Published:Updated:

`கூடுதல் விலையில் சானிடைஸர்; வாட்ஸ்அப் குரூப்!' -அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நண்பர்கள்

பறிமுதல் செய்யப்பட்ட சானிடைசர்கள்
பறிமுதல் செய்யப்பட்ட சானிடைசர்கள்

144 தடை உத்தரவைப் பயன்படுத்தி கூடுதல் விலைக்கு சானிடைசர்களை வாட்ஸ் அப் குழு உருவாக்கி விற்ற நண்பர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அடிக்கடி கைகளை கழுவும்படி சுகாதாரத்துறையினர் வலியுறுத்திவருகின்றனர். தினமும் 20 தடவை கைகளை கழுவும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கைகளைக் கழுவப் பயன்படுத்தும் சானிடைசர்களின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் சானிடைசர்கள், மாஸ்க்குகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் கூடுதல் விலைக்கு சிலர் அவற்றை விற்றுவருகின்றனர்.

கார்த்திக்கேயன்
கார்த்திக்கேயன்

இந்தநிலையில் சென்னை மாநகராட்சியின் 9-வது மண்டலம், 26 வது வார்டின் மாநகராட்சி அதிகாரி சிவஞானத்துக்கு சானிடைசர்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவர் அளித்த புகாரின்பேரில் மாநகராட்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது வாட்ஸ்அப் மூலம் சானிடைசர்களை கூடுதல் விலைக்கு விற்றது கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் எனத் தெரிய வந்தது. அவரிடமிருந்து 239 சானிடைசர்களை கைப்பற்றினர். பின்னர் அவர் அளித்த தகவலின்படி ஆவடியைச் சேர்ந்த முகமது நிசாமைப் பிடித்தனர். அவர்கள் இருவரையும் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதையடுத்து கோடம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கார்த்திகேயன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 பெட்டிகளைக் கொண்ட 1,505 சானிடைசர் பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவர் மீதும் 7 (1) (a) r/w 3 (1) Essential Commodities Act 1955-ன்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் பிறகு ஜாமீனில் விடுவித்தனர். இவர்கள் இருவரும் வாட்ஸ்அப் குழுவில் சானிடைசர்களை கூடுதல் விலைக்கு விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முகமது நிசாம்
முகமது நிசாம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சானிடைசர்களை வாட்ஸ்அப் மூலம் விற்ற குற்றத்துக்காக கார்த்திகேயன், முகமது நிசாம் ஆகிய இருவரை கைது செய்துள்ளோம். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்களிடமிருந்து 1,505 சானிடைசர்களை பறிமுதல் செய்துள்ளோம். இவர்கள் இருவரும் 144 தடை உத்தரவு அமல்படுத்துவதற்கு முன்பே சானிடைசர்கள், முகக்கவசங்களை மொத்தமாக வாங்கி வைத்துள்ளனர். கூடுதல் விலைக்கு சானிடைசர்களை விற்க வாட்ஸ்அப்பில் குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர். தற்போது அதனால் சிக்கிக் கொண்டனர்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு