தூத்துக்குடி அருகேயுள்ள செந்திலாம்பண்ணையைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. கூலி வேலை பார்த்துவரும் இவர்மீது கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாரின் குற்றவாளிகள் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே சிறை சென்றுள்ளார். இந்த நிலையில், இவர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை முன் நின்றுகொண்டிருந்தார். அப்போது கத்தி, அரிவாளுடன் வந்த மூன்று பேர்கொண்ட கும்பல் நொடிப் பொழுதில் முத்துப்பாண்டியைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியோடியது.

இதில், முத்துப்பாண்டியின் தலை சிதைந்து உயிரிழந்தார். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், முத்துப்பாண்டிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவருக்கும் கஞ்சா விற்பனை தொடர்பாக முன்விரோதம் இருந்தது தெரியவந்திருக்கிறது. லெட்சுமணன் மீது முத்துப்பாண்டியின் மனைவி அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஏற்கெனவே கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முன்விரோதத்தால் முத்துப்பாண்டி கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் வேறு ஏதும் காரணத்துக்காக கொலை நடந்ததா, இதன் பின்னணியில் ரௌடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் உள்ளனரா எனவும் விசாரணை நடந்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பேருந்து நிலையத்துக்குள் நடந்த இந்தச் சம்பவம் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் நகைக்காகப் பெண் ஒருவர் அடித்து, கழுத்தை நெரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்தவர் ராஜூ. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தன் மகனுடன் மளிகைக்கடை நடத்திவருகிறார். அதனால், பகல் நேரத்தில் ராஜூவின் மனைவி பவானி மட்டும் வீட்டில் இருப்பது வழக்கம். இந்த நிலையில், ராஜூவின் வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல், பவானியை இரும்புக்கம்பியால் தாக்கியும், சேலையால் கழுத்தை இறுக்கியும் கொலைசெய்தது. இதில் பவானி உயிரிழந்தார், பின்னர் அவர் உடலைக் கட்டிலில் சாய்வாக அமரவைத்துவிட்டு அவர் காதில் கிடந்த ஒரு ஜோடிக் கம்மலை எடுத்துக்கொண்டனர். பீரோவை உடைத்துப் பார்த்ததில் பணம், நகைகள் ஏதும் இல்லாததால் தப்பியோடினர்.

இந்தச் சம்பவம் நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில், தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் மனைவி இன்னொருவருடன் சென்ற ஆத்திரத்தில், நபர் ஒருவர் தன் மாமியாரைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவமும் அரங்கேறியுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலைச் சம்பவங்களும், ஒரு கொலை முயற்சி சம்பவமும் பெரும் பதற்றத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளன.