Published:Updated:

நாகை கஞ்சா டு இலங்கை தங்கக் கட்டி! -தொடர் சம்பவங்களால் மிரளும் கடலோரக் காவல்படை

பறிமுதலான கஞ்சா
பறிமுதலான கஞ்சா

பைபர் படகில் மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது வலையில் ஒரு மூட்டை சிக்கியுள்ளது. அதை எடுத்துப் பார்த்தபோது, அந்த மூட்டைக்குள் 16 பொட்டலங்களில் 32 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்துள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல இடங்களில் பலத்த காவல் இருந்தும், கஞ்சா கடத்தல் தொழில் தடையின்றி நடைபெற்றுவருகிறது. எதேச்சையாகக் கிடைக்கும் கஞ்சாவை கைப்பற்ற முடிகிறதே தவிர, கடத்தல்காரர்களைக் கண்டறிய முடியவில்லை. கடந்த 3 நாட்களில் சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களைக் கைதுசெய்ய முடியாமல், போதை தடுப்புப் போலீஸார் திணறிவருகின்றனர்.

கடத்தல் கஞ்சா
கடத்தல் கஞ்சா

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் மணியன் தீவு, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு ஆகிய கடற்கரைப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு அடிக்கடி கஞ்சா கடத்தப்படுகிறது. இலங்கையில் கஞ்சாவைக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவது தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், கோடியக்கரை அருகே பச்சைக்காட்டுப் பகுதியில் சாக்கு பண்டல்கள் இருப்பதாக வேதாரண்யம் கடலோரக் காவல்படைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலோரக் காவல்படை டிஎஸ்பி குமார் தலைமையில், கோடியக்கரையிலிருந்து படகு மூலம் பச்சைக்காடு சென்றனர்.

அங்கிருந்த சாக்கு மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது, 82 கிலோ கொண்ட 41 கஞ்சா பண்டல்கள் இருந்துள்ளது. கோடியக்கரையிலிருந்து கஞ்சாவை இலங்கைக்கு கடத்திச் சென்றபோது தவறி விழுந்ததா அல்லது இலங்கைக்குக் கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

அடுத்து ஒரு கஞ்சா சம்பவம்:

தரங்கம்பாடி அருகே உள்ள சின்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகாந்த். இவரது பைபர் படகில் மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, வலையில் ஒரு மூட்டை சிக்கியுள்ளது. அதை மீனவர்கள் எடுத்துப் பார்த்தபோது, அந்த மூட்டைக்குள் 16 பொட்டலங்களில் 32 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்துள்ளது. அதைக் கிராம பஞ்சாயத்தார் மூலம் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த இரண்டு சம்பவத்திலும் பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு, சுமார் ரூபாய் 2 கோடி என்றும் கொரோனாவுக்குப் பின் கஞ்சா விலை மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடத்தல் கஞ்சா
கடத்தல் கஞ்சா

இதுபற்றி நாகை மாவட்ட போதை தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரியிடம் பேசினோம்.

"கடத்தல் கஞ்சா பிடிபட்டுள்ளது. கடத்தல்காரர்கள் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன. தீவிர விசாரணை நடந்துவருகிறது. விரைவில் குற்றவாளிகளைக் கைதுசெய்வோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு