Published:Updated:

`4 நாள்களில் 2 கொலை; கலெக்டர், எஸ்.பி அலுவலகங்கள் அருகே சம்பவங்கள்!’ - பதறும் பெரம்பலூர்

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

`கடந்த நான்கு நாள்களில் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. அதுவும் கலெக்டர் ஆபீஸ் மற்றும் எஸ்.பி ஆபீஸ் அருகருகே நடந்துள்ளது'.

பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு நாள்களில் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இன்றுவரையிலும் குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். மாவட்டத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். காவல்துறையின் அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கபிலன்
கபிலன்

பெரம்பலூர் மாவட்டம், துறை மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கபிலன். இவர் மீது கொலை, கொள்ளை எனப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கெனவே ஒரு முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கபிலன் ஜூன் 1ம் தேதி இரவு 9 மணியளவில் துறை மங்கலத்தில் உள்ள வி.ஏ.ஒ அலுவலகத்தின் பின்புறம் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியபடி கிடந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என்ன காரணத்திற்காகக் கொலை செய்தனர்? குடிபோதையில் ஏற்பட்ட தகராறா அல்லது முன்விரோதமா என்று பெரம்பலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 2ம் தேதி அடுத்த கொலை நடந்திருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம், சங்கு பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் வல்லத்தரசு இவர் அ.ம.மு.க-வில் நகர மாணவரணிச் செயலாளரான இவர்,விளாமுத்தூர் சாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

அ.ம.மு.க பிரமுகர் வல்லத்தரசு
அ.ம.மு.க பிரமுகர் வல்லத்தரசு

தகவலறிந்த பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது ரத்தக் காயத்துடன் கிடந்த வல்லத்தரசு, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா ஆகியோரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வல்லத்தரசு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குற்றவாளிகளை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரையிடம் பேசினோம். ``பெரம்பலூர் மாவட்டம் கொலையாளிகளின் கூடாரமா என்று தெரியவில்லை. கடந்த நான்கு நாள்களில் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. அதுவும் கலெக்டர் ஆபீஸ் மற்றும் எஸ்.பி ஆபீஸ் அருகருகே நடந்துள்ளது. இதனால், மக்கள் நிலைகுலைந்து போய் அச்சத்தின் பிடியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்.
பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்.

சமீபகாலமாகவே பெரம்பலூர் மாவட்டத்தில் ரவுடிக் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து திருட்டு, கொள்ளை, கொலை, வழிப்பறிச் சம்பவம் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அலட்சியப்போக்கு செயல்படுவதால் தான் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. குற்றவாளிகளில் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டும் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தவிர்க்கப்படும் இல்லையேல் கேள்விக்குறிதான்’’ என்று வேதனையுடன் முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு