Published:Updated:

இருவர் கொலை; சாலையில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள்மீது கொடூரத் தாக்குதல்! - மர்ம ஆசாமிகளுக்கு வலை

விழுப்புரம் காவல்துறை
News
விழுப்புரம் காவல்துறை

நேற்று ஒரே இரவில் அரங்கேறிய இரு குற்றச் சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

விழுப்புரம் மாவட்டம்,, கண்டமங்கலம் அருகிலிருக்கும் கலித்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா (80). இவர் மகள் பூங்காவனம் (52). இருவரும் தங்கள் கணவர்களை இழந்தவர்கள். பூங்காவனம் கூலி வேலைக்குச் சென்று கிடைக்கும் வருமானத்தில் இருவரும் வாழ்க்கையை நகர்த்தி வந்தனர். இந்த நிலையில், இருவரும் வழக்கம்போல நேற்றிரவு உணவு அருந்திவிட்டு வீட்டில் உறங்கச் சென்றிருக்கின்றனர். அப்போது, திடீரென வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், இருவரையும் தலைப் பகுதியில் பலமாகத் தாக்கியிருக்கின்றனர். அதில், பலத்த காயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களைக் கொலை செய்த மர்ம நபர்கள், அவர்கள் அணிந்திருந்த நகைகளையும் திருடிச் சென்றனர். மறுநாள் காலை இருவரும் வீட்டுக்குள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருவர்
உயிரிழந்த இருவர்

சம்பவ இடத்துக்கு விரைந்த கண்டமங்கலம் காவல்துறையினர், இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் பின்னர், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை தொடங்கியது. விழுப்புரம் சரக டி.ஐ.ஐி பாண்டியன், எஸ்.பி.ஸ்ரீநாதா ஆகியோரும் நேரில் சென்று ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து காவல்துறையினர், இருவரும் நகை, பணத்துக்காகக் கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு காரணங்களுக்காகக் கொலை செய்யப்பட்டார்களா என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேபோல, கலித்திராம்பட்டை அடுத்த குள்ளந்தாவடியைச் சேர்ந்த அஞ்சம்மாள், நாகலிங்கம் என்ற இருவர் நேற்று (06.12.2021) செங்கல் சூளையில் வேலை செய்துவிட்டு, இரவு சாலையோரமாகப் படுத்திருந்தனர். அப்போது, நள்ளிரவில் திடீரென வந்த மர்ம நபர்கள், இருவரையும் பலமாகத் தாக்கியிருக்கின்றனர். அதில் பலத்த காயமடைந்த இருவரும் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று ஒரே இரவில் அரங்கேறிய இரு குற்றச் சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

சம்பவ இடத்தில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை
சம்பவ இடத்தில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை

இது தொடர்பாக கண்டமங்கலம் காவல் நிலையத்தில் தொடர்புகொண்டு பேசினோம். ``நேற்றிரவு சுமார் 11 மணிக்கு மேலாகத்தான், இந்தச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சாலையோரமாகப் படுத்திருந்த இருவர்தான் முதலில் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள், புதுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதன் பின்னரே, சரோஜாவும் பூங்காவனமும் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இருவரும் உயிரிழந்து கிடப்பதாக இன்று காலையில் தகவல் கிடைத்தது. நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுவருகிறோம். மாவட்ட எஸ்.பி.ஸ்ரீநாதா அவர்களின் ஆலோசனையின்படி, விழுப்புரம் மாவட்ட டி.எஸ்.பி தலைமையில் ஐந்து சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. புகாரைப் பெற்று தீவிரமாக விசாரித்துவருகிறோம்" என்றனர்.