Published:Updated:

டி-சர்ட்டுகளுக்கு நடுவில் போதைப்பொருள்; மதிப்பு ரூ.2.34 கோடி! - ஆளில்லா கட்டடத்தில் அதிர்ச்சி

தூத்துக்குடி மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அலுவலகம்
News
தூத்துக்குடி மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அலுவலகம்

தூத்துக்குடியிலிருந்து வெளிநாட்டுக்குக் கடத்த முயன்ற 23 கிலோ எடையுடைய, ரூ.2.34 கோடி மதிப்பிலான 'பெஸ்டோ எபிடெர்ன்' என்ற பயங்கர போதைப்பொருளை மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா, கடல் அட்டை, மஞ்சள் போன்றவை சட்ட விரோதமாகக் கடத்தப்பட்டுவருவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதேநேரத்தில் போதைப்பொருள்கள் கடத்தல் சம்பவமும் அதிகரித்துவருகின்றன. ஹெராயின், பிரவுன் சுகர், ஹஷீஷ், சாரஸ், கேட்டமைன், மெத்தாக்குலின், கிறிஸ்டல் மெத்தான் பட்டமைன் ஆகிய போதைப்பொருள்களும் அதிக அளவில் பிடிபட்டுள்ளன.

தூத்துக்குடி மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அலுவலகம்
தூத்துக்குடி மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அலுவலகம்

போதைப்பொருள்கள் கடத்தலைத் தடுக்கும் வகையிலும், அதில் ஈடுபடும் கும்பலைப் பிடிக்கும் வகையிலும் மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆகியோர் குழுக்களாகத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இருப்பினும் அவ்வப்போது போதைப்பொருள்கள் கடத்தல் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிலையில், தூத்துக்குடி மில்லர்புரம், ஹவுஸிங்போர்டு பகுதியில் போதைப்பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஹவுசிங்போர்டு பகுதியில் சோதனையிட்டனர்.

தூத்துக்குடி மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அலுவலகம்
தூத்துக்குடி மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அலுவலகம்

அங்குள்ள ஒரு கட்டடத்தின் மாடியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளைத் திறந்து சோதனையிட்டதில், சில அட்டைப் பெட்டிகளின் மேல் பகுதியில் டி-சர்ட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அந்த டி-சர்ட்டுகளை எடுத்துவிட்டுப் பார்க்கையில் பெட்டியின் அடிப்பகுதியில் பாலீத்தின் பைகளில் வெள்ளை நிற மாவு போன்ற பொருள்கள் இருந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒருவேளை அது போதைப்பொருளாக இருக்கலாம் என சந்தேகித்த அதிகாரிகள், 23 பாக்கெட்டுகளில் இருந்த அந்த மாவுப்பொருளை பறிமுதல் செய்தனர். அதன் மாதிரியை ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் அது, 'பெஸ்டோ எபிடெர்ன்' என்ற கொடிய போதைப்பொருள் என்பது தெரியவந்தது. ஆட்கள் யாரும் இல்லாத அந்தக் கட்டடத்தில் அட்டைப் பெட்டிகளில் போதைப்பொருள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது குறித்து, போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய சிலரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

டி-சர்ட்டுகளில் மறைத்துவைத்து எங்கிருந்து தூத்துக்குடிக்கு கடத்திவரப்பட்டது? தூத்துக்குடியிலிருந்து எந்த நாட்டுக்குக் கடத்திச் செல்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது எனவும் விசாரணை நடந்துவருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட 23 பாக்கெட்டுகளில் இருந்த 23.42 கிலோ கிராம் பெஸ்டோ எபிடெர்னின் சர்வதேச மதிப்பு, ரூ.2.34 கோடி என அதிகாரிகள் கூறினர்.