச்சு. அந்தப் பையன் தியா குவோட அமைப்பில் இருக்கார். இந்த சமயத்துலதான் விஜி, திடீர்னு குழந்தைகளோட வீட்டைவிட்டுக் காணாமல் போயிட்டாங்க. நான் போலீஸ்ல புகார் கொடுத்தேன். போலீஸ் விசாரித்தபோது, தியாகு நடத்திவரும் தாய்த் தமிழ்ப் பள்ளியில் விஜி இருப்பதாகத் தெரிந்தது.  ஆனால், போலீஸ் நடவடிக்கை எடுக்கப் பயந்து விட்டுட்டாங்க.  

இப்போ விஜிக்கு தனியாவே ஒரு வீடு எடுத்துக் கொடுத்து தங்க வைத்திருக்கிறார் தியாகு. என் குழந்தைகளை என்ன செஞ்சாங்கன்னு தெரியலை. நான் தியாகுக்குப் போன் செய்தும் நேரிலும், 'என் மனைவியை என்னோடு அனுப்பிடுங்க’னு கெஞ்சினேன். அழுதேன். ஆனால், அவர் அதைக் கண்டுக்கவே இல்ல. இப்போ, விவாகரத்து கேட்டு விஜி எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கா. தியாகு எந்தக் கூட்டத்துக்குப் போனாலும் என் மனை வியையும் கூடவேதான் கூட்டிட்டுப் போறார். புருசன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வருவது சகஜம்தானே..? என் பொண்டாட்டியை என்கூடப் பேசக்கூட விடாமத் தடுத்து வச்சிருக்கார் தியாகு. 60-வயசாகும் தியாகுக்கு எதுக்கு இந்தப் புத்தி? எனக்கு என் மனைவியும் குழந்தைகளும்தான் முக்கியம். அவர்களை எப்பாடுபட்டாவது தியாகுவிடம் இருந்து மீட்க வேண்டும்'' என்று ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

பாடல் ஆசிரியை... டான்ஸ் டீச்சர்!

தியாகுவின் மகளோடு விஜயலட்சுமி!

தனது கணவர் சண்முகசுந்தரத்திடம் இருந்து விவாகரத்து கேட்டு எட்டு மாதங்களுக்கு முன்பே வழக்கு தாக்கல் செய்து இருந்தார் விஜயலட்சுமி. விசாரணைக்காக கடந்த 24-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்துக்கு விஜயலட்சுமி வந்திருந்தார். அவரை, தியாகுவின் மகளான சுதா காந்தி அழைத்து வந்தார். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு வெளியில் வந்த விஜயலட்சுமியிடம் பேசினோம். ''இதுபற்றி நான் எதுவும் பேசத் தயாரா இல்லை'' என்று காட்டமாகப் பேசினார். உடன் வந்த தியாகுவின் மகள் சுதா காந்தியிடம் பேசினோம். ''விஜயலட்சுமியை நாங்க யாரும் கட்டாயப்படுத்திக் அழைத்து வந்து, எங்களுடன் வைத்திருக்கவில்லை.  முழுவிருப்பத்தோடுதான் எங்களோடு வந்து தங்கி இருக்காங்க. எங்க அப்பா எங்கேயும் தலைமறைவு ஆகவில்லை. தீவிரமான எழுத்துப் பணியில் இருப்பதால், அவர் செல்போனைப் பயன்படுத்துவது இல்லை. கூட்டங்களுக்கு வழக்கம்போல் போய்க்கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் அவரைப் பார்க்கணும்னா இயக்கத்தின் கூட்டம் எங்கே நடக்குதுன்னு விசாரிச்சுட்டு அங்க  போங்க. நிச்சயம் அங்கே இருப்பார்'' என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.

தியாகுவை அடித்தாரா தாமரை?

தியாகுவுக்கு நெருக்கமான நண்பர்களிடம் பேசினோம். ''சின்னக் குழந்தையாக இருந்தாலும் மிகுந்த மரியாதையோடுதான் தியாகு பேசுவார். ஆனால், தாமரை வீட்டில் அவருக்குக் கொஞ்சமும் மரியாதை கிடையாது. சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் தாமரை சண்டை போட ஆரம்பித்து விட்டார். அதோடு, தியாகு மீது சந்தேகப்படவும் ஆரம்பித்தார். கணவருடன் இருக்கப் பிடிக்காமல், வீட்டைவிட்டு ஓடிவந்த விஜயலட்சுமிக்கு அடைக்கலம் கொடுத்தார் தியாகு. அதைத் தப்பாகப் புரிந்துகொண்ட தாமரை, தியாகுவை பெல்ட்டால் அடித்து சித்ரவதை செய்திருக்கிறார். அந்தப் பெண்ணோடு அவருக்குத் தப்பான உறவு இருப்பதாகவும் பேசி, கொச்சைப்படுத்தி இருக்கிறார். இதற்கு மேலும் தாமரையோடு இருக்க முடியாது என்ற நிலையில்தான் அந்த வீட்டில் இருந்து தியாகு வெளியேறி இருக்கிறார். இப்போது விஜயலட்சுமியின் கணவரைத் தூண்டிவிட்டுப் பேசவைப்பது தாமரையாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை, தியாகுவின் முதல் மனைவியின் மகளான சுதா காந்தியை நியமன உறுப்பினராக நியமித்து உள்ளது. இதுவும் தாமரைக்குப் பிடிக்கவில்லை.

இதே தாமரை பற்றி எத்தனையோ செய்திகள் வந்த போதும், அத்தனையையும் பொறுத்துக் கொண்டு தியாகு அமைதியாகத்தானே இருந்தார். இப்போதுகூட தாமரை மீது அவருக்கு கோபம் கிடையாது. 'கொஞ்ச நாள் கழித்து வீட்டுக்குப் போறேன். எல்லாம் சரியாகிடும்’னுதான் சொல்கிறார். ஆனா, அவங்கதான் கொஞ்சமும் யோசிக்காமல் தியாகுவைப் பத்தி ஏதேதோ சொல்லிட்டு இருக்காங்க'' என்கிறார்கள்.

பாடல் ஆசிரியை... டான்ஸ் டீச்சர்!

பிரச்னைகளுக்கு முடிவு வரும்!

தாமரையின் கருத்தைத் தெரிந்துகொள்ள அவரைத் தொடர்பு கொண்டோம். ''இந்த விவகாரம்பற்றி, நான் எதுவும் பேசும் மன நிலையில் இல்லை. கூடிய சீக்கிரமே எல்லாப் பிரச்னைகளும் முடிவுக்கு வரும். அந்த நம்பிக்கையில்தான் காத்திருக்கிறேன்'' என்று மட்டும் சொன்னார்.

தாமரைக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில்  பேசினோம். ''தியாகு விழுந்திருக்கும் குழியில் இருந்து அவரை மீட்டு எடுக்கத்தான் தாமரை தொடர்ந்து போராடி வருகிறார். கடந்த மூன்று மாதங்களாக நடக்கும் பிரச்னை இது. மீடியா வெளிச்சத்துக்கு வராமலேயே முடிச்சிடலாம்னு எவ்வளவோ முயற்சி செஞ்சாங்க. ஆனா, முடியாமப் போச்சு. கடந்த 15 வருடங்களாகவே, தியாகு மட்டுமே உலகம்னு தாமரை வாழ்ந்துட்டு இருக்காங்க. சினிமாவுக்குப் பாட்டு எழுத ஒவ்வொரு கம்பெனியா ஏறி இறங்கி, அவங்க பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம் கிடையாது. இன்று வரைக்கும் தாமரையோட சம்பாத்தியத்தில்தான் அந்தக் குடும்பம் ஓடிக்கொண்டு இருக்கிறது. தியாகு எங்கே வேலைக்குப் போய் எவ்வளவு சம்பாதித்துக் கொண்டு வந்தார்னு சொல்லச் சொல்லுங்க..?

ஏற்கெனவே அவரோட முன்னாள் மனைவி​யையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு வந்துதான், தாமரையைக் கல்யாணம் செய்துகொண்டார். இப்போது, தாமரையையும் குழந்தையையும் விட்டுட்டு இன்னொன்றைத் தேடிப் போயிருக்​கிறார். தியாகுவோட முன்னாள் மனைவியும் இப்போது தாமரையுடன் பேசிக்கொண்டுதான் இருக்காங்க. 'உங்களுக்கு என்ன உதவி வேணும்​னாலும் செய்யத் தயார்’னு அவங்களும் சொல்லி இருக்காங்க.

தாமரை போய் அவரை அடிக்க முடியுமா சொல்லுங்க. வேண்டும்என்றே தாமரையின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தியாகுவோடு இருக்கும் சிலர் இப்படித் தவறான தகவல்களைப் பரப்பி விட்டுட்டு இருக்காங்க. தியாகு வீட்டைவிட்டு வெளியே போறதுக்கு இரண்டு நாட்களுக்கு முன், சுடுதண்ணீரைத் தூக்கிட்டு வரும்போது தவறி விழுந்து உதடு  கிழிந்து விட்டது. தாமரைதான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் கூடவே இருந்து வைத்தியம் பார்த்து, கூட்டிட்டு வந்தாங்க. அந்த அளவுக்குத் தியாகுவை அவங்க நேசிச்சாங்க. இன்னும் நேசிச்சிக்கிட்டுத்தான் இருக்காங்க. அப்பா வந்தால்தான் சாப்பிடுவேன்னு அவங்க குழந்தை அழுதுக்கிட்டே இருக்கான். சில முக்கியமான ஆட்களை நடுவில் வைத்து தியாகுவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். கூடிய சீக்கிரமே அவர் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையோடு தாமரை காத்துக்கிட்டு இருக்​காங்க'' என்று சொன்னார்கள்.

விஜயலட்சுமி விவகாரம்... தியாகுவின் நிம்மதி​யைக் காவு வாங்கி விட்டது!

- கே.ராஜாதிருவேங்கடம், ம.சபரி

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், க.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு