Published:Updated:

ஆவடி: குடும்பப் பிரச்னை, மன உளைச்சல்! - 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் நிலையம்
ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் நிலையம் ( பழைய படம் )

குடும்பப் பிரச்னை காரணமாக 2 குழந்தைகளை ஏரியில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு, தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (30). இவரின் மனைவி மாரியம்மாள் (25). இந்தத் தம்பதிக்கு ரித்தீஷ் (6) , ராகேஷ் (4) என இரண்டு மகன்கள் இருந்தனர். கூலித் தொழிலாளியான கணேசன் சரிவர வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு, வீட்டில் தகராறு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த ஆரு மாதங்களுக்கு முன்பு, மாரியம்மாள் இரண்டு குழந்தைகளையும் கணேசனிடம் விட்டுவிட்டு, ஊத்துக்கோட்டையை அடுத்த வடமதுரையிலுள்ள தனது அக்கா வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டார்.

கணவன், மனைவி இருவருக்கும் இடையேயான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்ததை அடுத்து, மாரியம்மாள் கணேசனிடமுள்ள இரண்டு குழந்தைகளையும் தன்னிடம் மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட மகளிர் போலீஸார், கணேசனை வரும் 14-ம் தேதி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்துள்ளனர். மாரியம்மாள் போலீஸாரிடம் முறையிட்டதை அடுத்து, குழந்தைகளைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்ற பயத்தில் கணேசன் பித்துப்பிடித்தவர்போலஹ் திரிந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் நிலையம்
ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் நிலையம்
பழைய படம்

நேற்றைய தினம் கணேசன் கொள்ளுமேடு பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து இரண்டு குழந்தைகளுடன் திடீரென மாயமாகியிருக்கிறார். கணேசன் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கணேசனின் உறவினர்கள் அவரைப் பல இடங்களில் தேடியிருக்கின்றனர். ஆனால், எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அவரின் சகோதரி அனுராதா ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, போலீஸார் மாயமான கணேசனைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

`என் மகள் தற்கொலை பண்ண வாய்ப்பே இல்ல!' - வரதட்சணைக் கொடுமைக்கு பலியானாரா இளம்பெண்?

நேற்று காலை சுமார் 11:30 மணியளவில் ஆவடியை அடுத்த வெள்ளனூர் ஏரியில் இரண்டு குழந்தைகளின் உடல்கள் மிதந்து கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, விசாரணை மேற்கொண்டனர். கணேசனின் சகோதரி அனுராதா அளித்த தகவல்களின் பேரில் ஏரியில் செத்து மிதந்தது கணேசனின் குழந்தைகள் என்பதை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து, கணேசனைத் தீவிரமாகத் தேடிவந்தனர். அப்போது, ஏரிக்கரை அருகே புதரில் கணேசன் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்திருக்கிறார். அவரை மீட்ட போலீஸார், உடனடியாக ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கணேசன்
கணேசன்

இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி டேங்க் ஃபேக்டரி போலீஸார் கூறுகையில், ``மனைவியுடனான குடும்பப் பிரச்னையின் காரணமாக விரக்தியில் இருந்துவந்த கணேசன், தன் இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்வதென முடிவெடுத்திருக்கிறார். அதன்படி, வெள்ளானூர் ஏரிக்குக் குழந்தைகளுடன் சென்றவர், முதலில் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக நீரில் மூழ்கடித்துக் கொலை செய்திருக்கிறார். அதையடுத்து, தன்னுடைய கை நரம்புகளையும் பலமாக அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஆனால், ரத்த வெள்ளத்தில் மயங்கிக்கிடந்த கணேசனைத் துரிதமாகச் செயல்பட்டு மீட்டு, மருத்துவமனையில்அனுமதித்துவிட்டோம். கணேசனுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தன்னுடைய மனைவி, தன் குழந்தைகளைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுவாரோ என்ற அச்சத்தில் கணேசன் இந்த விபரீத முடிவெடுத்திருக்கிறார்" என்றனர்.


குடும்பப் பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தந்தையின் செயல் அந்தப் பகுதி மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு