Published:Updated:

`அமெரிக்காவிலிருந்து மூதாட்டி அனுப்பிய புகார்!' -சென்னை திரும்புவதற்குள் திருடனைப் பிடித்த போலீஸ்

சென்னையில் உள்ள வீட்டில் கொள்ளை நடந்ததும் 73 வயதான மூதாட்டி அமெரிக்காவிலிருந்து ஆன்லைனிலேயே புகார் தெரிவித்தார். அவர் ஊர் திரும்புவதற்குள் திருடர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மூதாட்டி வசந்தகுமாரி அனுப்பிய கடிதம்
மூதாட்டி வசந்தகுமாரி அனுப்பிய கடிதம்

சென்னை முகப்பேர் மேற்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் வசந்தகுமாரி (73). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வசித்துவரும் தன் மகள் திவ்யாவைப் பார்க்கச் சென்றார். அப்போது வீட்டின் சாவியை அதே அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் விமலா என்பவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். வசந்தகுமாரியின் வீட்டில் வேலை செய்பவர் சின்ன நொளம்பூரைச் சேர்ந்த வள்ளி (40). இவரிடம் வசந்தகுமாரி, அடிக்கடி வீட்டை சுத்தம் செய்து வைக்கும்படி கூறியிருந்தார். அதன்பேரில் வள்ளியும் வீட்டுக்கு வந்து சுத்தம் செய்துவந்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்
`ஜன்னலை உடைக்க வெல்டிங்; மிளகாய்ப்பொடி!' - தஞ்சை வங்கி ஊழியர்களை அதிரவைத்த கொள்ளை முயற்சி

இந்தச் சமயத்தில் கடந்த 22.11.2019-ல் வீட்டை சுத்தம் செய்ய வள்ளி வந்தார். விமலாவிடம் சாவியை வாங்கி வீட்டை திறந்தார். அப்போது வீட்டுக்குள் துணிகள், பொருள்கள் எல்லாம் சிதறிக் கிடந்தன. சமையலறையின் பால்கனி கதவு திறந்து கிடந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தவர், உடனடியாக விமலாவிடம் தகவலைத் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக நொளம்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் விமலா.

இந்தத் தகவல் வசந்தகுமாரிக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, இ-மெயில் மற்றும் போன் மூலமாக மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமாரி, நொளம்பூர் இன்ஸ்பெக்டர் சத்யலிங்கம் ஆகியோரிடம் அமெரிக்காவில் இருந்தபடியே பேசினார். இதையடுத்து, நொளம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் பவுன் ஆகியோர் கொள்ளை நடந்த வீட்டுக்குச் சென்றனர். பின்னர் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீஸார் ஆய்வுசெய்தனர்.

கைதான அருண்
கைதான அருண்

அப்போது, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வெளிநபர்கள் அங்கு வந்துசெல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. கொள்ளை நடந்த வீட்டிலிருந்து கைரேகைகளைப் போலீஸார் பதிவு செய்தனர். தொடர்ந்து, வெளிநபர்களின் கைரேகைகளை போலீஸார் பதிவு செய்து கொள்ளையர்களின் கைரேகையோடு ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்போது, அங்கு வேலைக்கு வந்த 2 பேர் கைரேகையைப் பதிவு செய்ய வராமல் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவந்தனர். இதனால் அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர்களின் கைரேகையைப் பதிவுசெய்து கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த கைரேகையோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது அது ஒரேமாதிரியாக இருந்தது கண்டறியப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், கொள்ளையடித்த நபரின் பெயர் ராஜ்குமார் (23), அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

கைதான ராஜ்குமார்
கைதான ராஜ்குமார்

ராஜ்குமார் அளித்த தகவலின்படி அவரின் உறவினர் அருணைப் போலீஸார் பிடித்தனர். இந்தக் கொள்ளை சம்பவத்தில் இருவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து நகைகளைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

கொள்ளை நடந்த வீட்டின் உரிமையாளர் வசந்தகுமாரி, அமெரிக்காவிலிருந்து டிசம்பர் முதல் வாரத்தில் சென்னைக்கு வரவுள்ளார். அதற்குள் கொள்ளையர்களைப் பிடித்து நகைகளை மீட்டுள்ளனர், சென்னை நொளம்பூர் போலீஸார்.

அமெரிக்காவிலிருந்து வசந்தகுமாரி, போலீஸ் இணை கமிஷனர் விஜயகுமாரிக்கு நன்றிக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், `நான் தங்களுக்கு 23.11.2019ல் என் வீட்டில் நகைகள் திருட்டுப் போனதை மீட்டுத்தரக்கோரி அமெரிக்காவிலிருந்து உதவி கோரியிருந்தேன். தங்களின் துரித நடவடிக்கையால் உடனடியாக குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நகைகளை மீட்டுதந்ததற்கு மிக்க நன்றி. நான் சென்னைக்கு வராமலேயே என் கோரிக்கையை நீங்கள் பரிசீலித்து உதவியதன் மூலம் தமிழக காவல்துறையின் மேல் நான் கொண்ட மரியாதை பன்மடங்கு உயர்ந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து ஊடக நண்பர்களுக்கும் வசந்தகுமாரி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

வசந்தகுமாரியின் கடிதம்
வசந்தகுமாரியின் கடிதம்

இதுகுறித்து இணை கமிஷனர் விஜயகுமாரியிடம் கேட்டதற்கு, `என் கடமையைச் செய்துள்ளேன்' என்றார் சுருக்கமாக.

இந்த வழக்கு குறித்து இன்ஸ்பெக்டர் சத்யலிங்கத்திடம் பேசினோம். ``கொள்ளை சம்பவம் குறித்து நொளம்பூர் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததும் விசாரணை நடத்தினோம். கைரேகையும் சிசிடிவி காட்சிகளும்தான் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் துப்புதுலங்க முக்கிய காரணம்.

அருண் என்பவர் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சில பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்துவருகிறார். இதனால், அடுக்குமாடி குடியிருப்பில் வசந்தகுமாரி குடியிருக்கும் 4வது மாடி வீட்டின் முழு அமைப்பும் அருணுக்கு நன்றாகத் தெரியும். அவர் வீட்டில் இல்லாத தகவலும் அருணுக்குத் தெரியும். இந்த நிலையில், அருணின் உறவினர் ராஜ்குமார் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்தார். இதனால் தனக்கு உதவியாளராக ராஜ்குமாரை மாதம் 15,000 ரூபாய் சம்பளத்தில் அருண் பணியமர்த்தியிருந்தார்.

`5,000 பக்கங்கள்; அடுத்த வாரம் ஆக்‌ஷன்!'- தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பார்த்தவர்கள் விவரம்

வசந்தகுமாரி குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பெயின்டிங் வேலை நடந்துவருகிறது. அதற்காக கயிறு கட்டப்பட்டிருந்தது. அந்தக் கயிறு மூலம் கீழே இறங்கிய ராஜ்குமார், வசந்தகுமாரியின் வீட்டுக்குள் பால்கனி வழியாக உள்ளே நுழைந்தார். வீட்டுக்குள் சென்றபோது 30,000 ரூபாய் பணம் இருந்துள்ளது. அதையும் வீட்டின் இன்னொரு சாவியையும் அருணிடம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தில் இருவரும் சந்தோஷமாக தீபாவளிப் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

பணம் கொள்ளை நடந்தபிறகு வீட்டுக்கு வள்ளி வந்து சென்றார். கொள்ளை நடந்தது குறித்து யாருக்கும் தெரியவில்லை என்பதால் மீண்டும் வசந்தகுமாரி வீட்டுக்குள் நுழைய அருணும் ராஜ்குமாரும் திட்டமிட்டனர். சம்பவத்தன்று வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பீரோவை திறக்க முயன்றுள்ளனர். ஆனால், பீரோவைத் திறக்க முடியவில்லை. இதனால் ஸ்குரூடிரைவர் மூலம் பீரோவின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் சத்யலிங்கம்
இன்ஸ்பெக்டர் சத்யலிங்கம்

பீரோ உடைக்கப்பட்டதைப் பார்த்து வள்ளி தகவலைச் சொல்லியுள்ளார். அதன்பிறகுதான் நாங்கள் விசாரணை நடத்தினோம். முதலில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தொடர் கொள்ளையன் இல்லை என்பதை உறுதி செய்தோம். முதல் தடவையாக கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதை சில தடயங்களின் அடிப்படையில் முடிவு செய்தோம். நாங்கள் நினைத்ததுபோலவே முதல் தடவையாக ராஜ்குமாரும் அருணும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்றார் விரிவாக.