Published:Updated:

`16 வயதில் தொடங்கிய திருட்டு; 200 வழக்குகள்!' - போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னைக் கொள்ளையன்

கமலக்கண்ணன்
கமலக்கண்ணன்

சென்னையைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் கமலக்கண்ணனின் க்ரைம் ஹிஸ்ட்ரி சற்று வித்தியாசமானது.

சென்னை செம்மஞ்சேரி குமரன் நகரில் தொழிற்சாலை நடத்திவருபவர் சரவணன் (36). இவரின் சொந்த ஊர் புதுக்கோட்டை. ஊரடங்கு காரணமாக சரவணன், தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தொழிற்சாலையில் கொள்ளைச் சம்பவம் நடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர்.

தொழிற்சாலை
தொழிற்சாலை

தொழிற்சாலையிலிருந்து 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்பு, பித்தளை கொள்ளை போனதாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான டீம், தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தது. அப்போது 2 பேர், தொழிற்சாலைக்குள் நுழைவதும் பிறகு சாக்குமூட்டையில் செம்பு, பித்தளைகளை எடுத்துச்செல்வதும் தெரியவந்தது.

சிசிடிவி பதிவுகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு ஆர்ச் அருகே 2 பேர் சாக்கு மூட்டையுடன் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற போலீஸார், இருவரிடமும் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். அவர்கள் வைத்திருந்த சாக்குமூட்டையை போலீஸார் பிரித்துப் பார்த்தபோது, அதில் செம்பு, பித்தளை இருந்துள்ளது. அதுதொடர்பாக விசாரித்தபோது, தொழிற்சாலையில் திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதிக விலைக்கு விற்பனை; லட்சக்கணக்கில் கொள்ளை.. திமுக புகாருக்கு அரியலூர் சிமென்ட் ஆலை சொல்வது என்ன?

பின்னர், இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்றுவாரியத்தில் குடியிருக்கும் கமலக்கண்ணன் (51) என்பதும் மற்றொருவர் ரமேஷ் (50) என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்தபோது கமலக்கண்ணனின் க்ரைம் ஹிஸ்ட்ரியைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

கமலக்கண்ணன் குறித்து, நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``கமலக்கண்ணன், தன்னுடைய 16-வது வயதிலிருந்து திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். வீடுகளில் புகுந்து நகைகளைக் கொள்ளையடித்து வந்த கமலக்கண்ணன், சமீபகாலமாக இரும்பு தொழிற்சாலைகளில் கைவரிசை காட்டிவருகிறார். இவர்மீது ஆந்திரமாநிலத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன" என்றார்.

அதிர்ச்சியடைந்த உரிமையாளர் சரவணன்!

தன்னுடைய தொழிற்சாலையில் கொள்ளையடித்தவர்களை போலீஸார் பிடித்துவிட்ட தகவலைக் கேள்விப்பட்டதும், செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்குச் சென்று, கொள்ளையடித்தவர்களில் கமலக்கண்ணனைப் பார்த்ததும் சரவணன் அதிர்ச்சியில் உறைந்தார். ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன், தொழிற்சாலையின் முன்பாக கமலக்கண்ணன் அமர்ந்திருந்துள்ளார்.

பின்னர், அங்கு நீண்ட நேரமாக நோட்டமிட்ட கமலக்கண்ணன், உணவு பார்சல் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது, சரவணனிடம்தான் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீரை சரவணன் கொடுத்ததும் அதைக் குடித்துவிட்டு, தேங்க்ஸ் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். தொழிற்சாலையில் கொள்ளையடிக்க நோட்டமிடத்தான் அங்கு சென்றதாக போலீஸாரிடம் கமலக்கண்ணன் கூறியுள்ளார்.

பக்கா பிளானிங்... மரத்தில் கயிறுகட்டி கோயிலில் கொள்ளை... வெளியான சிசிடிவி காட்சிகள்!

கமலக்கண்ணன் தொழிற்சாலையில் கொள்ளையடித்துவிட்டு சென்றபோது, மெயின் கேட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அது ஏன் என்று போலீஸார் அவரிடம் கேட்டதற்கு, உள்ளே விலைஉயர்ந்த மெஷின்கள் உள்ளன. அதை யாராவது திருடிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான் பூட்டினேன் என்று கூறியுள்ளார். அதைக்கேட்ட போலீஸாருக்கு தலைசுற்றியுள்ளது. பின்னர் கமலக்கண்ணன், ரமேஷ் ஆகியோரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.

கமலக்கண்ணன் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை செம்மஞ்சேரி போலீஸார் சேகரித்துவருகின்றனர். 16 -வயதில் குற்றச் செயல்களைத் தொடங்கிய கமல்கண்ணனுக்கு சிறை வாழ்க்கை என்பது புதியதல்ல. ஒவ்வொரு வழக்கிலும் சிறைக்குச் செல்லும் அவர், வெளியில் வந்ததும் மீண்டும் திருடிவிட்டு ஜெயிலுக்குச் சென்றுவிடுவார். அதனால் அவர் வெளியில் இருந்த நாள்கள் குறைவு என்கின்றனர் போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு