Published:Updated:

`நள்ளிரவில் இழுத்துச் செல்லப்பட்ட ட்ராலி சூட்கேஸ்!' -சோம்பேறித்தனத்தால் சிக்கிய திருடர்கள்

சூட்கேஸ் கொள்ளையன்
சூட்கேஸ் கொள்ளையன்

திருடச் செல்லும்போது கையில் பையைக்கூட எடுத்துச் செல்லாத திருடர்கள், சூட்கேஸையும் திருடியுள்ளனர். அதனால் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டனர்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை நீலாங்கரையில் கடந்த மாதம் மருத்துவர் ஒருவரின் வீட்டில் 15 சவரன் தங்க நகைகள், 5,000 ரூபாய், விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவை கொள்ளை போனது. இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் மருத்துவர் புகாரளித்தார்.

அதன்பேரில் நீலாங்கரை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும் மருத்துவர் வீடு அமைந்துள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் கொள்ளையடித்துவிட்டு வெளியில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு

இந்தநிலையில், நீலாங்கரை மருத்துவர் வீட்டில் கொள்ளை நடந்த 20 நாள்களில் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூர், 4-வது அவென்யூவில் இன்னொரு கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியர் ஜெசிகா என்பவர் 19-ம் தேதி கானத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், `14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை வெளியில் சென்றிருந்தேன். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர், தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சுத்தம் செய்வதற்காக வீட்டுக்கு வந்து சென்றார்.

`அவனே வளர்த்த மாதிரி விக்கறதுக்கு வந்தான்!’ -தூத்துக்குடி விவசாயியைப் பதறவைத்த ஆடு திருடன்

18-ம் தேதி காலை அந்தப் பெண் வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து தகவல் தெரிவித்தார். அன்றைய தினம் 7 மணியளவில் நான் வீட்டுக்கு வந்தேன். 2,15,000 ரூபாய் மதிப்பிலான ஐபோன்கள், தங்கச் செயின்கள், வைர நகைகள், வெள்ளி நகைகள் ஆகியவை கொள்ளை போயிருந்தன' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் கானத்தூர் போலீஸார் வழக்குபதிந்து விசாரித்தனர். இந்த 2 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதை போலீஸார் சிசிடிவி மூலம் உறுதிப்படுத்தினர்.

உலகநாதன், நல்லசிவம்
உலகநாதன், நல்லசிவம்

இதற்கிடையில் கானத்தூர் கொள்ளைச் சம்பவத்தில் 10 வெளிநாட்டு மதுபாட்டில்களையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 2 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் சிசிடிவி கேமரா பதிவு மூலம் விசாரணையை நடத்தினர். அப்போது, கிழக்குக் கடற்கரைச் சாலையில் நள்ளிரவில் ட்ராலி சூட்கேஸுடன் ஒருவர் ஆட்டோவில் ஏறிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

அந்த ஆட்டோவின் பதிவு நம்பரை ஆய்வு செய்து டிரைவரை போலீஸார் கண்டுபிடித்தனர். பின்னர் ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தபோது திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் அந்த நபரை இறக்கிவிட்டுச் சென்ற தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனே திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள விடுதிகளில் போலீஸார் விசாரித்தபோது கொள்ளையன் குறித்த தகவல் தெரியவந்தது.

பறிமுதல் செய்யபட்ட நகைகள்
பறிமுதல் செய்யபட்ட நகைகள்

விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஆயக்குடி ஒ.பெரியநாயகம் பகுதியை சேர்ந்த உலகநாதன் (19), தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா முத்து கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த நல்லசிவம் (24) எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து நகை, பணம், ஐபோன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் பனையூர், நீலாங்கரைப் பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

உலகநாதனும் நல்லசிவமும் திருடச் சென்றபோது கையில் எந்தப் பையும் கொண்டு செல்லவில்லை. அதனால் கொள்ளையடித்த வீட்டிலேயே ட்ராலி சூட்கேஸைத் திருடியுள்ளனர். பின்னர் அதில் கொள்ளையடித்த பொருள்களை எடுத்துச் சென்றுள்ளனர். திருடர்களின் இந்தச் சோம்பேறித்தனத்தால் சிக்கிக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். ட்ராலி சூட்கேஸை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கொள்ளையன் ஒருவன் நள்ளிரவில் இழுத்துச் சென்ற சம்பவம்தான் இந்தக் கொள்ளைச் சம்பவம் துப்பு துலங்க முக்கிய காரணமாக அமைந்ததாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு