Published:Updated:

`கவரிங் நகைகளுக்கு ரூ. 2 கோடி கடன்!'- கூட்டுறவு வங்கிக்கு அதிர்ச்சி கொடுத்த அ.தி.மு.க நிர்வாகி

2016 லிருந்து 2018 வரையிலான காலகட்டத்தில் கவரிங் நகைகளை வைத்து இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கூட்டுறவு கடன் சங்கம்
கூட்டுறவு கடன் சங்கம்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கூட்டுறவுச் சங்கத்தில் கவரிங் நகைகளைக் கொடுத்து இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இதில் அ.தி.மு.க-வில் உள்ள ஒருவரும் இருப்பதால் அதிகாரிகளும் போலீஸாரும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். `இவர்கள் செய்த தவற்றால் நாங்கள் எல்லாம் மாட்டிக் கொள்ளப்போகிறோம்' என்று ஆதங்கப்படுகிறார்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்.

கூட்டுறவு சங்கம்
கூட்டுறவு சங்கம்

சென்னை வேளாள தேனாம்பேட்டை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2016-லிருந்து 2018 வரையிலான காலகட்டத்தில் கவரிங் நகைகளை வைத்து இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் முன்னாள் தலைவராக இருந்தவர் பரணி குமார் (எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர்), நகை மதிப்பீட்டாளர் பாலையா, 117-வது வட்டச் செயலாளர் இளைய மாறன், பந்தல் பாபு ஆகியோர் கூட்டணி அமைத்துக் கூட்டு மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. 2 கோடி ரூபாய் அளவுக்கு, கவரிங் நகைகளுக்குக் கடன் கொடுக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அறிந்ததும் நகை மதிப்பீட்டாளர் பாலையா தப்பி ஓடிவிட்டார்.

இதைக் கண்டுபிடித்து கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வேளாள தேனாம்பேட்டை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எந்த அலுவலகப்பணிகளும் நடைபெறாமல் சங்கம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

`எங்களை ஒதுக்கி வச்சுட்டு வியாபாரிகளிடம் வாங்கிட்டாங்க!' -விவசாயிகளைக் கலங்கடித்த `கரும்பு ஊழல்'

வேளாள தேனாம்பேட்டை கூட்டுறவு கடன் சங்கத்தில், தலைவர் பதவியிலிருந்தபோது, கூட்டணி அமைத்து மோசடியில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் பரணி குமார், தற்போது, (TAICO BANK) தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் கோ ஆப்ரேடிவ் வங்கியின் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். மேலும், அ.தி.மு.க-வின் தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் பதவியிலும் இருப்பதால், கூட்டுறவுச் சங்க அதிகாரிகள், காவல்துறையில் இந்த மோசடி குறித்து புகார் கொடுக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். கவரிங் நகைகளை வைத்து 2 கோடி ரூபாய்க்கு எப்படி கணக்குக் காட்டுவதெனத் தெரியாமல் தடுமாறி வரும் அதிகாரிகள், முறைப்படி காவல்துறையில் புகார் கொடுக்கவும் முடியாமல் விழிபிதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

பரணிகுமார்
பரணிகுமார்

அதைத் தொடர்ந்து பரணி குமாரிடம் பேசினோம், ``நான் தலைவராக இருந்தபோது எந்தவித மோசடியும் நடக்கவில்லை. இது முற்றிலும் பொய். நான் தலைவராக இருந்து ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டன. அதன் பிறகு மற்றொரு போர்டும் வந்துவிட்டது. இப்படி இருக்கும்பட்சத்தில் நான் எப்படி பொறுப்பாவேன். அரசியலில் பிடிக்காதவர்கள் எனக்கு எதிராகச் செய்யும் வேலை” என முடித்துக்கொண்டார்.