Published:Updated:

` இளைஞர்களிடம் இருந்து சிறுமியை மீட்ட சகோதரர்!' - சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த மோதல்

சிறுமி கடத்தல்
சிறுமி கடத்தல் ( மாதிரி படம் )

சென்னையில் சிறுமியைக் கடத்திய வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பெண்ணை ஆயிரம் விளக்கு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே காரில் 14 வயது சிறுமி ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் அருகில் 2 இளைஞர்கள் இருந்தனர். இந்தச் சமயத்தில் சிறுமியின் அண்ணன், காரில் அவ்வழியாக வந்துள்ளார். அப்போது தங்கையைப் பார்த்ததும், `ஏன் இங்கு இருக்கிறாய்?' என்று விசாரித்துள்ளார். அப்போது அவருடன் அமர்ந்திருந்த இளைஞர்கள், `இவள் எங்களுடைய கஸ்டடியில் இருக்கிறாள்' என்று கூறியுள்ளனர். அதைக் கேட்டு சிறுமியின் அண்ணன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

representational image
representational image
`என் அன்பைப் புரியவைக்க இப்படிச் செய்துவிட்டேன்!’- கடத்தல் வழக்கில் சிக்கிய சென்னை மாணவர்

இதையடுத்து, சிறுமியின் அண்ணனுக்கும் அந்த 2 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் சிறுமியை அவர்கள் இருவரும் காரில் கடத்திச் சென்றனர். அவர்களை சிறுமியின் அண்ணன் காரில் பின்தொடர்ந்தார். காரில் விரட்டியப்படியே காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு சூளைமேடு போலீஸார் விரைந்தனர். சிறுமியைக் கடத்திய காரை போலீஸாரும் சிறுமியின் அண்ணனும் சினிமா பாணியில் மடக்கினர். அப்போது காரிலிருந்த இளைஞர்கள் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவர் தப்பி ஓட இன்னொருவர் சிக்கிக் கொண்டார்.

இதையடுத்து சிறுமியையும் அவரைக் கடத்த முயன்ற இளைஞரையும் சூளைமேடு போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர். அப்போதுதான் சிறுமியை எதற்காக கடத்தினார்கள் என்ற தகவல் தெரியவந்தது. சிறுமி தரப்பில் காவல் நிலையத்தில் எந்தப் புகாரும் கொடுக்கப்படவில்லை. அதனால் சூளைமேடு போலீஸார் சிறுமியைக் கடத்திய இளைஞர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், சிறுமி கடத்தப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளியானது.

representational image
representational image
``பிரியாணி, ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்து மாணவன் கடத்தல்!" - போதையில் தூங்கியதால் சிக்கிய டிரைவர்

இதுகுறித்து சென்னைப் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிந்ததும் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து, சிறுமியைக் கடத்திய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். இளைஞரின் நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர். கைதானவரின் பெயர் பிரகாஷ் என விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமி விவகாரம் என்பதால் இந்த வழக்கு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம், சிறுமியிடம் முதலில் விசாரித்தார். பின்னர், சிறுமியைக் கடத்திய பிரகாஷிடம் விசாரணை நடத்தினார். அப்போது, சிறுமியை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மூலம் அழைத்துவந்த தகவலை பிரகாஷ் தெரிவித்தார். இதனால் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பெண்ணையும் போலீஸார் இன்று பிடித்தனர். அவரிடம் விசாரணை நடந்துவருகிறது.

representational image
representational image
மாதிரி புகைப்படம்

இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீஸார் கூறுகையில், ``சென்னையைச் சேர்ந்த அந்தச் சிறுமிக்கும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஏற்கெனவே பழக்கம் உள்ளது. அதனால் அந்தப் பெண் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாக சிறுமியின் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டதற்கு ஏற்கெனவே 2 தடவை சிறுமி இரவு நேரத்தில் மாயமான தகவலை அவர்கள் தெரிவித்தனர். சம்பவத்தன்று வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணிடம் பணம் கொடுத்து பிரகாஷ், அவரின் நண்பர் பைசல் ஆகியோர் சிறுமியை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே யதேச்சையாக சிறுமியை அவரின் அண்ணன் பார்த்தபோதுதான் இந்தத் தகவல் வெளியில் தெரியவந்துள்ளது" என்றனர்.

சிறுமியைக் கடத்திய சம்பவத்தில் போக்ஸோ சட்டத்தின்கீழ் ஆயிரம் விளக்குப் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு