Published:Updated:

`பெயின்டிங் வேலை; ஒப்பந்ததாரர் மீதான கோபம்!' -விக்ராந்த் போர்க் கப்பலில் கைவரிசை காட்டிய இருவர்

ஐ.என்.எஸ் விக்ராந்த்
ஐ.என்.எஸ் விக்ராந்த்

ஒப்பந்ததாரர் பணியிலிருந்து நீக்கியதால், அவரைப் பழிவாங்கும் நோக்கில் இந்த திருட்டுச் சம்பவத்தை நடத்தியதாகக் கைதுசெய்யப்பட்ட இருவரும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியா இதுவரை சொந்தமாக போர்க் கப்பல் தயாரிக்கவில்லை என்ற குறையைப் போக்க, சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பாக ஐ.என்.எஸ் விக்ராந்த் என்ற போர்க்கப்பல் உருவாக்கப்பட்டது.

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், கடந்த 1999-ம் ஆண்டு இந்தக் கப்பலின் டிசைன் வடிவமைக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு, கேரள மாநிலம் கொச்சின் ஷிப் யார்டில் கப்பலின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. அப்போதைய, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, கட்டுமானப்பணியைத் தொடங்கிவைத்தார். கிட்டத்தட்ட 252 மீட்டர் நீளத்தில் 60 மீட்டர் அகலத்தில் இந்தக் கப்பல் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுவருகிறது.

கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்தபோதே, இந்த போர்க்கப்பலில் இருந்து ஐந்து கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள், ஐந்து மைக்ரோ ப்ராசஸர்கள் மற்றும் கேபிள் உள்ளிட்டவைகள் கடந்த ஆண்டு கொள்ளை போன சம்பவம், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி, இந்த திருட்டு குறித்து அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

அந்த ஹார்ட் டிஸ்க்கில் இருந்து இந்திய ராணுவ ரகசியங்கள் திருடப்பட்டதாக அப்போது விவாதம் எழுந்தது. ஆனால், அதில் போர்க் கப்பலின் பல பாகங்களை ஒருங்கிணைத்துக் கட்டுப்படுத்தும் ஐ.பி.எம்.எஸ் என்ற தொழில் நுட்பத் தகவல்கள் இருந்ததாகக் கூறப்பட்டது.

ஐ.என்.எஸ் விக்ராந்த்
ஐ.என்.எஸ் விக்ராந்த்

நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து கொச்சி போலீஸார் முதலில் விசாரணை நடத்தினர். கேரள ஐ.பி அறிக்கையின் அடிப்படையில் இந்திய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், இதுகுறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தியது. ஹார்ட்டிஸ்க் திருடுபோன சமயத்தில் கப்பலில் வேலை செய்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைவரின் கைரேகை அடையாளங்களும் பதிவுசெய்யப்பட்டன.

20,000 கோடி செலவு... 24 ஆண்டுகள் உழைப்பு! சிக்கலில் ஐ.என்.எஸ் விக்ராந்த் #INSVikrant

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விரல் அடையாளத்தின் அடிப்படையில் இரண்டுபேர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரையும், பீகாரைச் சேர்ந்த ஒருவரையும் என்.ஐ.ஏ அமைப்பு பீகாரில் வைத்து கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் கப்பலில் பெயின்டிங் பணிக்காக வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

ஒப்பந்தப் பணியாளர்களான இவர்களை ஒப்பந்ததாரர் பணியில் இருந்து நீக்கியதால், அவரைப் பழிவாங்கும் நோக்கில் இந்த திருட்டுச் சம்பவத்தை நடத்தியதாக, கைதுசெய்யப்பட்ட இருவரும் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹார்ட் டிஸ்க்கில் உள்ள ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளனவா அல்லது மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும், ஹார்ட் டிஸ்க்கில் உள்ள ஆவணங்கள் வேறு யாருக்கேனும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா எனது குறித்தும் என்.ஐ.ஏ விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐ.என்.எஸ் விக்ராந்த்
ஐ.என்.எஸ் விக்ராந்த்
பைல் படம்

இந்தக் கப்பல், வருகிற 2021-ம் ஆண்டு முதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 2023-ம் ஆண்டுக்குள் விக்ராந்த்தை கடற்படையில் இணைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தக் கப்பலை கடற்படையில் இணைக்கும்பட்சத்தில், ஒரேநேரத்தில் இரு விமானம் தாங்கிக் கப்பல்கள் கொண்ட கடற்படை என்ற பெருமையை இந்தியா பெறும். இந்தியக் கடற்படையும் அசுரபலம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு