Published:Updated:

`பூச்சிக்கொல்லி பவுடரில் போண்டா; கவனக்குறைவால் விபரீதம்!’ - கணவன், மனைவிக்கு நேர்ந்த சோகம்

உயிரிழந்த கணவன்-மனைவி
உயிரிழந்த கணவன்-மனைவி

பூச்சிக்கொல்லி மருந்தைக் கடலை மாவு என்று நினைத்து போண்டா சுட்டு சாப்பிட்டதில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை சின்னத் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி. இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன் சுகுமாருக்கும் (28), பள்ளிப்பட்டு அடுத்த கோரக்குப்பத்தைச் சேர்ந்த பாரதி (20) என்ற பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சம்பவத்தன்று `போண்டா’ சுடுவதற்காகத் தனது மாமனார் பெரியசாமியிடம் கடலை மாவு வாங்கிவருமாறு மருமகள் பாரதி கூறியிருக்கிறார்.

Representational Image
Representational Image

கடைக்குச் சென்ற பெரியசாமி வெல்லம், கடலை மாவு மற்றும் மிளகாய் தோட்டத்துக்கு அடிப்பதற்காகப் பூச்சிக்கொல்லி மருந்து பாக்கெட்டையும் வாங்கிக் கொண்டு வந்தார். மொத்தத்தையும் அவர் சமையல் அறையில் ஒரே இடத்தில் வைத்துவிட்டு வயல்வெளிக்குச் சென்றுவிட்டார். இரண்டு பாக்கெட்டிலிருப்பதும் கடலை மாவு என்று நினைத்த பாரதி ஒன்றாகக் கலந்து நிறைய போண்டா சுட்டுள்ளார். கணவர் சுகுமார், மாமனார் லட்சுமியுடன் சேர்ந்து பாரதியும் நிறைய போண்டாக்களைச் சாப்பிட்டுள்ளார்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்குவந்த மாமனார் பெரியசாமிக்கும் போண்டா கொடுத்துள்ளார் பாரதி. போண்டாவைச் சாப்பிட்ட பெரியசாமி பூச்சிக்கொல்லி மருந்து வாடையை நுகர்ந்தார். சந்தேகமடைந்து, சமையல் அறைக்கு ஓடிச்சென்று பூச்சிக்கொல்லி மருந்து பாக்கெட்டைத் தேடினார். பாக்கெட் காலியாக இருந்தது. `இது, பூச்சிக்கொல்லி மருந்து. அதையும் சேர்த்து கலந்து விட்டீர்களா?’ என்று பெரியசாமி கேட்க, பதறிப்போன மருமகள் பாரதி, `ஆமாம் மாமா, கடலை மாவுனு நினைத்து அதையும் கலந்து போண்டா சுட்டுட்டேன்’’ என்று கூறியதாகச் சொல்கிறார்கள்.

உயிரிழந்த கணவன்-மனைவி
உயிரிழந்த கணவன்-மனைவி

சிறிது நேரத்தில் பெரியசாமி, அவரின் மனைவி லட்சுமி, மகன் சுகுமார், மருமகள் பாரதி ஆகிய 4 பேரும் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர். அக்கம் பக்கம் வசிக்கும் உறவினர்கள் நான்கு பேரையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்குச் சிகிச்சை பலனின்றி சுகுமாரும், அவரின் மனைவி பாரதியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாமனார் பெரியசாமியும், அவரின் மனைவி லட்சுமியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இதுகுறித்து, அரக்கோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

சடலம் (கோப்புப் படம்)
சடலம் (கோப்புப் படம்)

மேலும், உயிரிழந்த பாரதிக்குத் திருமணமாகி ஓராண்டே ஆவதால், ஸ்ரீபெரும்புதூர் சப்-கலெக்டர் மேற்பார்வையில் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அடுத்த கட்டுரைக்கு