Published:Updated:

`போதையில் இது வேற ரகம்; லிட்டர் 300 ரூபாய்..!' - `பாங்கு' பானத்தால் பதறிய ராமேஸ்வரம் போலீஸ்

போதை பானம் 'பாங்கு'
போதை பானம் 'பாங்கு'

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதும், அனுமதியின்றி கள் விற்பனை செய்வதும் தொடர்ந்து நடந்துவருகின்றன. இவை எதுவுமே கிடைக்காதவர்கள் போதைக்காக ரசாயனக் கலவைகளைக் கலந்து குடித்து உயிரைவிட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

போதை பானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட இருவரை ராமேஸ்வரம் நகரக் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 லிட்டர் போதை பானம் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையைத் தவிர அனைத்துக் கடைகளும் முழு ஊரடங்கினால் மூடப்பட்டுள்ளன. இதில் அரசு மதுபானக் கடைகளும் அடக்கம். இதனால் மதுபானப் பிரியர்கள், குடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதையும் மீறி சில இடங்களில் அரசு மதுபானக் கடைகளை உடைத்து மதுபானங்களை திருடிச் சென்று குடிப்பது, மதுபானக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களே கடைகளில் உள்ள மதுபான பாட்டில்களை எடுத்துச் சென்று அதிக விலைக்குக் கள்ளத்தனமாக விற்பது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

போதை பானம் 'பாங்கு'
போதை பானம் 'பாங்கு'

இதையும் தாண்டி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதும், அனுமதியின்றி கள் விற்பனை செய்வதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவை எதுவுமே கிடைக்காதவர்கள் போதைக்காக சில ரசாயனக் கலவைகளைக் கலந்து குடித்து உயிரை விட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் கஞ்சா மற்றும் பழங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட 'பாங்கு' எனும் போதை பானம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவுப்படி ராமேஸ்வரம் நகரக் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சசிக்குமார் தலைமையில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில் ராமேஸ்வரம் நடுத்தெருவைச் சேர்ந்த பிரவீன்குமார், பத்ரிநாத் ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்த போது போதை பானம் தயாரித்து மதுபானப் பிரியர்களிடம் ஒரு லிட்டர் ரூ.300-க்கு விற்று வந்ததை ஒப்புக்கொண்டனர்.

போதை பானம் தயாரித்ததாக கைது செய்யப்பட்டவர்கள்
போதை பானம் தயாரித்ததாக கைது செய்யப்பட்டவர்கள்

அவர்களிடமிருந்து சுமார் 20 லிட்டர் போதை பானத்தை பறிமுதல் செய்த போலீஸார், பிரவீன்குமார் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு