Published:Updated:

`காரணம்தான் கேட்டேன், அடித்துவிட்டார்கள்!’- கைதிகள் தாக்கியதால் கலங்கும் புழல் சிறை எஸ்.பி.

சத்யா கோபாலன்

சென்னை புழல் சிறையில் உள்ள இரண்டு கைதிகள் ஒன்றுசேர்ந்து, சிறை கண்காணிப்பாளரைத் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

puzhal prison
puzhal prison

சென்னை புழல் சிறையின் புதிய கண்காணிப்பாளராக ஓராண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்டார் எஸ்.பி செந்தில்குமார். இவர் புழல் சிறைக்கு வந்த நாளில் இருந்தே கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தவறே செய்யாத கைதிகள் மீது நடவடிக்கை எடுப்பது, மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளுடன் சேர்த்து சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளே எஸ்.பி-யை கடுமையாகக் கண்டித்த சம்பவமும் அரங்கேறியது.

puzhal prison
puzhal prison

இந்நிலையில், நேற்று முன்தினம் எஸ்.பி செந்தில் குமாருக்கும் இரண்டு கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த குறைகேட்கும் கூட்டத்தில் சிறைக் கைதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய இருவரும் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது. `எதற்காக கலந்துகொள்ளவில்லை? என விசாரணை செய்யச் சென்றபோதுதான் எஸ்.பி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புழல் சிறையிலிருந்து வந்த தகவலின் படி, ‘ பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் ஆகியோரிடம் விசாரணை நடத்த எஸ்.பி செந்தில்குமார் சென்றிருக்கிறார். விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே எஸ்.பி-க்கும், கைதிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் உச்சகட்டமாக எஸ்.பி-யை பிடித்துக் கீழே தள்ளித் தாக்கியுள்ளனர்’ என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

எஸ்.பி-யை தாக்கியதால், இருவரின் மீதும் அரசு அதிகாரிகளைக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கடுமையான முறையில் நடந்துகொண்டதால் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கொதித்த சம்பந்தப்பட்ட கைதிகள் இருவரும் சிறைக்குள்ளேயே உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாகவும் சிறைக் கைதிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

 prison
prison

தாக்குதல் சம்பவம் தொடர்பாக எஸ்.பி செந்தில்குமாரிடம் பேசினோம். “ ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் எஸ்.பி தலைமையில் கைதிகள் குறைகேட்கும் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். கடந்த வாரம் நடத்தப்பட்ட கூட்டத்திலும் இவர்கள் இருவரும் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்திலும் இவர்கள் கலந்துகொள்ளவில்லை. என்ன காரணம் என அறிந்துகொள்ள அவர்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாக்குக்குச் சென்றேன்.

``70 கைதிகள் உண்ணாவிரதமா?'' - புழல் சிறை எஸ்.பி-யைச் சுற்றும் புதிய சர்ச்சை!

என்னைப் பார்த்ததும் அவர்கள் ஆபாசமாகப் பேசத் தொடங்கிவிட்டனர். பின்னர் தாக்க முயன்றனர். அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் அறைக்குள் சென்று சோதனை நடத்தினேன். அவர்களோ, சத்தமாகக் கத்திக் கொண்டே என்னைக் கீழே தள்ளிவிட்டுத் தாக்கத் தொடங்கிவிட்டனர். சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார் இயல்பாக.

arrest
arrest

எஸ்.பி-யைத் தாக்கிய கைதிகள் பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகிய இருவரின் மீதும் 2011-ம் ஆண்டு மதுரை, திருமங்கலம் அருகே பைப் குண்டு வீசி பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியைக் கொல்ல முயற்சி செய்தது, மாநிலத்தில் தொடர் கொலைகளில் ஈடுபட்டது போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2013-ம் ஆண்டு சிபிசிஐடி போலீஸார் இவர்களைக் கைது செய்தனர். புழல் சிறையில் அதிக பாதுகாப்புகொண்ட அறையில் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளே ஒன்று சேர்ந்து எஸ்.பி-யைத் தாக்கிய சம்பவம், சிறைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.