சென்னை: போலீஸ் பிடியிலிருந்து தப்பிய 2 இளைஞர்கள் - செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் கொடுத்த அதிர்ச்சி

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை போலீஸார் அழைத்துச் சென்றபோது அவர்களில் இரண்டு பேர் தப்பிச் சென்றனர்.
சென்னை பெரம்பூர் பி.பி.சாலையில் வசித்துவருபவர் ரத்தினக்குமார். இவரின் மனைவி சுபாஷினி. இவர், நேற்று காலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள், சுபாஷினி கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளைப் பறித்துச் சென்றனர். அதனால் அதிர்ச்சியடைந்த சுபாஷினி, செம்பியம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீஸார் செயின் பறிப்பு திருடர்களைத் தேடிவந்தனர். அதற்காக சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

போலீஸ் விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது வியாசர்பாடியைச் சேர்ந்த அஜித், ராஜேஷ், புளியந்தோப்பைச் சேர்ந்த ஆகாஷ் எனத் தெரிந்தது. அவர்களைப் பிடித்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் புளியந்தோப்பு பகுதியிலுள்ள அடகுக்கடையில் செயினை அடகுவைத்த தகவலைத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் போலீஸ் வாகனத்தில் அழைத்துக்கொண்டு அடகுக் கடைக்கு போலீஸார் சென்றனர். அப்போது அஜித்தும் ஆகாஷும் போலீஸாரைத் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீஸார் விரட்டினர். ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து அஜித், ஆகாஷ் தப்பி ஓடிய தகவல் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அனைவரும் அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தப்பியோடிய இருவரும் எங்கு சென்றார்கள் என்பதை சிசிடிவி மூலம் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கவனக்குறைவாகச் செயல்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகிவருகின்றன. இந்தச் சம்பவங்களில் ஈடுபடுவோர் அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். மேலும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் போலீஸாருக்கு தலைவலி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சிசிடிவி-க்கள் இருப்பதால் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பில் ஈடுபடுவோர்களை உடனுக்குடன் கைது செய்வது மட்டும் போலீஸாருக்கு ஆறுதல் தரும் விஷயமாக இருந்துவருகிறது.