Published:Updated:

`அழகர்சாமிக்குக் கொரோனா வந்துருச்சு...!' - புதுக்கோட்டையில் வாட்ஸ்அப் வதந்தியால் சிக்கிய 2 பேர்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டையில் ஒருவருக்கு கொரோனா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளில் மாநில அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அதேநேரம், வதந்திகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை லஞ்சமேட்டைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகன் அழகர்சாமி (28). விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கொரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும், `நமக்கு பக்கத்திலேயே கொரோனா வந்திருச்சு‘ என்று வாட்ஸ்அப் குழுவில் அழகர்சாமியுடன் பணியாற்றும் சிலர் பதிவிட்டிருக்கின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதைக் கவனித்த முத்துக்குமார் என்பவர் அழகர்சாமியிடம் இதுபற்றி விசாரிக்க, அதிர்ச்சியடைந்த அழகர்சாமி, ` எனக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை' என்று கூறியிருக்கிறார். இறுதியில் அழகர்சாமியின் வாட்ஸ்அப் எண்ணுக்கும் அந்தத் தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அழகர்சாமி விராலிமலை போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், வதந்தி பரப்பியதாக ஐயப்பன் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி போலீஸார் கூறும்போது, ``கொரோனா காய்ச்சலின் தீவிரம் தெரியாமல் பலரும் இதுபோன்ற வீண் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை மற்றும் அரசு சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வைரஸ் பரவலைத் தடுக்க இதுபோன்ற வீண் வதந்திகள் பரப்புவதைத் தவிர்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்கின்றனர்.

நம்மை மட்டும் அல்ல... AI-யையும் நெருக்குகிறது கொரோனா! #LongRead
அடுத்த கட்டுரைக்கு