Published:Updated:

`வாரன்டைக் காட்டுங்கள்!' - டிக்கெட் கேட்ட அரசு பஸ் கண்டக்டரைத் தாக்கிய காவலர்கள்

``டிக்கெட் எடுங்கள் அல்லது வாரன்டை காட்டுங்கள் என காவலர்களிடம் கூறினேன். ஒருமையில் பேசிய அவர்கள் திடீரென என்னை தாக்கினர்.''

கண்டக்டரை தாக்கும் காவலர்கள்
கண்டக்டரை தாக்கும் காவலர்கள்

நாகர்கோவில் ராணித்தோட்டம் டிப்போவிலிருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்து குமுளியிலிருந்து நாகர்கோவிலுக்கு நேற்று மாலை வந்துகொண்டிருந்தது. திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிவிட்டு நாகர்கோவில் நோக்கிப் பயணித்தது.

போலீஸார்- கண்டக்டர் வாக்குவாதம்
போலீஸார்- கண்டக்டர் வாக்குவாதம்

அப்போது பஸ்ஸில் ஏறிய நெல்லை ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள் மகேஷ், தமிழரசன் ஆகியோர் டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளனர். `டிக்கெட் எடுக்காமல் இருந்தால் நீங்கள் பேருந்தில் பயணிப்பதற்கான வாரன்டை காட்டுங்கள்' என நடத்துநர் ரமேஷ் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காவலர்கள் பேருந்து நடத்துநரை திட்டியதுடன், அவரைத் தாக்கியுள்ளனர். இதனால் அவரது இடது கண்ணுக்கு மேல் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பேருந்தை மூன்றடைப்பு காவல்நிலையத்துக்கு விடும்படி பயணிகளும் கண்டக்டரும் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து மூன்றடைப்பு காவல் நிலையத்தில் நடத்துநர் ரமேஷ் புகார் கொடுத்தார். மேலும், அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

தாக்குதலுக்குள்ளான கண்டக்டர்
தாக்குதலுக்குள்ளான கண்டக்டர்

இதற்கிடையில், பேருந்தில் காவலர்கள் இருவர் நடத்துநரை தாக்கும் காட்சியை பயணி ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ இணையதளங்களில் வைரலானது.

இதைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டனர். மூன்றடைப்பு காவல்நிலைய போலீஸார் ஆயுதப்படையைச் சேர்ந்த மகேஷ், தமிழரசன் ஆகியோரை கைது செய்தனர்.

கண்டக்டரை தாக்கிய போலீஸ்
கண்டக்டரை தாக்கிய போலீஸ்

இதுகுறித்து பேருந்து நடத்துநர் ரமேஷ் கூறுகையில், ``டிக்கெட் எடுங்கள் அல்லது வாரன்டை காட்டுங்கள் என காவலர்களிடம் கூறினேன். அவர்கள் எங்கு செல்கிறோம் என்று கூறவில்லை. ஒருமையில் பேசிய அவர்கள் திடீரென என்னைத் தாக்கினர்" என்றார் வேதனையுடன்.