Published:Updated:

`இனியும் அவனை விடக்கூடாது எனக் கூறி அழுதாள்!’ -வேலூர் பெண்ணால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட சுனில்
கொலை செய்யப்பட்ட சுனில்

குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் ஒருவரை பெண் ஒருவர், கொடூரமாக கொலை செய்த சம்பவம், வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

வேலூர் விருதம்பட்டு வஞ்சூரைச் சேர்ந்தவர் சுனில் (28). இவர் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட சிறுசிறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், விருதம்பட்டு பாலாற்றங்கரைக்கு அருகில் உள்ள சர்க்கார் தோப்புப் பகுதியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் சுனில் நேற்று சடலமாகக் கிடந்தார்.

காட்பாடி டி.எஸ்.பி துரைபாண்டியன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மோப்ப நாய் சன்னியையும் சம்பவ பகுதிக்கு வரவழைத்து கொலையாளிகளைக் கண்டறிய முயன்றனர்.

கொலை செய்யும்போது `ஆன்' ஆன செல்போன்; காட்டிக்கொடுத்த ஆடியோ! - சென்னைக் கடற்கரையில் நடந்த கொடூரம்

சுனிலின் உடல் கிடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் அருகில் உள்ள வீட்டை நோக்கி மோப்ப நோய் ஓடிச் சென்றது. அந்த வீடு பூட்டப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த போலீஸார் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். வீடு முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது. அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த வீட்டிலிருந்த கோகிலா என்ற பெண்ணுக்கும் சுனிலுக்கும் தவறான தொடர்பு இருந்ததும், நேற்று முன்தினம் இரவு வரை வீட்டிலிருந்த அந்தப் பெண்ணும் அவரின் பெற்றோரும் திடீரென மாயமாகியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, டி.எஸ்.பி துரைபாண்டியன் தலைமையிலான போலீஸார் கோகிலாவின் செல் நம்பரை ஆய்வு செய்தனர். கடைசியாக அவர் ஆற்காடுப் பகுதியைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான மணிகண்டன் (28) என்பவருடன் பேசியிருப்பது தெரியவந்தது. மணிகண்டனை நேற்றிரவு தேடிப்பிடித்த போலீஸார் அவருடன் இருந்த மற்றொரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரான காங்கேயநல்லூரைச் சேர்ந்த சதீஷ்குமாரையும் (27) மடக்கிப்பிடித்துக் காவல் நிலையம் அழைத்துவந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சம்பவ இடத்தில் போலீஸார்
சம்பவ இடத்தில் போலீஸார்

போலீஸாரிடம் மணிகண்டன் கொடுத்த வாக்குமூலத்தில், ``எனக்குச் சொந்த ஊர் மன்னார்குடி. என்னுடைய நண்பரான இப்ராஹிம் என்பவரின் மனைவிதான் இந்த கோகிலா. இப்ராஹிமுக்கும் மன்னார்குடிதான். திருமணத்துக்குப் பிறகு விருதம்பட்டில் உள்ள மனைவியின் வீட்டிலேயே இப்ராஹிம் தங்கிவிட்டார். ஒரு மகனும் ஒரு மகளும் அவர்களுக்கு உள்ளனர். நானும் வேலை தேடி மன்னார்குடியிலிருந்து வேலூர் வந்துவிட்டேன். வெளியில் தங்க வசதியில்லாத காரணத்தினால் இப்ராஹிமின் மாமியார் வீட்டிலேயே நானும் தங்கிவிட்டேன்.

இந்தச் சூழலில், ஆண் நண்பர்கள் பலருடன் கோகிலா நெருக்கமாக பழகத் தொடங்கினார். அப்படித்தான் கொலை செய்யப்பட்ட சுனிலுடனும் கோகிலாவுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டது. மனைவியின் தவறான நடத்தையால் மன உளைச்சலுக்கு ஆளான என் நண்பர் இப்ராஹிம், சுனிலை கண்டித்தார். ஆத்திரமடைந்த சுனில், இப்ராஹிமை அடித்து உதைத்தான். அதையடுத்து, மனைவியுடன் வாழப் பிடிக்காமல் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிய இப்ராஹிம் இதுவரை எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்றுகூட எங்களுக்குத் தெரியாது.

கைதுசெய்யப்பட்ட சதீஷ்குமார், மணிகண்டன்
கைதுசெய்யப்பட்ட சதீஷ்குமார், மணிகண்டன்

நண்பன் சென்ற பிறகு நானும் கோகிலாவின் வீட்டிலிருந்து வெளியேறி ஆற்காடு பகுதியில் தங்கி ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறேன். கோகிலாவுடன் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. சுனிலிடமிருந்து கோகிலா கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கினாள். ஆனாலும், சுனில் தினமும் மதுபோதையில் கோகிலாவின் வீட்டுக்கு வந்து தனிமையில் இருக்கலாம் என்று அழைத்தான். விருப்பத்துக்கு இடம் கொடுக்காத கோகிலாவை அடித்து உதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். மூன்று நாள்களுக்கு முன்பு கோகிலாவை சரமாரியாக தாக்கினான் சுனில்.

இதுபற்றி என்னிடம் கூறி கோகிலா கதறி அழுதாள். அவளின் அழுகையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் சுனிலைக் கண்டித்தேன். பதிலுக்கு அவன், எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தான். இனியும் அவனை விடக் கூடாது என்று கோகிலா கூறினாள். அதையடுத்தே, சுனிலை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டோம். கோகிலா மற்றும் அவளின் அப்பா முத்து, என்னுடைய நண்பனான மற்றொரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சதீஷ்குமார் ஆகிய மூன்று பேரும் கொலைக்கு உடந்தையாக இருந்தனர். நேற்று முன்தினம் கோகிலாவின் வீட்டுக்குள் நானும் சதீஷ்குமாரும் பதுங்கியிருந்தோம். நாங்கள் நினைத்ததுபோலவே சுனில் மதுபோதையில் அங்கு வந்தான். அவனை வீட்டுக்குள் வைத்து ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தோம்.

போதையால் வந்த வினை; நண்பரால் கொலை செய்யப்பட்ட வாலிபர்! -பரமக்குடியில் பயங்கரம்

நள்ளிரவு ஆனபிறகு உடலை வீட்டிலிருந்து தூக்கிச் சென்று வெளியில் வீசிவிட்டு தப்பிச் சென்றோம். கோகிலாவும் அவளின் அப்பாவும் எங்கு பதுங்கியுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியாது’’ என்று மணிகண்டன் கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

மணிகண்டனையும் சதீஷ்குமாரையும் கைதுசெய்த போலீஸார், தலைமறைவாக உள்ள கோகிலாவையும் அவரின் தந்தையையும் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். ``ஊரடங்கு அமலில் இருப்பதால் அவர்கள் வெளியூர் தப்பிச் செல்ல வாய்ப்பில்லை. உள்ளூரில்தான் பதுங்கியிருப்பார்கள். விரைவில் அவர்களையும் கைதுசெய்வோம்" என்று கூறினார், காட்பாடி டி.எஸ்.பி துரைபாண்டியன்.

அடுத்த கட்டுரைக்கு