Published:Updated:

`போலி ஆவணம்; பல கோடி மதிப்பு; மருத மரங்கள்!' - பேராவூரணிக்கு அதிர்ச்சி கொடுத்த வனத்துறை அதிகாரிகள்

வெட்டப்பட்ட மரம்
வெட்டப்பட்ட மரம்

62 டன் எடையிலான மரங்களை கப்பல் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக இரண்டு லாரிகள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பேராவூரணி அருகே வனத்துறையினரின் உதவியுடன் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய அரசுக்குச் சொந்தமான பழைமையான மருத மரங்களை சிலர் வெட்டி கடத்தியுள்ளனர். இதுதொடர்பாக 3 வனத்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கபட்டுள்ள நிலையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மரங்கள்
மரங்கள்

பேராவூரணி அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் என்ற கிராமத்தின் வழியாக கடந்து செல்கிறது கல்லணை கால்வாய் புதுப்பட்டினம் 19-ம் நம்பர் வாய்க்கால். இதன் இரு கரைகள் மற்றும் குளக்ககுடி குளத்தின் கரைகளில் மருத்துவ குணம் கொண்ட மருத மரங்கள் உள்ளன. இந்த மரங்களை வெட்டி வெளிநாடு கடத்துவதற்குத் திட்டமிடப்பட்டது. அதன்படி வனத்துறையினரின் உதவியுடன் போலியான ஆவணங்கள் தயாரித்து 84 மரங்கள் வெட்டப்பட்டன.

62 டன் எடையிலான மரங்களைக் கப்பல் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக இரண்டு லாரிகள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மரம் வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதை அறிந்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்ததுடன் மரத்தை லாரியில் ஏற்றப் பயன்படுத்திய கிரேன் மற்றும் ஒரு லாரியை சிறைப்பிடித்து வைத்ததுடன் இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத மரம்
மருத மரம்

இதுகுறித்து அப்பகுதியினரிடம் பேசினோம். ``கல்லணை கால்வாயிலிருந்த மருத மரங்களை சிலர் வெட்டி லாரியில் ஏற்றி அனுப்பி வைத்துக்கொண்டிருந்தனர். மருத மரங்களை வெட்டுவதற்கு நிரந்தர தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் மரம் வெட்டப்படுவது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மரம் வெட்டிக்கொண்டிருந்த ஒரத்தநாட்டில் மர வாள்பட்டறை கடை வைத்திருக்கும் உரிமையாளரான கணேசன் உள்ளிட்ட மூன்று பேரிடம் இதுகுறித்து கேட்டோம்.

அவர்கள் மரங்கள் வெட்டுவதற்கான கட்டிங் ஆர்டரைக் காண்பித்தனர். 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின்போது விழுந்த கருவேலம் உள்ளிட்ட மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு பெறப்பட்ட ஆர்டரை வைத்து மரங்களை வெட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பட்டுக்கோட்டை வனச்சரகர் இக்பால்
பட்டுக்கோட்டை வனச்சரகர் இக்பால்

இதில் பட்டுக்கோட்டை வனச்சரகர் இக்பால், வனக்காப்பாளர் கணபதி செல்வம் மற்றும் ராமதாஸ் ஆகியோருக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கபட்டது. இவர்களின் உதவியுடன் போலியான ஆவணம் பயன்படுத்தி மரம் வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையைச் சேர்ந்த மூன்று பேர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட கணேசன், ராஜேந்திரன், சண்முகநாதன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குபதிந்து விசாரணை நடைபெற்றது. இதில் கணேசன், ராஜேந்திரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பல கோடி மதிப்புடைய மரங்களை வெளிநாடு கொண்டு செல்வதற்காக வெட்டியுள்ளனர். மேலும், இதில் பலருக்கு தொடர்பிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிற நிலையில் இதை முழுமையாக முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

வனத்துறை துணையுடன் மரம் கடத்தல்?! - லாரியைச் சிறைப்பிடித்த தனுஷ்கோடி கிராம மக்கள்

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``மரம் வெட்டுவதற்கு உடந்தையாக இருந்த வனத்துறையினர் மூன்று பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக வனத்துறையும் பொதுப்பணித்துறை சார்பிலும் வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மரம் வெட்டிய மூன்று பேரில் ஒருவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு